For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவம் போல கட்சியை வழிநடத்த சசிகலாவை பொதுச் செயலராக்குவதே ஒரே வழி - பன்னீர்செல்வம்

அதிமுக பொதுச் செயலராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு தெரிவித்துள்ளார்

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போன்று கட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்று வழிநடத்துவது தான் என்று முதல்வரும், அதிமுக பொருளாருமான ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, தமிழகத்தில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. அந்த வெற்றிடத்தை நிறைவு செய்ய சசிகலாவை அதிமுகவினர் நேரில் சென்று சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

CM pannerselvam urges Sasikala to lead party

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நிழலாக இறுதிவரை இருந்து, அவரின் மெய்க்காப்பாளராக, உயிர் காக்கும் தோழியாக, உன்னத சேவகியாக, உறுதுணையாக நிற்கும் தங்கையாகவே வாழ்ந்து வருபவர் எங்களின் பாசத்திற்குரிய சசிகலா.எண்ணில்லாத சோதனைகளையும், வேதனைகளையும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சந்தித்த காலகட்டங்களில், அவருக்கு உற்ற துணையாக இருந்து அந்தத் துன்பங்களை பகிர்ந்து கொண்டவர் சசிகலா.

பொய் வழக்குகள் போடப்பட்டு தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வி சிறைவாசம் மேற்கொண்ட நேரத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து சொல்லொண்ணா துன்பத்தை அனுபவித்தவர் சசிகலா. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகள் இணைந்து நின்று அவரின் சிந்தனையை, செயலாற்றலை, தனக்குள் உள்வாங்கிக் கொண்டிருப்பவர் சசிகலா.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவைப் போலவே அதிமுக நிர்வாகிகளை, கடைக்கோடி கிராம அதிமுக தொண்டர்களை அறிந்து வைத்திருப்பவர் சசிகலா. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ஒரு ராணுவ அமைப்பு போன்று கட்சியை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னால், அதற்கு ஒரே வழி அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா பொறுப்பேற்று வழிநடத்துவது ஒன்றே ஆகும்.

இந்தக் கருத்துக்கு ஒரு மாற்றுக் கருத்து அதிமுகவில் இல்லை. அப்படி ஒரு மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இந்தக் கட்சியின் தொண்டர் இல்லை. ஜெயலலிதா மறைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிறைவு செய்திடவே சசிகலாவை அதிமுகவினர் சந்தித்து தலைமை ஏற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.

கடந்த 33 ஆண்டுகளாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருபவர் சசிகலா. அதனால்தான் தன்னைப் பெற்றெடுத்த தாயின் இடத்தை சசிகலா நிரப்பியுள்ளார் என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதா புகழ்ந்துரைத்தார்.

""என் (ஜெயலலிதா) மீதான விசுவாசத்தின் காரணமாகவே, மற்றவர்களால் மிக தவறாக சித்திரிக்கப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட பெண்மணி அவர். எனக்காக அவர் மிகவும் சிரமங்களை அனுபவித்துள்ளார். என்னுடனான நட்பு மட்டும் இல்லை என்றால், அவரை இந்த அளவு யாருமே தொந்தரவு செய்திருக்க மாட்டார்கள். என்னுடன் பிறக்காத சகோதரி அவர். என் அம்மாவின் இடத்தை நிரப்பிய பெண் அவர்'' என்று மறைந்த முதல்வர் ஜெயலலிதாவே கூறியிருக்கிறார். ஜெயலலிதா மீது சசிகலா கொண்டுள்ள பற்றுக்கும், பாசத்திற்கும் இதைவிட வேறு அத்தாட்சி தேவையில்லை.

எதிர்க்கட்சிகளின் கைவரிசையா? சசிகலாவை இகழ்ந்து உரைத்து, ஏளனம் செய்து, மனசாட்சியே இன்றி பொய்யான வதந்திகளைப் பரப்பி, அவரை அரசியலில் ஈடுபட விடாமல் முடக்கி விடலாம் என சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. இந்த முயற்சியில் ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவை அழிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ள ஒரிரு எதிர்க்கட்சிகளின் கைவரிசையும் இருக்கிறது என்று நான் (ஓபிஎஸ்) சந்தேகப்படுகிறேன். இத்தகைய வதந்தி பரப்பும் செயல்கள் வெற்றி பெறாது; குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம் என்ற ஆசை நிச்சயம் நிறைவேறாது.

மக்கள் அறிவார்ந்தவர்கள்: தமிழக மக்கள் அறிவார்ந்தவர்கள். சிந்தனைத் திறம் மிக்கவர்கள். அவர்களை ஏமாற்ற நினைப்பவர்கள்தான் இதுவரை ஏமாந்துள்ளார்கள் என்பது வரலாறு. அந்த வரலாறு இதற்கும் பொருந்தும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

English summary
Tamil nadu chief minister o. pannerselvam urges Sasikala to lead party
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X