For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரு சி.எம், ஒரு கவர்னர், ஒரு ஹாஸ்பிடல்- கிபி 3016 ல் வந்த கட்டுரை

By R Mani
Google Oneindia Tamil News

-ஆர்.மணி

இந்த கட்டுரையை படிக்க வாசகர்கள் கால இயத்திரத்தில் (டைம் மெஷின்) ஏறி முன்னோக்கி பயணிக்க வேண்டும்.

ஆம். கி.பி. 3016 ம் ஆண்டில் இந்த கட்டுரை தமிழ் கூறும் நல்லுலகிற்கு படிக்க கிடைக்கிறது. அப்போது (ம்) தமிழில் எழுதிக் கொண்டிருக்கும் ஒரு தலை காய்ந்த பத்திரிகையாளன் இந்த கட்டுரையை எழுதுகிறான்.

அவனுடைய வேலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தய சுவாரஸ்யமான உலக செய்திகளை ஆராய்ச்சி செய்து வெளியில் கொண்டு வருவதுதான். அப்படி ஒரு நாள் அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கையில்தான் இந்தியாவின் கடலோர மாநிலம் ஒன்றில் நிகழ்ந்த ஒரு முக்கியமான நிகழ்வு அவனுடைய பார்வையில் படுகிறது. அதனுடைய பல பரிமாணங்கள் அவனை ஆச்சரியத்தில் உறைய வைக்கின்றன. ஏனெனில் அந்த சம்பவம் நிகழ்ந்த குறிப்பிட்ட காலகட்டம் தனி மனித கருத்துச் சுதந்திரமும், நாகரீக அரசு நிருவாகமும், அனைத்து விதமான அரசியல் கருத்துக்களுக்கும் இடங் கொடுத்த ஒரு காலகட்டம் என்று கருதப்பட்டதோர் காலகட்டம்.. அந்தக் காலகட்டத்திலா இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடந்தது என்பது, அதாவது குறிப்பிட்ட அந்த சம்பவத்திற்கு எதிரான அன்றைய, ஊடகங்களின் எதிர்வினை அவனை அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. இனி அந்தக் கட்டுரையை பார்க்கலாம் ....

முன்போர் காலத்தில் ஒரு முதலமைச்சர் இருந்தார். அவர் அசாத்தியமானதோர் துணிச்சலும், மற்றவர்களை அடக்கியாளும் திறமையும் கொண்டவர். அவரைக் கண்டாலே அவரது கட்சிக்காரர்கள் நெடுஞ்சாண் கிடையாக தரையில் விழுந்து கும்பிடுவார்கள். அப்போது வானத்தில் பறக்கும் இரண்டு இயந்திரங்கள் இருந்தன. அவற்றுக்கு ஹெலிகாப்டர் என்றும் விமானம் என்றும் பெயர். ஹெலிகாப்டரில் அந்த முதலமைச்சர் பறந்தால் அந்த ஹெலிகாப்டரை பார்த்து அவரது அமைச்சர்களும், கட்சிக் காரர்களும் சாமி தரிசனம் செய்யும் போது பக்தி பரவசத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்ளுவது போல போட்டுக் கொள்ளுவார்கள். தரையில் விழுந்து வணங்குவார்கள். இதில் அமைச்சர்கள், சாதாரண கட்சிக் காரர்கள் என்றெல்லாம் எந்த வித்தியாசமும் கிடையாது. இதற்கு சற்றும் குறைந்தவர்கள் அல்லர் அதிகாரிகள். அவர்கள் அந்த முதலமைச்சரின் முன்பு கை கட்டி, வாய் பொத்தி, பள்ளி தலைமை ஆசிரியர் முன்பு மாணவர்கள் நிற்பது போல எல் ஷேப்பில் வளைந்து நிற்பார்கள். இவை எல்லாமே வெளிப்படையாக பொது வெளியில் நடக்கும்.

