For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெட்ரோ ரயில் நல்லாயிருக்கு… ஆனா காஸ்ட்லியா இருக்கே!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சாலையோரக்கடையில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டே குடிக்கும் டீயின் விலை 7 ரூபாய் அதிகபட்சம் 10 ரூபாய் என்று வைத்துக்கொள்வோம் அதுவே சரவணபவனில் போய் ஆற அமர உட்கார்ந்து ஃபேன் காற்றில் டீ குடித்தால் ஒரு டீக்கு 30 ரூபாய் கொடுக்க வேண்டும். ஏசி போட்ட ஸ்டார் ஹோட்டல் என்றால் இன்னும் கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும்.

மெட்ரோ ரயிலை தலைப்பில் போட்டுவிட்டு ஏன் டீ கடையைப் பற்றி பேசுகிறோம் என்று யோசிக்கத்தான் தோன்றும். மெட்ரோ ரயில் ஓடத் தொடங்கியதுமே அதன் நன்மைகளைப் பற்றி பேசியவர்களை விட கட்டணத்தைப் பற்றி பேசி அறிக்கை விட்டவர்கள்தான் அதிகம்.

Chennai Metro train beautiful but costly

அதை விட மெட்ரோ ரயிலில் பயணித்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஒரு படி மேலே போய் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைப்போம் என்று கூறியுள்ளார்.

நம்ம ஊரைப் பொருத்தவரை நம் மக்களுக்கு எந்த பொருளுமே நல்லாவும் இருக்கணும் அதே நேரத்தில் விலையும் குறைவா இருக்கணும். அதுபோலத்தான் சென்னைவாசிகளுக்கு மெட்ரோ ரயில் ஜில்லுன்னு சும்மா குளுகுளுன்னு அலுப்பு இல்லாத பயணத்தைத் தருகிறது ஆனால் பர்ஸை பதம் பார்க்கிறதே என்ற கவலையும் இருக்கிறது. டெல்லி, பெங்களூருவை இது காஸ்ட்தான் என்கின்றனர் அங்கே எல்லாம் சென்று மெட்ரோ ரயிலில் பயணித்த முன் அனுபவசாலிகள்.

மெட்ரோ ரயிலின் கட்டணம்

சென்னையில் இயக்கப்பட்டு வரும் ஆலந்தூர் - கோயம்பேடு இடையேயான குறைந்த பட்ச கட்டணம் ரூ.10 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே 10 கி.மீ. தூரத்துக்கு ரூ.40 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெருநகரங்களில் மெட்ரோ ரயில்

சென்னைக்கு முன்னரே கொல்கத்தா, மும்பை, டெல்லி, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

டெல்லி மெட்ரோவில் 9 கி.மீ தூரம் முதல் 12 கி.மீ தூரம் வரையிலான பயணத்திற்கு ரூ.16 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. டெல்லி மெட்ரோவில் 44 கி.மீ. தூரம் பயணித்தால்கூட ரு.30 மட்டுமே செலவாகும்.

மும்பை கட்டணம்

மும்பை நகரில் கட்கோபார் பகுதியில் இருந்து வெர்சோவா வரையிலான 12.5 கி.மீ தூரம் ஒரு வழிப்பயணத்துக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அதுவே, கட்கோபார் - வெர்சோவா - கட்கோபார் பயணத்துக்கு ரூ.60 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு-கொல்கத்தா

பெங்களூரு மெட்ரோ ரயிலில், பாயப்பன்ஹல்லியில் இருந்து எம்.ஜி.ரோடு வரை செல்ல கட்டணம் வெறும் 17 ரூபாய். கட்டணத்தை பொறுத்தவரை, கொல்கத்தா மெட்ரோ ரயிலில் பயணிகள் கட்டணம் மிகக்குறைவாக இருக்கிறது. கொல்கத்தா மெட்ரோவில் அதிகபட்ச கட்டணமே ரூ.25 தான்.

