For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிரிமினல்கள் வக்கீலாவதைத் தடுக்க சட்ட திருத்தம்; 3 ஆண்டு சட்டப் படிப்புக்கு தடை... ஹைகோர்ட் அதிரடி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: கிரிமினல்கள் நீதித்துறையில் நுழைவதைத் தடுக்க மத்திய அரசு வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்; 3 ஆண்டு சட்டப்படிப்பை ஒழிக்க வேண்டும்; அகில இந்திய பார்கவுன்சிலுக்கான தேர்தலுக்கு தடை விதிக்கப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் எஸ்.எம்.ஆனந்தமுருகன் என்பவர், குற்றப்பின்னணி உள்ளவர்கள், வெளிமாநிலத்தில் சட்டப்படிப்பை முடித்தவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடை செய்யவேண்டும் என்று ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Consider legislation to bar criminals from practising: Madras High Court

இந்த வழக்கை சிறப்பு வழக்காக எடுத்து நீதிபதி கிருபாகரன் விசாரித்து வருகிறார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன் நேற்றும் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.

அப்போது நீதிபதி கிருபாகரன் தெரிவித்த கருத்துகளும் பிறப்பித்த உத்தரவும்...

கட்டப் பஞ்சாயத்து

புனிதமான வழக்கறிஞர் தொழில் குற்றவாளிகளின் புகலிடமாக திகழ்கிறதா? அல்லது குற்றவாளிகளை பாதுகாக்கும் கேடயமாக சட்டப்படிப்பு உள்ளதா?

நீதிமன்றத்திற்கு வரும் வழக்குகளைப் பார்த்தால் குற்றப்பின்னணி கொண்ட பலர் வழக்கறிஞர் என்ற போர்வையில் நீதித்துறையில் நுழைந்து கட்டப்பஞ்சாயத்துக்களை செய்து வருகின்றனர் என்பது தெரிகிறது.

இவர்களால்தான் புனிதமான வழக்கறிஞர் தொழிலின் மதிப்பு தரம் தாழ்ந்து களங்கம் ஏற்படுகிறது. இந்த நிலைக்காக நாம் அவமானப்பட்டு தலை குனியவேண்டும்.

30% போலி வக்கீல்கள்

வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர்கள் என்பவர்கள் இதுபோன்ற கிரிமினல் பின்னணி கொண்ட வழக்கறிஞர்களை பாதுகாக்கின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட வழக்கறிஞர் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கிரிமினல்கள் எல்லாம் வழக்கறிஞர்களாக தங்களை பதிவு செய்து கொள்கின்றனர். இதை அகில இந்திய பார் கவுன்சிலால் தடுக்க முடியவில்லை.

நாட்டில் உள்ள வழக்கறிஞர்களில் 30% போலிகள் என அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் கூறியுள்ளார். ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் காகித அளவில் செயல்படும் சட்டக்கல்லூரிகளிடம் பணம் கொடுத்து குற்றப்பின்னணி கொண்டவர்கள் சட்டப்படிப்பு சான்றிதழ்களை பெறுகிறவர்கள் நீதிமன்றங்களை சுமூகமாக செயல்பட விடுவதில்லை.

புதிய விதிமுறைகள் அவசியம்

நீதித்துறையில் தீய சக்திகள் நுழைவதை தடுக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும். அநீதி நடைபெறும் போது இந்த நீதிமன்றம் தன்னுடைய சட்டப்படியான அதிகாரத்தை கொண்டு அதை தடுக்கவேண்டும். சமுதாய மாற்றத்துக்கு ஏற்ப நீதிமன்றங்கள் புதிய கோட்பாடுகளையும், புதிய விதிமுறைகளையும் உருவாக்க வேண்டும்.

புதிய விதிமுறைகளை உருவாக்க நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு உத்தரவிட இந்த நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்றாலும் அப்படி ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டிய சூழ்நிலை இந்த உயர் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது.

நீதிபரிபாலனம் கேள்விக்குறி

வழக்கறிஞராக வருபவர்கள் எதிர்காலத்தில் நீதிபதி பதவியில் அமரக்கூடியவர்கள் என்பதால் சட்டப்படிப்பில் சேருபவர்கள் நேர்மையானவர்களாக இருக்கவேண்டும்.

