For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெடுவாசல் போராட்டத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் குரல் கொடுக்கும்: திருநாவுக்கரசர்

நெடுவாசலில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவளிக்கும் என திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் மக்கள் போராட்டத்திற்கு காங்கிரஸ் ஆதரவளிக்கும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சமீபகாலமாக தமிழக நலன்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு எடுத்து வருகிறது. மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைமை மாநில அரசில் பொறுப்பு வகிக்காத காரணத்தால் மக்கள் விரோத திட்டங்களை மத்திய அரசு மிகத் தந்திரமாக திணித்து வருகிறது.

congress support to neduvasal protest

தமிழகத்திலுள்ள 8 லட்சம் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிட மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் தேசிய நுழைவுத் தேர்வை திணிப்பதில் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. இதை தடுத்து நிறுத்துவதற்காக தமிழக சட்டப்பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக காக்க வைக்கப்பட்டிருக்கிறது.

வருகிற மே மாதத்தில் 2017-18 ஆம் கல்வி ஆண்டிற்கான நுழைவுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைப்பதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்று கூறப்படுகிறது. அப்படி ஒப்புதல் கிடைக்கவில்லையெனில் தமிழகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறிவிடும் என எச்சரிக்கிறேன். இதற்கு மத்திய - மாநில அரசுகள் பொறுப்பேற்க வேண்டும்.

ஏற்கெனவே மீத்தேன் எரிவாயு திட்டத்தை காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாக எதிர்த்த காரணத்தால் மத்திய பாஜக அரசு திட்டத்தை ரத்து செய்தது. தற்போது நாடு முழுவதும் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால் எரிவாயு கண்டறியும் முயற்சியில் 25 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் நெடுவாசல், குத்தாலம், கீழ்வேளுர், நன்னிலம் ஆகிய நான்கு இடங்கள் இடம் பெற்றுள்ளன.

இதற்கான ஹைட்ரோ கார்பன் எரிவாயு கண்டறியும் கொள்கை கடந்த 2015-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசும், தனியார் துறையும் இணைந்து வருவாய் பகிர்வு திட்டத்தின் மூலமாக செயல்படுத்துவதென முடிவு செய்யப்பட்டது. இத்திட்டத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெறுவதிலும் மத்திய அரசு வெற்றி பெற்றிருக்கிறது. இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்த்து கொள்ளையடிப்பதை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்ட மக்கள் நெடுவாசலில் ஒன்றுகூடி போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். ஆனால் மத்திய பாஜக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகத் தீவிரமாக இறங்கி உள்ளது.

ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் குறித்து தமிழக மக்களிடையே தவறான பிரச்சாரம் செய்யப்படுவதாக மத்திய பாஜக அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. ஏற்கெனவே முனையம் துறைமுக திட்டத்தில் அந்தப்பகுதி மீனவ மக்களின் எதிர்ப்புக் குரலை புறக்கணித்து செயல்பட்டு வருகிற பொன். ராதாகிருஷ்ணன், நெடுவாசல் போராட்டத்திற்கும் எதிராக பேசுவது வியப்புக்குரியது அல்ல. தங்களது வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் இருப்பதால் அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு இயலாது என்பதை மத்திய பாஜக அரசு முற்றிலும் உணர்ந்திருக்கிறது.

இந்நிலையில் தமிழக பாஜகவினர் இரட்டை வேடம் போடுவதை உடனே கைவிட வேண்டும். ஒன்று, தமிழக மக்களுக்காக பேச வேண்டும். இரண்டு, மத்திய அரசும், தனியார் துறையும் இணைந்து வருமான பகிர்வின் அடிப்படையில் செயல்படுத்தும் திட்டத்திற்கு ஆதரவாக பேச வேண்டும்.இந்த இரண்டையும் பேச இயலாத நிலையில் உள்ள தமிழக பாஜக மக்களால் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

பொதுவாக இயற்கை எரிவாயு என்பது நாட்டுக்கு தேவையான ஒன்றாகும். பூமிக்கடியில் இதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளும் போது அந்த இடத்தில் உள்ள மண்ணின் தன்மை, நீர் ஆதாரம், அந்தப் பகுதியில் 10 ஆண்டுகள் முன்பு நடைபெற்ற விவசாய சாகுபடி எவ்வளவு, பூமிக்கடியில் துளை அமைத்து இயற்கை எரிவாயு எடுக்கும் போது அப்பகுதியில் உள்ள சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் போன்ற அம்சங்களை ஆய்வு செய்யாமல் ஏனோ, தானோ என்று இத்திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதைவிட ஒரு பொறுப்பற்ற செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

தமிழக நலனுக்கு எதிராக தேசிய நுழைவுத் தேர்வு, மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் எரிவாயு திட்டம் போன்ற பல திட்டங்களை திணிப்பதற்கான தீவிர முயற்சியில் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இதை தடுத்து நிறுத்துகிற வகையில் தமிழக அரசு செயல்பட வேண்டும். அந்த முயற்சியில் தமிழக அதிமுக அரசு ஈடுபடவில்லையெனில் மக்களின் எதிர்ப்புக்கு இரையாக வேண்டிய நிலை ஏற்படும்.

இயற்கை வளங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய பாஜக அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும், துணை நிற்கும்'' என்று திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

English summary
congress have support to neduvasal protest, said TNCC president Thirunavukarasar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X