For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எம்.ஜி.ஆர் போல ரஜினியால் அரசியலில் ஜெயிக்க முடியுமா?

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறார். இதோ வந்து கொண்டிருக்கிறார் என்பது அவ்வப்போது எழுதும் பிரசாரம். ஆனால், கடந்த காலங்களில் அரசியலில் குதித்த நடிகர்கள் யாருமே இப்படி பூச்சாண்டி காட்டியதாகத் தெரியவில்லை.

தமிழ்த் திரைப்பட நடிகர்களில் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஏராளம். எஸ்எஸ்ஆர், எம்ஜிஆர், சிவாஜி கணேசன் தொடங்கி காமெடி நடிகர் கருணாஸ் வரையில் ஏராளமானோர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே பதவிகளை வகித்தவர்கள். கட்சி தொடங்கி ஜெயித்தவர்கள் யாருமே இல்லை. தமிழகத்தில் எம்ஜிஆரை அடுத்து ஆந்திரப் பிரதேசத்தில் என்டி ராமாராவைச் சொல்லலாம். ஆனால், அவரது கட்சி கூட தேர்தலில் பின்னடைவு கண்டிருக்கிறது. அவரும் ஆட்சி இழந்திருக்கிறார்.

Columnist Paa Krishnan analysis the success of MGR, and raises doubt that Rajnikant’s indecisive stands

தமிழக அரசியலில் இரண்டே இரண்டு திரைப்பட நடிகர்கள்தான் வெற்றிகரமாக ஆட்சி நடத்தியிருக்கிறார்கள். அவர்களில் ஜெயலலிதாவின் வெற்றிக்கும் எம்ஜிஆர்தான் பின்னணி என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா முழவதும் எடுத்துக் கொண்டால், திரையுலகிலும் அரசியலிலும் வெற்றி கண்டவர் என்றால் அது எம்ஜிஆர் மட்டுமே. "There can BE ONLY one" (ஒன்று அல்லது ஒருவர்தான் இருக்க முடியும்) என்பது புகழ்பெற்ற ஆங்கில வசனத்துக்கு சரியான உதாரணம் எம்ஜிஆர்தான்.

அரசியலுக்கு வரும் இன்றைய நடிகர்களுக்கு முதலமைச்சர் கனவு இருக்கிறது. ஆனால், யாரும் எம்ஜிஆரைப் போல் வரமுடியாது. காரணம் அவரைப் போல புகழை மட்டுமே நம்பியிருக்கிறார்களே தவிர, அவர் சமூகத்தின் மீது காட்டிய அக்கறையில் அவர்கள் ஈடுபட்டதாகச் சரித்திரம் இல்லை.

எம்ஜிஆரின் "நாடோடி மன்னன்" படத்தில் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பல பாடல்களில் ஒரு பாடல் வரிகளை எம்ஜிஆர் பாடுவதைப் போல் காட்சி அமைந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் தனது காதலியின் கேள்விக்குப் பதில் சொல்வதாக அமைந்த வரிகள்....

"நானே போடப்போறேன் சட்டம்- பொதுவில் நன்மை புரிந்திடும் திட்டம் நாடு நலம் பெறும் திட்டம்" பட்டுக்கோட்டையாரின் இந்த வரிகளை டி.எம். சௌந்தரராஜன்தான் பாடினார். அதற்காக நடித்த எம்ஜிஆரின் லட்சியத்தை இந்த வரிகள் காட்டுகின்றன என்று மக்கள் மனத்தில் பதிந்துவிட்டது. இதுதான் அவரது அரசியலுக்கு அச்சாரம்.

தொடர்ந்து, எங்க வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில், "எதிர்காலம் வரும், என் கடமை வரும், இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்..." என்று பாடல் வரிக்கு வாயசைத்து நடித்திருப்பார் எம்ஜிஆர். இதுபோல் எம்ஜிஆர் திரையுலகிலும் பொது வாழ்க்கையிலும் கையாண்ட நடவடிக்கைகள் அவரைத் வெற்றிப் பாதைக்கு இட்டுச் சென்றிருக்கின்றன. எல்லோரும் அறிந்த உண்மை அவரது வள்ளல் தன்மை. திரையில் நடிப்பதை மட்டும் மக்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் சிவாஜி கணேசனால் வெற்றி பெற முடியாதது ஏன் என்ற கேள்வி தோன்றும்.

