சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் சொத்து விவரத்தை பார்த்தேயாகனும்.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

சொத்து குவித்துள்ள கவுன்சிலர்கள் விவரத்தை அறியும் நோக்கில் அதுகுறித்த விவரத்தை கேட்டுள்ளது சென்னை ஹைகோர்ட்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை தேர்தல் ஆணையம், ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்தவர் பொன்.தங்கவேலு. இவர் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு மனுவில் கூறியிருந்ததாவது: சென்னையில் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கன மழையினால், மாநகரமே வெள்ளக்காடானது. இதற்கு காரணம், மாநகராட்சியின் ஊழல் முறைகேடு மற்றும் நிர்வாக சீர்கேடுதான்.

எனவே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்குங்கள் என்று மாநகராட்சி மேயர், கமிஷனர் ஆகியோரிடம் நான் மனு வழங்கினேன். ஆனால், சென்னை மாநகராட்சிக்கு போதிய வருவாய் இல்லை என்பதால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது என்று பதில் அளித்தனர்.

ஆனால் நான் ஆய்வு நடத்தி ஒரு உண்மையை கண்டறிந்தேன். மாநகராட்சிக்கு எவ்வளவு வருவாய் வர வேண்டும் என்ற முடிவுகள் கூட, மாநகராட்சி கவுன்சிலர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில்தான் முடிவு செய்யப்படுகிறது என்பது அப்போதுதான் தெரியவந்தது.

இவ்வளவுதான் சொத்து வரியா

சென்னை மாநகராட்சியின் 196வது வார்டு கவுன்சிலராக இருக்கும் அண்ணாமலை, ஈஞ்சம்பாக்கம் தேவி நகரில் உள்ள ஒரு கட்டிடத்துக்கு சொத்து வரியாக வெறும் ரூ.55ம், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் உள்ள வீட்டிற்கு ரூ.110ம், ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் உள்ள 3 வீடுகளுக்கு தலா ரூ.55ம், ஈஞ்சம்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவில் உள்ள 2 வீடுகளுக்கு தலா ரூ.1,940ம், திருவள்ளுவர் சாலையில் உள்ள வீட்டிற்கு ரூ.110ம், சோழிங்கர், எம்.ஜி.ஆர். நகரில் உள்ள வீட்டிற்கு ரூ.3,650 என்று சொத்து வரி செலுத்தியுள்ளார்.

கவுன்சிலர்களே இப்படியென்றால்..

இந்த சொத்துகளுக்கு எல்லாம் அதிகாரிகளை நிர்பந்தம் செய்து குறைவான வரியை நிர்ணயம் செய்ய வைத்துள்ளார். மாநகராட்சியின் வருவாய் ஆதாரத்தை கவுன்சிலர்களே இப்படி கெடுத்தால் எப்படி மாநகராட்சிக்கு வருவாய் வரும்? எனவே, கவுன்சிலர் அண்ணாமலையின் சொத்துக்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொத்து வரிகள் அனைத்தையும் ரத்து செய்து, மீண்டும் ஆய்வு செய்து, சட்டப்படி தகுந்த வரியை நிர்ணயம் செய்யவேண்டும் என்று சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு 2 முறை மனு கொடுத்தேன். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

வரியை மறு ஆய்வு செய்க

எனவே, கவுன்சிலரின் சொத்துக்களுக்கு விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்து மீண்டும் வரியை நிர்ணயிக்கும்படி சென்னை மாநகராட்சி ஆணையர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தென்சென்னை வரி நிர்ணய புலனாய்வு பிரிவு இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நீதிபதி ஆச்சரியம்


இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுன்சிலர் அண்ணாமலையின் 12 வீடுகளின் புகைப்படத்தையும் மனுதாரர் கோர்ட்டில் தாக்கல் செய்தார். இதை பார்த்த நீதிபதி ஆச்சரியமும், அதிர்ச்சியுமடைந்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கவுன்சிலர் வீடுகள் எல்லாம் அரண்மனை போல உள்ளது. ஆனால், அந்த வீட்டிற்கு சொத்து வரி வெறும் ரூ.55, ரூ.110 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சொத்து விவரம்

கவுன்சிலர்கள் எல்லோரும் எவ்வளவு தீவிரமாக பொது சேவையை செய்துள்ளனர் என்பதை இந்த வீட்டை பார்த்தாலே தெரிகிறது. 2006, 2011 ஆகிய ஆண்டுகளில் நடந்த மாநகராட்சி தேர்தலில், வெற்றிப் பெற்ற கவுன்சிலர்களின் சொத்து விவரங்களை வருகிற வெள்ளிக்கிழமை, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு

 

கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருந்தது. இந்த தேர்தலில், போட்டியிட பழைய கவுன்சிலர்கள் மீண்டும் வேட்புமனுவை தாக்கல் செய்திருப்பார்கள் என்பதால் அதிலுள்ள சொத்து விவரங்களையும், மாநில தேர்தல் ஆணையம் ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி, கிருபாகரன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

English summary
Chennai corporation councillors asset details have to be submitted in the High court by the election commission.
Please Wait while comments are loading...