Columinist Mani's Timeline Story on TN

இந்த பின்புலங் கொண்ட அந்த அரசியல் தலைவர் அனைவரும் ஆச்சரியப் படும் வகையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக அறுதிப் பெரும் பான்மையுடன் மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளுகிறார். ஆனால் சில மாதங்களிலேயே அவருடைய உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு அவர் உலகப் புகழ் பெற்ற ஒரு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப் படுகிறார். அவருக்கு என்ன நோய் என்பது குறித்து எந்த தகவலும் வெளிப்படையாக அறிவிக்கப் படவில்லை. சாதாரண காய்ச்சல் என்பதை தவிர வேறெந்த தகவலையும் அந்த மருத்துவ மனையும் தெரிவிக்கவில்லை. அதனை விட முக்கியம் எந்த அரசு செய்திக் குறிப்பும் முதலமைச்சரின் உடல் நிலை குறித்து வரவில்லை.

உண்மை உறங்கப் போனால், பொய்யும், வதந்தியும், ஊர் சுற்றக் கிளம்பி விடும், இறக்கை கட்டிப் பறக்கும் என்பார்களே அதுதான் அப்போதும் நடந்தது. திடீரென்று அந்த முதலமைச்சரின் உடல் நிலை பற்றி வதந்திகள் அதிகப் படியாக பரவ ஆரம்பித்தன. சில நாட்கள் நீடித்த அந்த வதந்திகளுக்கு அந்த குறிப்பிட்ட அரசாங்கம் எந்த முற்றுப் புள்ளியும் வைக்கவில்லை. நாளோர் மேனியும், பொழுதோர் வண்ணமுமாய் வளர்ந்த அந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அந்த குறிப்பிட்ட மருத்துவமனை சில வரிகள் கொண்ட ஒரு அறிக்கையை வெளியிட்டது. இதில் வேடிக்கையான விஷயம் அந்த மருத்துவமனை சம்மந்தப்பட்ட முதலமைச்சர் அங்கு அனுமதிக்கப் பட்டதிலிருந்து வெளியிட்ட அறிக்கைகள் எதிலுமே ஒரு இடத்தில் கூட சிகிச்சை பெறுபவரின் பெயர் இல்லை. அம் மருத்துவமனை அக் காலகட்டத்தில் இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகவும் புகழ் பெற்ற ஒரு மருத்துவமனை. இதுபோன்று அவர்கள் ஒரு போதும், அதாவது சிகிச்சை அளிக்கப் படும் நோயாளியின் பெயரை குறிப்பிடாமல் எந்தவோர் அறிக்கையையும் வெளியிட்டதில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் அவ்வாறுதான் அவர்கள் தொடர்ந்து அறிக்கைகளை கொடுத்தார்கள்.

அந்த மருத்தவமனையின் இந்த செயற்பாடு வழக்கத்திற்கு மாறானது மட்டுமின்றி, மருத்துவ தார்மீக நெறிகளுக்கும், சட்டநெறிகளுக்கும் மாறானதாகவும் அப்போது விவரமறிந்தவர்களால் பார்க்கப் பட்டது.

அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் ஒவ்வோர் மாநிலத்துக்கும் கவர்னர் என்று ஒருவர் இருந்தார். அவர் தேர்ந்தெடுக்கப் படும் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பதற்காகவே இருந்த ஒரு நாட்டாமைக் காரர். மத்தியில் அன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் ஏஜெண்ட் தான் அவர். வழக்கமாக இந்த நாட்டாமைக் காரர் மாநில முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டால் உடனே போய் நலம் விசாரிப்பார். ஆனால் இந்த முறை அந்த கவர்னர் முதலமைச்சர் மருத்துவமனையில் சேர்ந்து பத்து நாட்களாகியும் ஒரு முறை கூட போய்ப் பார்க்கவில்லை. ஏன் கவர்னர் முதலமைச்சரின் உடல் நிலை குறித்து நேரில் போய் விசாரிக்கவில்லை என்பது இப்போது நினைத்தால் கூட ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. இது குறித்து அப்போது எந்த ஊடகமும் பேசவும், எழுதவும் இல்லை என்பது அதனை விட ஆச்சரியமானது.

