For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மழைக்கு பலியான 30 பேர் குடும்பத்துக்கு ரூ.2.5 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மழைக்குப் பலியான 30 பேர் குடும்பத்திற்கு தலா ரூ. 2.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப் படுவதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. எனவே, கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. மழைநீர் சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில், மின்சாரம் பாய்ந்தும், மின்னல், இடி தாக்கியும், சுவர் இடிந்து மரம் விழுந்து உள்ளிட்ட விபத்துக்களில் சிக்கியும் இதுவரை தமிழகத்தில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு மழைக்குப் பலியான மக்களின் குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிவாரண நிதி அறிவித்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

CM announces Rs.2.5 lakhs for rain victims

முன்னெச்சரிக்கை நடவடிக்கை...

வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் துவங்குவதற்கு முன்னரே, வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில் அதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ஆட்சித் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டன.

ஹெலிகாப்டரில் மீட்புப்பணி...

புரட்சித் தலைவி அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை காரணமாக, 21.10.2014 அன்று திண்டுக்கல் மாவட்டம், காளிப்பட்டியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய இரு குடும்பங்களைச் சேர்ந்த 10 நபர்கள் ஹெலிகாப்டர் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மழை பாதிப்பு குறித்து ஆய்வு...

இதன் தொடர்ச்சியாக, 24.10.2014 அன்று வடகிழக்கு பருவமழை குறித்த ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றபோது, மழையினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க அரசு செயலாளர் நிலையில் உள்ள 20 அதிகாரிகள் மழையினால் பாதிக்கப்பட்ட 20 மாவட்டங்களுக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு, அதன் அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்க இடம், உண்ண உணவு, உடுக்க உடை ஆகியவை அளிக்கப்படுவதையும், மீட்பு மற்றும் நிவாரண உதவிகள் வழங்கப்படுவதையும் அவர்கள் உறுதி செய்தனர்.

ஆய்வுக் கூட்டம்...

இந்தச் சூழ்நிலையில், நிவாரணப் பணிகளை மேலும் முடுக்கிவிடும் வகையில், 27.10.2014 அன்று தலைமைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, வேலுமணி, உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

விவாதம்...

இந்த ஆய்வுக் கூட்டத்தில், வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழை குறித்தும், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள மனித உயிரிழப்புகள் குறித்தும், கால்நடை உயிரிழப்புகள் குறித்தும், சேதமடைந்துள்ள குடிசைகள் மற்றும் பயிர்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

கூடுதல் மழை...

வடகிழக்கு பருவமழை காரணமாக இந்த ஆண்டு இதுவரை 204.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும், இது இயல்பாக பெறும் மழை அளவான 151 மில்லி மீட்டருடன் ஒப்பிடும்போது 35 விழுக்காடு அதிகம் என்றும், தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில் கூடுதலாக மழை பெய்துள்ளது என்றும் இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

30 பேர் பலி...

கனமழை காரணமாக மின்சாரம் தாக்கியும், இடி மற்றும் மின்னல் தாக்கியும், சுவர் இடிந்து விழுந்தும், வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டும் இதுவரை 30 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரண நிதி...

இந்த கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மேலும் 1 லட்சம் ரூபாயினை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

கால்நடைகளுக்கு நிவாரணம்...

இந்த பெருமழைக்கு 108 கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும், இவற்றில் மாடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 20,000 ரூபாய் நிவாரணத் தொகையும், ஆடுகளை இழந்த உரிமையாளர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரணத் தொகையும், கோழிகளை இழந்த உரிமையாளர்களுக்கு 100 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டதாகவும் இந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

குடிசை வீடுகள்...

இந்த பெருமழைக்கு இதுவரை 250 குடிசை வீடுகள் முழுமையாகவும், 623 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என தெரிவிக்கப்பட்டது. முழுமையாக சேதமடைந்த குடிசைகளுக்கு 5,000 ரூபாய் நிவாரணத் தொகையும், பகுதியாக சேதமடைந்த குடிசைகளுக்கு 2,500 ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்க அதிகாரிகளுக்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு அரிசி, வேட்டி-சேலை, மண்ணெண்ணெய் ஆகிய பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

பயிர்ச்சேதம்...

கனமழை காரணமாக, சில இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. வெள்ள நீர் வடிந்த பிறகே பயிர்ச் சேதம் குறித்து சரியாக ஆய்வு செய்ய இயலும் என்பதால், வெள்ள நீர் வடிந்த பின் ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சாலைகள் சீரமைப்பு...

சாலைகளைப் பொறுத்தவரை, கனமழை காரணமாக, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 797 சாலைகளில் 3070 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், இவற்றில் 2505 இடங்களில் உள்ள பள்ளங்கள் செப்பனிடப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பள்ளங்களை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. பிற மாவட்டங்களைப் பொறுத்த வரையில் 4,765 நீளச் சாலைகள் கனமழையில் சேதமடைந்துள்ளதாகவும், அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குளம், குட்டைகள் சீரமைப்பு...

வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சாலைகளை செப்பனிடவும், குளம் குட்டைகளைச் சீரமைக்கவும் 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தயார் நிலையில் அரசு இயந்திரம்...

இந்த ஆண்டு இறுதி வரை வடகிழக்கு பருவமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதால், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் வகையில் அரசு இயந்திரம் தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Tamilnadu chief minister O.Paneer Selvam has announced Rs.2.5 lakhs for the persons died in recent rain.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X