எம்ஜிஆர் நடித்த ஒரு திரைப்படம் முழுமை பெறும் சமயம். அந்தப் படத் தொழிலாளர்களுக்குப் பட அதிபர் போதிய ஊதியம் தராமல் காலந்தாழ்த்தினார். அதை அறிந்த எம்ஜிஆர் பட அதிபரிடம், "தொழிலாளர்களின் முழுச் சம்பளத்தையும் கொடுத்துவிடுங்கள். அதற்குப் பிறகு படம் நிறைவடைய கால் ஷீட் தருகிறேன்" என்று உறுதிபடக் கூறிவிட்டார். தான் சார்ந்த திரையுலகத் தொழிலாளர்கள் மீது அவர் காட்டிய அக்கறைதான் திரையுலகில் பலருக்குத் தெய்வமாக எம்ஜிஆர் விளங்கக் காரணம்.

திரைப்படங்கள் பொழுதுபோக்கு கொண்டவை என்பதையும் தாண்டி, சமூகத்துக்குப் பல நல்ல கருத்துகளைக் கூறும் வகையில் முழுமையாக நிகழ்த்தியவர் எம்ஜிஆர். அதையே பொதுவாழ்விலும் கடைப்பிடித்தவர். எம்ஜிஆர் சிகரெட் பிடிப்பதாக காட்சி எதுவும் இல்லை. மது அருந்தியதாக சில படங்களில் தோன்றினாலும், மது அருந்திய வேடத்தில் தோன்றும் எம்ஜிஆரின் கதா பாத்திரம் தீயவனாகவே அமைக்கப்பட்டிருக்கும். நல்ல மனிதராகத் தோன்றும் எம்ஜிஆர் நற்குணங்களை மட்டுமே கடைப்பிடிப்பார்.

ரஜினிகாந்த் திரைப்படத்தில் சிகரெட் பிடிப்பதற்கு புதுவிதமான ஸ்டைலை ரசிகர்களிடையே பரப்பினார். மது அருந்தும் காட்சிகளில் தோன்றினார். வெற்றிப் படங்கள் பலவற்றில் அவர் சமூகத்துக்கு வழிகாட்டும் கருத்துகளைக் கூறியது மிகவும் குறைவுதான். பொழுது போக்கு மட்டுமே இருந்தது. எம்ஜிஆர் படங்களில் நடித்த பணத்தைச் சமூகத்துக்காக ஏராளமாகச் செலவழித்தார்.

எம்ஜிஆர் அரசியல் வாழ்க்கையில் போர்க்குணம் கொண்டவராக இல்லாவிட்டாலும், அவருக்கு இருந்த வசீகரத்தால் போர்க்குணத்துக்கே இடமில்லாமல் போய்விட்டது. எனினும் முதல்வர் பதவியில் இருந்தபோதே மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்துக்கு போதிய அரிசி ஒதுக்கப்படாததைக் கண்டித்து உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.

ரஜினிகாந்த் நடித்து பெற்ற பணத்தைப் பொதுமக்களுக்காகச் செலவழித்ததாக எந்தக் குறிப்பும் இல்லை. தனது ரசிகர்களை, தனது கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்யும் பூசாரியாக்கிவிட்டார். திரைப்பட ரசிகர்களை மக்கள் தொண்டில் அவர் ஈடுபடுத்தவில்லை. ரஜினிகாந்த் பொதுவாழ்க்கையில் பல அறிவிப்புகளை வெளியிட்டாலும் அது நடைமுறைக்கு வந்ததில்லை. காவிரிப் பிரச்சினைக்காக திரையுலகமே போராடியபோது, "நதிகளை இணைப்பதுதான் இதற்குத் தீர்வு. அதற்கு ரூ. 1 கோடி தருகிறேன்" என்ற அவரது அறிவிப்பு காற்றில் கரைந்து போய்விட்டது.

"நானே போடப்போறேன் சட்டம்" என்று எம்ஜிஆர் காட்சியில் வாயசைத்து நடித்தாலும், ஆட்சிக்கு வந்தபின் 1983ம் ஆண்டு சத்துணவுத் திட்டத்தைக் கொண்டுவந்தார்.
"கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்" என்று பாடல் வரிகளுக்கு எம்ஜிஆர் வாய் அசைத்தாலும், அவர் முதல்வராக இருந்தவரையில் திமுக ஆட்சிக்கு வர இயலவில்லை.

