For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலலிதாவை எதிர்க்கும் முதல் பெண் திமுக வேட்பாளர் சிம்லா.. சென்னை மாவட்ட வேட்பாளர்கள் பயோடேட்டா

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிடும் முதல் பெண் திமுக வேட்பாளர் என்ற பெருமை சென்னை ஆர்.கே.நகரில் போட்டியிடும் சிம்லா முத்துசோழனுக்குக் கிடைத்துள்ளது.

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். பல பெருந்தலைகளையும் திமுக சென்னையில் களம் இறக்கியுள்ளது.

சென்னை மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா:

சிம்லா முத்துச்சோழன்

முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் அவரை எதிர்த்துப் போட்டியிடுகிறார் சிம்லா. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சற்குணத்தின் மருமகள். 13 வருடமாக திமுகவில் செயல்படுகிறார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் முதல் திமுக பெண் வேட்பாளர் என்ற பெருமை பெற்றவர் சிம்லா. வழக்கறிஞராக செயல்படும் சிம்லா, மாஸ் என்ற பெயரில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இவரது கணவர் முத்துசோழன், வழக்கறிஞராகவும், வடசென்னை கலை, இலக்கிய, பகுத்தறிவு பேரவையின் முன்னாள் அமைப்பாளராகவும் இருந்துள்ளார்.

மு.க. ஸ்டாலின்

கொளத்தூர் தொகுதியில் 2வது முறையாக போட்டியிடுகிறார் மு.க.ஸ்டாலின். திமுகவில் பொருளாளராக இருக்கிறார். முன்பு ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு வந்தார். கடந்த தேர்தலில் கொளத்தூருக்கு இடம் மாறினார்.

பி.கே.சேகர்பாபு

வட சென்னையின் அசைக்க முடியாத அதிமுக தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர் சேகர்பாபு. 2001, 2006 தேர்தல்களில் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வெற்று எம்.எல்.ஏவாகவும் இருந்தவர். 2011ம் ஆண்டு திமுகவில் இணைந்து செயல்பட்டு வரும் அவர் துறைமுகம் தொகுதியில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

ஜெ. அன்பழகன்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் ஜெ. அன்பழகன். இவரது தந்தை பழக்கடை ஜெயராமன் திமுகவின் முக்கியத் தூண்களில் ஒருவராக திகழ்ந்தவர். பரம்பரை திமுககாரரான அன்பழகன், கடந்த 2001 தேர்தலில் தி.நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

மா.சுப்ரமணியன்

வழக்கறிஞரான மா.சுப்ரமணியன், சென்னை மாநகராட்சி மேயராக வலம் வந்தவர். சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு முன்பு தோல்வியைச் சந்தித்தவர். தற்போது மீண்டும் அதே சைதை தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார். இவரது சொந்த ஊரா வாணியம்பாடி ஆகும். 5ம் வகுப்பை முடித்த நிலையில் சென்னைக்கு வந்தவர் மா.சு என செல்லமாக அழைக்கப்படும் சுப்ரமணியன். அக்கா, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தவர்.

டாக்டர் எஸ்.என். கனிமொழி

சென்னை: மறைந்த முன்னாள் திமுக எம்.பி. என்.வி.என்.சோமுவின் மகள் டாக்டர் என்.வி.என். கனிமொழி தி.நகரில் திமுக சார்பில் போட்டியிடவுள்ளார். வட சென்னை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் 1984, 1996 ஆகிய ஆண்டுகளில் எம்.பியாக இருந்தவர் சோமு. மறைந்த திமுக தலைவர் என்.வி. நடராஜனின் மகன். நடராஜன் மத்திய அமைச்சராக இருந்தவர். சோமுவின் மகள்தான் டாக்டர் கனிமொழி. சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்தவர் கனிமொழி. தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

நடிகர் சந்திரசேகர்

நடிகர் சந்திரசேகர் திரைப்பட நடிகர் ஆவார். 70களின் இறுதியில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து முத்திரை பதித்தவர் சந்திரசேகர். நடிகர் சங்கத்திலும் பொறுப்பு வகித்துள்ளார். சிறந்த பேச்சாளராகவும் வலம் வருபவர் சந்திரசேகர். நீண்ட காலமாக திமுகவில் செயல்பட்டு வரும் அவர் திமுக தலைவர் கருணாநிதி வேடத்தில், பெரியார் படத்தில் நடித்துள்ளார். முதல் முறையாக அவர் சட்டசபைத் தேர்தலில் வேளச்சேரி தொகுதியில் போட்டியிடுகிறார்.