குற்றப்பின்னணி உள்ளவர்கள் இத்தொழிலில் நுழைந்துவிட்டதால், நீதி பரிபாலனத்தை அவர்கள் கடத்திச்சென்றுவிடுவார்கள். ஆகையால் கீழ்க்கண்ட உத்தரவுகளைப் பிறப்பிக்கிறேன்.

உத்தரவுகள் விவரம்

  • கிரிமினல், தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் வழக்கறிஞர் தொழிலுக்குள் வருவதை தடுக்கும் விதமாக வழக்கறிஞர் சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.
  • வழக்கறிஞராகப் பதிவு செய்பவர்களின் சொந்த ஊர் மற்றும் சட்டம் படித்த கல்லூரி உள்ள பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் இருந்து தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை என்ற சான்றிதழை கண்டிப்பாக வாங்கி வரவேண்டும் என அனைத்து மாநில பார் கவுன்சில்களுக்கும், அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.
  • குடும்ப பிரச்சினை, சிவில் வழக்குகள், ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகளை தவிர, பிற குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களை வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கக் கூடாது என்றும் மாநில பார் கவுன்சிலுக்கு உத்தரவிடவேண்டும்.
  • ஜாமீனில் வெளிவரக்கூடிய சாதாரண வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தற்காலிக வழக்கறிஞராகத்தான் பதிவு செய்யவேண்டும்; அதுசம்பந்தமாக தனி பதிவேட்டை பராமரிக்க வேண்டும்; சம்பந்தப்பட்ட நபரின் வழக்குகளின் விவரங்கள், எந்த போலீஸ் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ள என்ற விவரத்தை அந்த பதிவேட்டில் பதிவு செய்யவேண்டும் என்றும் மாநில பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.
  • ஒருவேளை கிரிமினல் வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் தண்டனை பெற்றுவிட்டால், அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி, அந்த நபரின் பெயரை வழக்கறிஞர் பதிவேட்டில் இருந்து நீக்கவேண்டும்.
  • போலீசிடம் சான்றிதழ்
  • கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்களை சட்டப்படிப்பில் சேர்க்கக்கூடாது ; கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லை என்று சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இருந்து மாணவர்கள் சான்றிதழ் வாங்கி வந்தால் மட்டுமே சட்டப்படிப்பில் சேர்க்கவேண்டும் என நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளுக்கும் அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.
  • கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இல்லை என்ற சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 3 வாரத்துக்குள் சம்பந்தப்பட்ட போலீசார் சான்றிதழை வழங்கவேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், மத்திய அரசு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.
  • கிரிமினல் வழக்கில் தண்டனை பெற்ற எந்த ஒரு நபரையும், வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது; வேறு துறையில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அல்லது பணியை ராஜினாமா செய்தவர்கள், துறை ரீதியான நடவடிக்கையில் சிக்கியவர்கள் வழக்கறிஞராக பதிவு செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.
  • வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு முன்பு அம் மாணவர்களுக்கு சட்டப்பயிற்சி வகுப்புக்களை நடத்தவேண்டும் என்று கடந்த 1999 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 16 ஆண்டுகள் ஆகியும் உச்ச நீதிமன்றத்தின் இப் பரிந்துரையை இந்திய பார் கவுன்சில் அமல்படுத்தாமல் உள்ளது. எனவே இப் பரிந்துரையை மத்திய அரசு அமல்படுத்த தகுந்த சட்டத்திருத்தத்தை கொண்டு வரவேண்டும்.
  • பார்கவுன்சில் நிர்வாகத்தில் நீதிபதிகள்
