ராம்குமார் வழக்கிற்கும், ரேவதி வழக்கிற்கும் என்ன தொடர்பு... எதற்காக போராடுகிறார் பரமசிவம்?

சென்னை: புழல் சிறையில் மின்கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்ட ராம்குமார் வழக்கில், ரேவதி என்ற பெண்ணின் கொலை வழக்கும் அடிக்கடி அடிபடுகிறது. அப்படி இந்த இரண்டு வழக்குகளுக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்னவென்று தெரிந்து கொள்ளலாமா?

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்த வழக்கில் ராம்குமார் என்ற நெல்லை இளைஞர் கைது செய்யப்பட்டார். ஒருதலைக் காதல் காரணமாக இந்தக் கொலை நடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Comparison between Ramkumar and Revathi case

இந்நிலையில், கடந்த ஞாயிறன்று புழல் சிறை வளாகத்தில் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டார் ராம்குமார். ஆனால், ராம்குமாரின் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது தந்தை வழக்குத் தொடர்ந்துள்ளதால் பிரேத பரிசோதனை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆறு நாட்களாக ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், ராம்குமார் தற்கொலையில் மர்மம் இருப்பதாகக் கூறும் அவரது வக்கீல் ராமசுப்பு தனது பேச்சில் ரேவதி கொலை வழக்கு என்ற வார்த்தையை குறிப்பிட்டு வருகிறார்.

இப்படி ராம்குமார் வழக்கில் தொடர்பு படுத்தப்படும் ரேவதி கொலை வழக்கின் விபரம் என்ன தெரியுமா... மேற்கொண்டு படியுங்கள்

கடந்த 2014ம் ஆண்டு மின்சாரம் தாக்கி ரேவதி என்ற பெண் உயிரிழந்ததாக சென்னை அண்ணாநகர் கே-4 காவல் நிலையத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திருமணமான சில ஆண்டுகளிலேயே ரேவதி மரணமடைந்ததால் இந்த வழக்கு பரபரப்பானது.

சென்னையில் பிரபலமான ஓர் அரசு மருத்துவமனையில் அந்தப் பெண்ணின் உடற்கூறு பரிசோதனை நடைபெற்றது. மின்சாரம் தாக்கி பெண் உயிரிழந்தார் என்று உடற்கூறு பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

பொதுவாக, அனைத்து உடற்கூறு பரிசோதனைகளும் விடியோ பதிவு செய்யப்படுவது கிடையாது. ஆனால், அந்தப் பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர் குழுவில் இருந்த ஒரு மருத்துவர் அவரது ஆய்வுக்காக அந்தப் பரிசோதனையை விடியோ பதிவு செய்திருந்தார்.

உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் அந்த விடியோ பதிவைப் பெற்று, மற்றொரு தடய அறிவியல் நிபுணரின் கருத்தைக் கேட்டறிந்தனர். அப்போது அந்த விடியோவை ஆய்வு செய்த அந்த நிபுணர், உடற்கூறு பரிசோதனை அறிக்கையில் மாறுபாடு இருப்பதை உறுதி செய்தார்.

மேலும், ரேவதி முதல் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டு, பின்னர் அவரது உடலில் மின்சாரம் பாய்ச்சப்பட்டது கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரேவதியின் தற்கொலை வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, தற்போதும் அதன் விசாரணை நடைபெற்று வருகிறது.

எனவே தான் இந்த வழக்கின் அடிப்படையில் பிரேத பரிசோதனையின் போது ராம்குமார் மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என அவரது குடும்பத்தார் எதிர்பார்க்கின்றனர். இதனால் தான் ராம்குமாரின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் உடனிருக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
This article is the details of Revathi case which is often used as an example in Ramkumar case.
Please Wait while comments are loading...

Videos