For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பராசக்தி முதல் பாகுபலி-2 வரை... திரைப்பட எதிர்ப்பும், நசுக்கப்படும் கலைஞர்கள் குரல் வளையும்!

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சென்னை: திரைப்படங்களுக்கான எதிர்ப்பு அரசியல் நீண்ட காலமாக தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தொடர்ந்து வருகிறது. சமீபத்திய பலிதான் பாகுபலி-2.

பாகுபலி இரண்டாம் பாகம் கர்நாடகத்தில் வெளியிடுவதைத் தடை செய்து போராட்டம் நடத்தியது வாட்டாள் நாகராஜ் என்பவரது கன்னட அமைப்பு. ஒரு படம் வெளியானாலோ, வெளியாவதற்கு முன்போ, தயார்நிலையில் இருக்கும்போதோ இப்படி ஏதாவது போராட்டம் நடத்துவது இப்போதைய ஃபேஷன் போல ஆகிவிட்டது.
இது வெறும் ஃபேஷன்தானா, அல்லது அதற்குப் பின்னால் ஏதாவது இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டியுள்ளது.

நமக்கு நினைவு தெரிந்து முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் இப்படி அமைப்புகளிடமிருந்து பெரிய எதிர்ப்புகள் திரைப்படங்களுக்கு வந்ததில்லை. அரசுக்கு எதிரான கருத்துகள் இருந்தாலோ, தேசத்துக்கு எதிராக அமைந்திருந்தாலோ அரசாங்கமே படத்துக்குத் தடை விதிப்பது உண்டு.

பராசக்தி காலத்திலேயே

பராசக்தி காலத்திலேயே

உதாரணத்திற்கு, கலைஞர் மு. கருணாநிதி எழுத்தில் புகழ் பெற்ற பராசக்தி திரைப்படம் 1952ம் ஆண்டு தயாரித்தபோது, காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சி புரிந்தது. அப்போது அந்தப் படத்துக்குச் சான்றிதழ் பெறுவதற்கு தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் படாதபாடு பட்டார். காரணம், அப்படத்தில் மு.கருணாநிதி எழுதிய பல வசனங்கள் ஆட்சேபத்துக்குரியவை என்றும், சில காட்சிகள் சர்ச்சைக்குரியவை என்றும் சென்சார் போர்டு பிடிவாதமாக இருந்ததே. கடும் போராட்டத்துக்குப் பின் திரைக்கு வந்த இப்படம் மகத்தான் வெற்றி பெற்றது. கருணாநிதியின் பேனா, சிவாஜி கணேசனின் நா ஆகிய இரண்டுமே வெற்றிக்குக் காரணங்கள்.

திரைப்படங்களுக்கு தடை

திரைப்படங்களுக்கு தடை

திரைபப்படங்களின் மூலம் தங்களது கருத்துகளை வெளியிடுவதைத் திறன்பட நிறைவேற்றியவர்கள் தி.மு.க.வினர்தான். அப்போது அண்ணா,எம்ஜிஆர், சிவாஜி கணேசன், கருணாநிதி பலர் அந்த இயக்கத்தில் இருந்தனர். பல படங்கள் சர்ச்சைக்கு ஆளானாலும் அவை யாவும் வெற்றி பெற்றன. அதன் பிறகு, நீண்ட நாட்களுக்குப் பின்னர், அக்ரஹாரத்தில் கழுதை, ஒரே ஒரு கிராமத்திலே போன்ற திரைப்படங்கள் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதற்கு எதிர்ப்பு ஏற்பட்டது. அப்படங்கள் டெல்லி போன்ற மற்ற நகரங்களில் வெளியிடப்பட்டன.

தமிழகத்தில் தடை

தமிழகத்தில் தடை

முல்லைப் பெரியாறு பிரச்சினையில் தமிழக நிலைப்பாட்டினால் அபாயம் நேரும் என்பதை மறைமுகமாக உணர்த்தும் வகையில் "டேம் 999" என்ற ஆங்கிலப் படத்துக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதன் விளைவாக தமிழகத்தில் அந்தப் படம் வெளியாகவில்லை.
ஆனால், இப்போது அண்மைக் காலமாக வலுவான காரணம் இல்லாமல் நீதிமன்றத்தை அணுகுவது, போராட்டம் நடத்துவது போன்ற செயல்கள் அதிகரித்து வருகின்றன. அது சகிப்புத் தன்மை இல்லாமையைக் காட்டுகிறதா என்று புரியவில்லை.