அந்தக் காலகட்டத்தில் இன்னோர் அவலம் நடந்தது. அதாவது அந்த முதலமைச்சருக்கு ரத்த சொந்தம் என்று எவரும் இல்லை. அவருக்கு நெருக்கமான ஒரு நண்பர் சுமார் 30 ஆண்டுகாலமாக அவருடன், முதலமைச்சரின் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நண்பர் எந்த அரசு பதவியிலும் இல்லை. முதலமைச்சரோ உடல் நலம் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். சிகிச்சைக்கு அனுமதிக்கப் படும் நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே எடுக்க வேண்டிய மருத்துவ ரீதியில் தார்மீகமான முடிவுகளை இந்த குறிப்பிட்ட நோயாளி விஷயத்தில் யார் எடுத்தார் என்பது பற்றி அந்தக் காலகட்டத்தில் வந்த எந்தப் பத்திரிகையிலும் எந்த தகவலும் இல்லை. ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்கு நோயாளிகள் மருத்துவமனைக்கு போனாலே அவருடயை குடும்ப உறுப்பினர்களிடம் பத்து பேப்பர்களில் கையெழுத்து வாங்கித்தான் சிகிச்சையை ஆரம்பிப்பது அந்தக் காலகட்டத்தில் மருத்துவமனைகளின் பழக்கமாக இருந்தது. அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் உயர்சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்ட ஒருவரின் சார்பாக குடும்ப உறுப்பினர்கள் என்ற முறையில் யார் கையெழுத்து போட்டார்கள் என்பது பற்றி எந்த தகவலும் அந்தக் காலத்தில் எந்த பத்திரிகையிலும் இல்லை.

அது குறித்து அப்போது எவராவது கேள்வி எழுப்பினார்களா என்பது பற்றியும் எந்த தகவலும் எந்த பத்திரிகையிலும் இல்லை. அப்படி ஒரு வேளை அந்த நோயாளி தன் சார்பாக குடும்ப உறுப்பினர் என்ற முறையில் இவர்தான் கையெழுத்து போடுவார் என்று ஏதாவது ''சட்ட ஏற்பாடுகளை'' செய்து வைத்திருந்தாரா என்பது பற்றியும் எந்த தகவலும் அந்தக் காலத்திய பத்திரிகைகளில் இல்லை.

இன்னோர் அவலமும் அப்போது நடந்தது. முதலமைச்சர் உடல் நலங் குன்றி மருத்துவமனையில் இருக்கிறார். கவர்னர் வந்து பார்க்கவில்லை. மருத்துவமனை கிளிப்பிள்ளை போல ஒரே அறிக்கையை தேதியை மட்டுமே மாற்றி, அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அரசு சம்மந்தமான முடிவுகளை யார் எடுக்கிறார்கள் என்பதுதான் புரியாத புதிராக அப்போது இருந்திருக்கிறது.

எந்த அரசு பதவியையும் வகிக்காத, அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட, ''நோயாளியின் நண்பரிடமிருந்து'' தான் அந்தக் குறிப்பிட்ட மாநிலத்தின் உயரதிகாரிகள் உத்திரவுகளை பெற்று செயற்பட்டிருக்கிறார்கள் என்று சில வரலாற்று அறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த உண்மை பிற்காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் வரலாற்று அறிஞர்களுக்குத் தெரிய வந்தது. இந்த இரண்டு முக்கியமான விஷயங்கள் பற்றியும் அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் பெரியளவில் எந்த பத்திரிகையும் எந்த செய்தியும் வெளியிடாததும், இவை குறித்தெல்லாம் அன்று எந்த விவாதமும் பொது வெளியில் பெரியளவில் நடக்காததும் ஆச்சரியமானதுதான்.

இந்த அவலங்கள் எல்லாமே முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல் பத்துநாட்களில் நடந்தேறின. அதன் பிறகு என்ன நடந்தது என்பது பற்றிய தகவல்கள் வரலாற்று குறிப்புகளில் தேடப் பட்டு வருகின்றன. அந்த தகவல்கள் கிடைத்தவுடன் அடுத்த பதிவை வாசகர்கள் பார்க்கலாம்.

English summary
Here is an analysis of columnist Mani on present TN's political situation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X