ஜெய்ப்பூரில் கூட குறைவுதான்

ஜெய்ப்பூரிலும் கடந்த மாதம்தான் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. அங்கு அறிமுகச் சலுகையாக அதிகபட்ச கட்டணமாக ரூ.15 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், சென்னையில் மட்டுமே 10 கி.மீ. தூர பயணத்துக்கு ரூ.40 என்ற மிக அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சாமான்யரின் செலவு

சென்னை ஆலந்தூரில் வசிக்கும் நபர் ஒருவர் தினமும் கோயம்பேடு அருகில் உள்ள அலுவலகத்திற்கு வந்து வேலை முடித்து வீடு திரும்ப ஒரு நாளைக்கு 80 ரூபாய் செலவழிக்க வேண்டும். ஞாயிறு தவிர வாரத்துக்கு 6 நாள் வேலை ஒரு மாதத்திற்கு 25 நாட்கள் எனில் அந்த நபர் தனது பயணத்திற்கு 2000 ரூபாய் செலவழிக்க வேண்டும். வீட்டில் இருந்து வாகனத்தில் வந்து ஸ்டேசனில் வண்டியை பார்க் செய்தால் கூடுதலாக ஒரு மாதத்திற்கு 250 ரூபாய் செலவாகும்.

இந்த வசதியிருக்குமா?

அதே நபர் தனது வாகனத்தில் 80 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டு பயணித்தால் மூன்று நாளைக்கு ஆலந்தூரில் இருந்து கோயம்பேடு வந்து சென்று விடலாம். பணம் மிச்சம்தான் ஆனால் போக்குவரத்து நெரிசல், தூசு, புகை, மாசு ஆகியவை போனஸ் ஆக கிடைக்கும். மெட்ரோ ரயிலில் பத்து நிமிடத்தில் ஜம் என்று அலுவலகத்திற்குப் போய் இறங்குவது எப்படி இருக்கும்? வசதி வேண்டும் என்றால் காசு செலவழித்துதான் ஆகவேண்டும் என்கின்றனர் ஒருசாரார்.

பறக்கும் ரயில்

சென்னை பறக்கும் மின்சார ரயிலில் மயிலாப்பூர் ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி செல்வதற்கு கட்டணம் ரூ.5. இதில் அனைத்து தரப்பு மக்களும் பயணிக்கின்றனர். மாணவர்களும் வந்து செல்கின்றனர். ஆனால் சென்னை மெட்ரோ ரயிலில் தொழிலாளர்களோ, மாணவர்களோ பயணிக்க முடியுமா என்பது யோசிக்க வேண்டிய விசயம்.

எல்லோரும் அனுபவிக்கலாமே

வசதிபடைத்தவர்களுக்கு மட்டுமே மெட்ரோ ரயில் என்ற நிலையை மாற்றி நடுத்தர வர்க்கத்தினரையும், அமைப்பு சாரா தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொண்டு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

ஏன் குறைக்க முடியாது?

ஆனால் மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகளோ, சென்னையில் பெரும்பாலான மெட்ரோ இணைப்புகள் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டுள்ளன. இதனால், மின்சாரம், குளிர்சாதன வசதிக்கு அதிக செலவு பிடிக்கும் எனவே மூன்றாண்டுகளுக்கு கட்டண குறைப்பு செய்யமுடியாது என்று தெரிவித்துள்ளனர்.

பல ஆயிரம் கோடி கடன்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ரூ.14 ஆயிரத்து 600 கோடி செலவில் நிறைவேற்றப்படுகிறது. இதில், மாநில அரசு ரூ.3,034 கோடி (20 சதவீதம்), மத்திய அரசு நிதி ரூ.2,920 கோடி (20 சதவீதம்), ஜப்பான் வங்கிக் கடன் ரூ.8,646 கோடி (60 சதவீதம்). வங்கிக் கடனை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திரும்ப செலுத்த வேண்டும் எனவே கட்டணக்குறைப்பு என்பது இப்போதைக்கு இருக்காது என்கின்றனர். அதேநேரத்தில் தமிழக அரசு மனது வைத்தால் ஒருவேளை கட்டணங்கள் குறைய வாய்ப்பு உள்ளது என்றும் கூறியுள்ளனர். அரசு மனது வைக்குமா?

English summary
Chennai Metro train fare the minimum of Rs10 is fine, but the maximum of Rs40 is a bit too much," said AAP worker Sudha, who took the first ride. Metro rail officials reasoned that it was comparable to other metros, and that the comfort and speed justify the ticket price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X