முதல்வர் ஜெயலலிதா நலமாக இருக்கிறார்... விடிய விடிய காத்திருந்த தொண்டர்கள் நிம்மதி #Jayalalithaa

சென்னை: காய்ச்சல் காரணமாக சென்னை தனியார் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா நலமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் விடிய விடிய முதல்வர் உடல்நலம் குறித்து கவலையுடன் காத்திருந்த தொண்டர்களும், அரசு அதிகாரிகள், அமைச்சர்களும் நிம்மதியடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் அஜீரணக்கோளாறு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு 10.15 அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் வெளியானதையடுத்து அப்பகுதியில் மருத்துமனை முன்பு ஏராளமான கட்சிபிரமுகர்களும், தொண்டர்களும் குவிந்தனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு நிலவவே, இதையடுத்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

மெட்ரோ ரயில் விழா

தலைமைச் செயலகத்தில் புதன்கிழமையன்று முதல்வர் ஜெயலலிதா மெட்ரோ ரயில் துவக்கவிழாவிற்கு வரும் போதே, மெதுவாக நடந்து வந்து இருக்கையில் அமர்ந்தார். அப்போதே வீடியோவில் பார்த்தவர்களுக்கு முதல்வரின் உடல்நிலையில் ஏதோ மாற்றம் இருப்பதை உணர்ந்தனர். எனினும் தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகளை துவக்கி வைத்தார் ஜெயலலிதா.

ஆலோசனைக்கூட்டம்

வியாழக்கிழமை இரவு போயஸ் கார்டனில் முதல்வர் ஜெயலலிதா காவிரி பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டினார். அதில் காவல் துறை உயர் அதிகாரிகள், துறை செயலாளர்கள் கலந்துக் கொண்டனர்.

உடல்நலக்குறைவு

கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும்போதே அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. முதலில் தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதிக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் அவரை கிரீம்ஸ் ரோடு அப்போலோவில் அனுமதித்தனர்.

குவிந்த கூட்டம்

சற்று நேரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ கலைராஜன் வந்தார். சற்று நேரத்தில் கூட்டம் கூடத் தொடங்கியது. முதல்வர் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியதால், நள்ளிரவு ஒரு மணி அளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அவரது உடல்நிலை குறித்த செய்தி குறிப்பை வெளியிட்டது.

முதல்வர் நலம்

திடீர் காய்ச்சலின் காரணமாகவும், உடலில் நீர்சத்து குறைந்ததன் காரணமாகவும், முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இப்போது நலமாக இருக்கிறார். மருத்துவர்கள் தொடர்ந்து அவர் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வாசலில் காத்திருந்த முன்னாள், இந்நாள் அமைச்சர்கள்

ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவல் பரவிய நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர்கள் கோகுல இந்திரா, வளர்மதி, மேயர் சைதை துரைசாமி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர். ஆனால் ஒருவரையும் பார்க்க அனுமதிக்கவில்லை.

அரசு அதிகாரிகள் வருகை

தலைமைச் செயலாளர் ராம் மோக்ன் ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், காவல் துறை டி.ஜி.பி டி.கே. ராஜேந்திரன் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார். முதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்த ஷீலா நாயர் மருத்துவமனைக்கு வந்தார்.

யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை என்ற உடன் அரைமணிநேரம் காத்திருந்த சாந்த ஷீலா நாயர் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.

 

சோ வருகை

முதல்வர் ஜெயலலிதாவைக் காண துக்ளக் ஆசிரியர் சோ வருகை தந்தார். அவரை முதல்வர் ஜெயலலிதாவை பார்க்க அனுமதித்தனர்.

அதிகாலை 5 மணியளவில் முன்னாள் அமைச்சர் சின்னய்யா, முன்னாள் காவல் துறை அதிகாரியும் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான நட்ராஜ், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்தனர்.

 

தொண்டர்கள் வழிபாடு

முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தொண்டர்கள் பலரும் கோவில்களில் முதல்வருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அதிகாலை முதலே கோவில்களில் தொண்டர்கள் வழிபாடு நடத்தினர். முதல்வர் நலமாக உள்ளதாக காலை 7மணியளவில் மீண்டும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டதை அடுத்து தொண்டர்கள் பலரும் நிம்மதியடைந்தனர்.

English summary
A press release from Apollo Hospitals stated that Ms. Jayalalithaa was now fine. Tamil Nadu Chief Minister and AIADMK general secretary Jayalalithaa was admitted to Apollo Hospitals in Chennai with fever and dehydration late on Thursday.
Please Wait while comments are loading...

Videos