தமிழ் மக்கள் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் கொத்துக்கொத்தாய் படுகொலை செய்யப்பட்டபோது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்தக் கருத்தையும் தெரிவித்ததாகப் பதிவு இல்லை. ஆனால், இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காண எம்ஜிஆர் அக்கறை எடுத்துக் கொண்டு, போராளிகளுடன் இந்திய அரசையே பேசும்படி செய்தார். போராளிகளுக்கு ஆதரவும் அளித்தார். இந்திய இலங்கை உடன்பாட்டினால், பலன் கிடைக்காதா என்றும் கவலைப்பட்டார்.

முக்கியமாக கருத்துகளைக் கூற வேண்டிய சமயத்தில் மக்களுக்கு நெருக்கமாக ரஜினிகாந்த் இருப்பதேயில்லை. 1996ம் ஆண்டு "ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஆண்டவனாலேயே தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது" என்று ஒரே ஒரு முறை கூறினார். மற்றபடி வேறு சம்பவங்களில் அவர் மௌனம் காத்ததே அதிகம். ஆனால், எல்லா சந்தர்ப்பங்களிலும் எம்ஜிஆர் மட்டுமே குரல் கொடுத்து வந்திருக்கிறார்.

முடிவெடுப்பதில் எம்ஜிஆர் துணிவு கொண்டவர். 1972 ஆகஸ்ட் மாதம் திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதும், தன் ரசிகர்களை மட்டுமே நம்பி அக்டோபர் மாதமே கட்சி தொடங்கினார். அதை விட வியப்பு 1973ம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் முதல் வெற்றிக் கனியையும் ஈட்டினார். கட்சி தொடங்க இரண்டே மாதம் எடுத்து்க கொண்டவர் எம்ஜிஆர். இருபது ஆண்டுகளாகியும் முடிவு சொல்லாதவர் ரஜினிகாந்த்.

எம்ஜிஆர் தனது திரைப்படங்களின் வெற்றிக்காக ஸ்டண்ட் அடித்ததில்லை. காரணம் அவரது தன்னம்பிக்கைதான். நாடோடி மன்னன் படத்தை அவர் வெளியிடும்போது, "இப்படம் வென்றால் நான் மன்னன். தோற்றால் நாடோடி" என்று துணிவுடன் இருந்தார். படங்களை வெளியிடுவதில் ஏராளமான சோதனைகளைத்தான் எதிர்கொண்டார்.

ஆனால், ரஜினிகாந்த் அத்தகைய சோதனைகளை எதிர்கொண்டதில்லை. மாறாக, திரைப்படம் வெளியாகும் தருணத்தில் படத்துக்கு விளம்பரமாக அவரது அரசியல் பிரவேசம் யூகமாகப் பேசப்படும். ரஜினிகாந்த் மட்டுமல்ல, திரையுலகிலிருநது அரசியலுக்கு வந்த சிவாஜி கணேசனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. மிகுந்த நம்பிக்கையுடன் தோன்றிய விஜயகாந்த் மீது மக்களுக்கு நம்பிக்கையே போய்விட்டது. சரத்குமார் மீது சட்டம் பாய்கிறது. இதற்கிடையில் பாக்யராஜ், டி. ராஜேந்தர் போன்றோரும் கட்சிகளைத் தொடங்கி அரசியலில் முகவரிகளைத் தொலைத்துவிட்டனர். அண்ணா திமுகவின் ஒட்டு போல கருணாஸ் இருந்து எம்எல்ஏ ஆனதோடு சரி.

ஆந்திரப் பிரதேசத்தில் என்.டி.ராமாராவ் மக்கள் ஆதரவைப் பெற்றிருந்தாலும், அவரும் தேர்தல் தோல்வியைச் சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவின் வெற்றிக்கு எம்ஜிஆரின் வாக்குகளும், அவர் காட்டிய உழைப்பும் காரணம். கூட்டிக் கழித்துப் பார்த்தால், எம்ஜிஆர் என்பது புலி. மற்ற எல்லோரும் பூனைகள்தான். சூடு போட்டுக் கொண்டிருந்தாலும்.

ரஜினிகாந்த் நடிக்கும் "2.0" படம் திரைக்கு வந்த பிறகு அவரது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கட்டும்..... அப்போதாவது "நான் திரைப்படத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் ஈடுபடுகிறேன்" என்று ரஜினிகாந்த் ஒரே ஒரு முறை,யாவது சொல்வாரா?

English summary
Columnist Paa Krishnan analysis the success of MGR, and raises doubt that Rajnikant’s indecisive stands Columnist Paa Krishnan analysis the success of MGR, a matinée idol as a political leader never defeated. Also raises doubt that Rajnikant’s indecisive stands and his unpopular measures may not bring fruits.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X