பி.ரங்கநாதன்

நீண்ட காலமாக சட்டசபை உறுப்பினராக இருந்து வருபவர் பி.ரங்கநாதன். முன்பு புரசைவாக்கம் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் 1991, 96 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்று உறுப்பினராக இருந்தார். பின்னர் திமுகவில் இணைந்து 2001 தேர்தலில் திமுக சார்பில் எம்எல்ஏ ஆனார். 2006 தேர்தலில் அவர் வில்லிவாக்கம் தொகுதிக்கு மாறினார். தற்போது மீண்டும் வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார் ரங்கநாதன்.

தாயகம் கவி

தாயகம் கவி எனப்படும் சிவக்குமார் திரு.வி.க நகர் தனித் தொகுதி திமுக வேட்பாளராக களம் கண்டுள்ளார். வழக்கறிஞர் இவர். முதல் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். தனது முதல் சுற்றுப் பிரசாரத்தையே தொகுதியில் முடித்து விட்டிருக்கிறார் இந்த சுறுசுறுப்புத் திலகம்.

கு.க. செல்வம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காண்கிறார் கு.க. செல்வம். முன்பு மு.க.ஸ்டாலின் உறுப்பினராக இருந்த தொகுதி இது. ஆரம்ப காலத்தில் அதிமுகவில் இருந்தவர் செல்வம். அப்போது அவரும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தற்போது செல்வத்திற்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள அமைச்சர் பா. வளர்மதியும் ஒன்றாக இணைந்து செயல்பட்டவர்கள். 8ம் வகுப்பு வரை படித்துள்ளார் செல்வம். வயது 63 ஆகிறது.

க.தனசேகரன்

விருகம்பாக்கம் தொகுதியில் களம் இறக்கப்பட்டுள்ளார் க.தனசேகரன். பிஏ படித்தவரான தனசேகரன், கவுன்சிலராக சென்னை மாநகராட்சியைக் கலக்கியவர். கே.கே.நகரில் வசித்து வருகிறார். கடந்த 2011 தேர்தலில் விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியிடம் தோற்றுப் போனார். தற்போது மீண்டும் களம் கண்டுள்ளார்.

எம்.கே. மோகன்

அண்ணா நகர் தொகுதியில் போட்டியிடுகிறார் எம்.கே.மோகன். முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர். அனைவரிடமும் எளிமையாக பழகக் கூடியவர் அவர். தொகுதி முழுக்க இவருக்கு நல்ல பெயர் உள்ளது. இங்கு அதிமுக சார்பில் கோகுல இந்திரா போட்டியிடுகிறார். அவருக்கு மோகன் கடுமையான போட்டியாக இருப்பதாக கூறப்படுகிறது.

கே.எஸ்.ரவிச்சந்திரன்

எழும்பூர் தனி தொகுதியில் போட்டியிடுகிறார் கே.எஸ். ரவிச்சந்திரன். பி.எஸ்.ஸி, பிஎல் படித்துள்ள இவர் திமுகவில் சட்டத்துறை துணைச் செயலாளராக இருக்கிறார். முதல் முறையாக போட்டியிடுகிறார்.

எஸ்.அரவிந்த் ரமேஷ்

சோழிங்கநல்லூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் அரவிந்த் ரமேஷ். 47 வயதாகும் இவர் 10ம் வகுப்பு வரை படித்துள்ளார். முதல் முறையாக போட்டியிடுகிறார்.

English summary
DMK has fielded a woman candidate against CM Jayalalitha for the first time in its history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X