சண்டியர் டூ விருமாண்டி

சண்டியர் டூ விருமாண்டி

சில ஆண்டுகளுக்கு முன் கமல்ஹாசன் நடித்த விருமாண்டி என்ற படத்தின் தலைப்பு சண்டியர் என்று பெயரிடப்பட்டது. அதை எதிர்த்து புதிய தமிழகம் கட்சி போராட்டம் நடத்தியது. அந்தப் போராட்டமும் படம் திரையிடும் நாள் குறிப்பிடப்பட்ட பிறகே நெருக்கடிபோல தரப்பட்டது. அவசரமாக அந்தப் படத்தின் தலைப்பு விருமாண்டி என மாற்றப்பட்டது. அதே கமல்ஹாசன் தயாரித்த "விஸ்வரூபம்" திரைப்படமும் பலத்த எதிர்ப்பைச் சம்பாதித்தது.

திருமகளாக மாறிய வரலாறு

திருமகளாக மாறிய வரலாறு

சில ஆண்டுகளுக்கு முன் விக்ரம் நடித்த ஒரு திரைப்படத்தின் தலைப்பு "தெய்வத் திருமகன்" என்று வைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்டித்து ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் குரல் எழுப்பினர். காரணம், அவர்கள் பெரிதும் போற்றும் தேசிய தலைவரை அந்தப் பெயரில் குறிப்பிட்டுப் போற்றுவார்கள் என்பதுதான். அதனால், படத்தை குறித்த நேரத்தில் வெளியிட வேண்டுமே என்பதற்காக படத்தின் தலைப்பை "தெய்வத் திருமகள்" என்று மாற்றினர்.

காட்டிக் கொடுத்த உதட்டு அசைவு

காட்டிக் கொடுத்த உதட்டு அசைவு

முப்பது ஆண்டுகளுக்கு முன் கே. பாலசந்தர் தயாரித்து எஸ்பிமுத்துராமன் இயக்கிய "நான் காந்தி அல்ல" திரைப்படமும் நீதிமன்றத்தில் யாரோ ஒருவர் வழக்கு தொடுத்ததால், ரிலீ்ஸ் ஆவதற்கு சில தினங்களுக்கு முன் "நான் மகான் அல்ல"என்று மாற்றப்பட்டது. அப்படத்தில் கதாநாயகன் ஒரு கட்டத்தில் "நான் மகான் அல்ல" என்று பேசுவார். ஆனால், அவரது உதட்டசைவு "நான் காந்தி அல்ல" என்று அமைந்திருக்கும்.

கலையாக பாருங்கள்

கலையாக பாருங்கள்

திரைப்படம் என்பது ஒரு படைப்பாற்றலை வெளிப்படுத்தும் ஒரு கலை. அந்தக் கலைக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு இருக்கிறது. அதையே தொழிலாக வைத்து நாடு முழுவதும் கோடிக்கணக்கானோர் வாழ்கிறார்கள். ஒரு படம் சிறந்ததாக இருந்தால் மக்களிடையே செல்வாக்கு பெறும். நல்ல லாபமும் ஈட்டும். அவ்வளவுதான். அதற்கு மேல், அதில் மிகச் சிறந்த வகையில் திறனை வெளிப்படுத்துவோர்தான் பொதுச் சேவையில் பங்களிப்பு செலுத்தவோ, பாதிப்பை ஏற்படுத்தவோ இயலும். அதற்கு இந்திய வரலாற்றிலேயே மிகப் பெரிய உதாரணம் எம்.ஜி.ஆர்.

பண மோசடி

பண மோசடி

திரைப்படத் தயாரிப்பு இப்போது ஏராளமான செலவுகளைக் கொண்டது. பல கோடி ரூபாய் போட்டு படம் எடுப்பவர் அதற்கு மேல் சில கோடிகளையாவது பெற வேண்டும் என்று ஆர்வம் காட்டுவது இயல்புதான். அதைப் புரிந்து கொள்ளாமல் தடுப்பது நாகரிகம் ஆகாது. நல்ல படம் என்றால் அதை மக்களே ஏற்பர். வேண்டாத படங்களை மக்களே நிராகரிப்பர்.

