விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை தொடரும்… சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டம்

விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்வதற்கு மீண்டும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் விவசாய நிலங்களை எல்லாம் சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும் இதனால் விவசாயமும் விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமான வீட்டு மனைகளையும், அந்த மனைகளில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பத்திரப்பதிவு செய்ய கூடாது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி உத்தரவிட்டது.

ரியல் எஸ்டேட்

இந்த உத்தரவை எதிர்த்து ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளையும், வீடுகளையும் வாங்கியவர்கள் என்று பலர் மனுதாக்கல் செய்தனர். இதனால் தங்களது தொழில் பாதிக்கப்படுவதாக அவர்கள் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.

திருத்தம்

இதற்கிடையில், தமிழ்நாடு பத்திரப்பதிவு சட்டத்தில், கொண்டு வரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதன்படி, 2016ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதிக்கு முன்பு பத்திரப் பதிவு செய்த அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகள், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளில் கட்டப்பட்ட வீடுகளை மறுபத்திரப்பதிவு செய்யலாம் என்று கூறப்பட்டது.

கொள்கை முடிவு

ஆனால், இந்த அரசாணையை சென்னை உயர்நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி மகாதேவன் ஏற்காமல், இதுகுறித்து கொள்கை முடிவு எடுத்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

அரசாணை ஏற்பு

நீதிமன்றம் கேட்ட அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில், கடந்த மார்ச் 28ம் தேதி இந்த வழக்கு அப்போதைய தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ், நீதிபதி டீக்காரராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது போது, தமிழக அரசு கடந்த ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறப்பித்த அரசாணையை ஏற்றுக் கொண்டனர்.

நிராகரிப்பு

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் தரப்பில் இந்தத் தளர்வை நீக்கக் கூடாது என்று வாதிடப்பட்டது. அப்போது, எவ்வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் ஏன் தடையை தளர்த்த வேண்டும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பி, அவர்களுடைய வாதத்தை நிராகரித்தனர்.

தடை நீடிக்கும்

இதனை தொடர்ந்து விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்ற தடை தொடரும் என்றும் வீட்டுமனை பத்திரப்பதிவில் ஏற்படுத்தப்பட்ட தளர்வை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டனர். இதனால் வீட்டுமனை பத்திரப்பதிவில் உள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது.

ஒத்தி வைப்பு

இந்தத் தடை தமிழக அரசு விதிகளை உருவாக்கி தாக்கல் செய்யப்படும் வரை தொடரும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கு விசாரணை வரும் மே மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

English summary
Chennai HC has refused to relax ban on unapproved layouts today.
Please Wait while comments are loading...