For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மாமனிதர் காமராஜர்... இப்படியும் ஒரு காலமிருந்தது.. ஒரு முதல்வர் இருந்தார்!

By Shankar
Google Oneindia Tamil News

Recommended Video

    அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய காமராஜரின் கடைசி நாட்கள்....வீடியோ

    ஏற்கெனவே படித்ததாகக் கூட இருக்கலாம். ஆனால்.. இன்றைக்கு அவசியம் நினைவு கூறப்பட வேண்டிய சம்பவம் இது. இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட மனிதர், மாமனிதர் இந்த தமிழகத்தை ஆண்டிருக்கிறார். அவரையும் கூட இந்த பாவிகள் தோற்கடித்திருக்கிறார்கள். அந்த பாவத்துக்கான தண்டனையை இன்று தினம் தினம் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை தலை நங்கென்று கொட்டி சொல்ல வேண்டும் என்பதற்காகவே இந்த சம்பவத்தை நினைவுக்குக் கொண்டு வருகிறோம்!

    அப்போது காமராஜர் தமிழக முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார் (பியூன்). சட்டமன்ற ஊறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் முக்கையா தேவர் அறையிலேயே இருப்பார்.

    Chief Minister Kamarajar - A Flashback

    ஒருமுறை 'ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு' என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகிக் காத்திருந்தார்.
    ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் 'ஏன்யா. நான் அவசரமா வெளியில போகணும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா?," என்று எகிறினார் மூக்கையா தேவர்.
    மண்ணாங்கட்டிக்கு கோபம். "என்னங்கய்யா நீங்க... இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு
    100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா," என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி.

    அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துக் காட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். 'அரசாங்க உத்தியோகத்தில் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்," என்று முதல்வர் காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். மூக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.
    என்னவென்று கேட்டார் தேவர். "இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா..." என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார்.

    Chief Minister Kamarajar - A Flashback

    ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று "முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்," என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்.

    மண்ணாங்கட்டி புக் செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். "யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும்?" என்கிறார்.

    "அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா...", என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரைப் பார்க்கிறார். அவருக்கு முதல்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. "எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா" என்கிறார்.

    மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல், "ஐயா, எழுதப் படிக்கத் தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ, நான் பியூனா இருக்ககூடாதான்னு தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க," என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை....

    Chief Minister Kamarajar - A Flashback

    அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். "முதல்வருக்கு போன் செய்தது யார்?" என்றார்கள்.

    "நான்தான் ஐயா" என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி.

    "முதல்வர் உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள்," என்று சொல்லிவிட்டு நின்றார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது
    முதல்வர் காமராசர் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம்.

    மண்ணாங்கட்டி, "ஐயா நீங்களும் வாங்க," என்று அழுகிறார்.

    "பின்னாடியே வருகிறேன். நீ போப்பா," என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

    முதல்வரின் அறையில் உள்ள சோபாவில், கண்ணத்தில் கை வைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

    "நீங்கதான் மண்ணாங்கட்டியா...", என்கிறார்.

    "ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா," என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்குப் பிடிக்காது. அதிகாரிகளைப் பார்க்க, உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள்.

    Chief Minister Kamarajar - A Flashback

    அவரைப் பார்த்து, "வா...வான்னேன். வந்து பக்கதில உட்காரு," என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கித் தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

    மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்துக் கும்பிட்டு, "நான் தப்பு பண்ணிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரிய வைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறு தண்ணியில்லியாமே. சமைக்கலயாமே.... உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க... எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.. எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்கக் கூடாது.
    'இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்'னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதரவு சொல்ல, மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை.

    அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளைப் பார்த்து 'இவரை அழைத்துக்கொண்டு போங்க. 'வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க'ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார்.

    பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி, "போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்," என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

    மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதர்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பி வைத்தார்.

    ஒரு ஏழையின் கண்ணீர் வலி..இன்னொரு ஏழைக்குத்தான் தெரியும். ஆமாம் காமராஜர் ஏழையாகவே, ஏழை மக்களுக்காகவே கடைசி மூச்சுவரை வாழ்ந்தார்.

    இனி இப்படி ஒரு முதல்வர் கிடைப்பாரா? என்பது தமிழகத்தில் நின்று நிலைத்துவிட்ட கேள்வி.

    English summary
    Here is a flashback from late CM Kamarajar's rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X