இம்மை அரசர்கள்

இம்மை அரசர்கள்

பாகுபலி படத்தைத் திரையிட கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்துவது புதியதல்ல. இதைப் போல் வடிவேலு நடித்த, "இம்சை அரசன் 23ஆம் புலிகேசி" என்ற படத்தையும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று தடுத்தனர். வடிவேலு நடித்த படம் வெறும் நகைச்சுவைப் படம். அதில் யாரையும் குறிப்பாக கன்னடர்களைப் புண்படுத்தும் காட்சியோ வசனமோ ஏன் வார்த்தை கூட இல்லை. புலிகேசி என்ற சாளுக்கிய மன்னனின் புகழுக்கு இழுக்கு சேர்ப்பதாகப் போராட்டம் நடத்தினர். படத்தைப் பார்த்திருந்தால், புலிகேசி என்ற கதா பாத்திரத்தின் பெயர் திருநெல்வேலி அருகில் ஒரு ஊரின் பெயரிலிருந்து அமைந்தது என்று படத்திலேயே காட்சி விளக்கம் இருக்கிறது.

நல்ல திரைப்படம்

நல்ல திரைப்படம்

இதையெல்லாம் விட, அந்நிய மதுபானங்களைத் தடை செய்வது, சாதிச் சண்டையைத் தடுப்பது, கல்வியறிவை மேம்படுததுவது போன்ற முற்போக்கான கருத்துகளை நகைச்சுவையாக மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளது அந்தப் படம். அதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் போர்க்குரல் எழுப்பினர். பாகுபலிக்கு எதிரான போராட்டம் மிகப் பெரிய அபத்தம். அப்படம் தயாரிக்கப்பட்டு வந்தபோதே அதில் சத்தியராஜ் நடிக்கிறார் என்பதை அண்டார்டிகா முதல் ஆர்டிக் வரையில் எல்லா மக்களுமே அறிவர்.

போராட்டத்தின் உள்நோக்கம்

போராட்டத்தின் உள்நோக்கம்

இந்நிலையில் படம் பல கோடி செலவில் தயாரித்து, திரைக்கு வர சில தினங்களே இருக்கும் நிலையில் நடிகர் சத்யராஜ் எத்தனையோ ஆண்டுக்கு முன் ஏதோ சில வார்த்தைகளைப் போகிற போக்கில் கூறியதை வைத்து இப்போது போராட்டம் நடத்துவது எப்படி ஏற்கத் தக்கதாகுமோ. ஒரு வேளை சத்தியராஜை எதிர்த்துதான் இந்தப் போராட்டம் என்றால், தயாரிப்பு நிலையிலேயே போராட்டம் நடத்தியிருக்கலாமே. சத்தியராஜின் மனநிலையில் காணப்படும் பெருந்தன்மை, அவர் பட முதலாளிகளுக்குப்த் தன்னால் எந்தப் பாதிப்பும் வரக்கூடாது என்று கருதுகிறார். அவரைக் கன்னட ரசிகர்கள் ஏற்கவில்லை என்றால், அவருக்குச் சில கன்னட படங்களிலும் வாய்ப்பு வந்ததே, அது எப்படி... ஷாருக்கானுடன் அவர் ஹிந்திப் படத்திலும் நடித்துப் புகழ் பெற்றாரே..

ஏன்யா இப்படி

ஏன்யா இப்படி

இதுபோன்ற போராட்டங்களில் கவனிக்கப்பட வேண்டியது, பல கோடி போட்டு எடுக்கப்படும் திரைப்படங்கள் திரைக்கு வரத் தயாராகும் சில நாட்களுக்கு முன்புதான் இந்தப் போராட்டம் நடத்தப்படுகிறது. இடையில் அந்தப் படத்துக்கு விளம்பரம் தேடி வெளியாகும் பல செய்திகள், தகவல்களின் போது இந்தப் போராட்டம் குறித்து அமைப்புகளுக்கு நினைவே வருவதில்லை. பல கோடிகளைப் போட்டுப் படம் எடுக்கும் முதலாளியை போராட்டம் நடத்தி, மிரட்டினால் அவரிடம் உள்ள கோடிகளில் கொஞ்சம் கிடைக்கும் என்ற மனோபாவமா அல்லது இப்படி போராடினால்தான் பப்ளிசிட்டி கிடைக்கும் என்ற அற்ப சந்தோஷமா தெரியவில்லை. எது எப்படியிருந்தாலும் பலியாவது பாகுபலி போன்ற படங்கள் அல்ல, நாகரிகம்தான்.

English summary
This article speaks about Cinema and the politics surrounded with the release.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X