  • தற்போதுள்ள வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளும் வரை, அகில இந்திய பார் கவுன்சிலை நிர்வகிக்க உச்ச நீதிமன்ற ஓய்வுப்பெற்ற நீதிபதிகளை நியமிக்கவேண்டும்.
  • இந்த நடவடிக்கையை 6 மாதத்துக்குள் மத்திய அரசு மேற்கொள்ளவேண்டும்.
  • வழக்கறிஞர் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர சட்டநிபுணர்கள், சமூக சேகவர்கள், ஓய்வுப்பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், டாக்டர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழுவை மத்திய அரசு உருவாக்கவேண்டும்.
  • பார்கவுன்சில் தேர்தலுக்கு தடை
  • அகில இந்திய பார் கவுன்சில், மாநில பார் கவுன்சில்களின் உறுப்பினர்கள் பதவி 2016 ஆம் ஆண்டு முடிவடைகிறது. எனவே, நடைபெற உள்ள உறுப்பினர்கள் தேர்தலில், குற்ற வழக்கில் சம்பந்தப்படாத, 20 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞர் தொழில் செய்யும் மூத்த வழக்கறிஞர்கள்தான் போட்டியிட முடியும் என்று அகில இந்திய பார் கவுன்சில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். அதுவரை 2016 ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் தேர்தலை நடத்தக்கூடாது.
  • ஆண்டுக்கு ஆண்டு வழக்கறிஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், நாடு முழுவதுமுள்ள சட்டக்கல்லூரிகளின் எண்ணிக்கையையும், சட்டப்படிப்புக்கான இடங்களையும் வெகுவாக குறைக்க அகில இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • 3 ஆண்டு படிப்புக்கு தடை
  • அதுமட்டுமல்லாமல், 3 ஆண்டு சட்டப்படிப்பை ரத்து செய்துவிட்டு, மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட படிப்புகளை போல, 5 ஆண்டு சட்டப்படிப்பை மட்டும் நடத்தவேண்டும் என்று அகில இந்திய பார் கவுன்சில் விதிமுறைகளை கொண்டுவரவேண்டும்.
  • ஒரு நீதிமன்றத்துக்கு ஒரு வழக்கறிஞர் சங்கம் என்ற முறையை அமல்படுத்த வேண்டும். இதற்காக தற்போது செயல்பட்டு வரும் வழக்கறிஞர்கள் சங்கங்களின் அங்கீகாரத்தை திரும்பபெற வேண்டும் என்று மாநில பார் கவுன்சில்களுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிடவேண்டும்.
  • பாதாளத்தில் நீதித்துறை மாண்பு
  • தற்போது வழக்கறிஞர் தொழிலில் குற்ற பின்னணி மற்றும் தீவிரவாத பின்னணி கொண்டவர்கள் காட்டு தீ போல பரவிவிட்டனர். இவர்களால் இந்த நீதித்துறையின் மாண்பு அதாள பாதாளத்தில் விழுந்துகிடக்கிறது.
  • இதுபோன்ற சமூக விரோதிகளுடன், வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகள், பார் கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டுச்சேர்ந்து செயல்படுகின்றனர். இந்த செயலை உடனடியாக தடுத்து நிறுத்தவில்லை என்றால், கண்டிப்பாக ஒரு நாள் குற்றப்பின்னணி கொண்ட வழக்கறிஞர்கள், சாதித்தலைவர்கள் ஆகியோரின் விருப்பத்துக்கு ஏற்ப நீதிமன்றங்கள் செயல்படவேண்டியது வரும்.
  • நீதிதேவதை மன்னிக்கமாட்டாள்
  • இந்த பிரச்னையின் தீவிரத்தை அறிந்து உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய அரசு, தகுந்த நடவடிக்கையை மேற்கொண்டு, குற்றவாளிகள், ஆள் பலம் கொண்டு செயல்படும் சாதி, இனத் தலைவர்கள், தீவிரவாத எண்ணங்கள் கொண்டவர்கள் ஆகியோரிடம் இருந்து இந்த புனிதமான வழக்கறிஞர் தொழிலை மீட்டெடுக்க வேண்டும்.
  • இதை செய்யாமல் போனால் நீதிபதிகள், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரையும், நீதிதேவதை மன்னிக்கமாட்டாள். இந்த மனு மீதான விசாரணையை வருகின்ற 28 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன்.
  • இவ்வாறு நீதிபதி கிருபாகரன் உத்தரவிட்டார்.
  • ஏற்கெனவே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று இதே நீதிபதி கிருபாகரன்தான் உத்தரவிட்டிருந்தார். இதற்கு எதிராக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த நீதிமன்ற அவமதிப்பை வழக்கு விசாரணையைத்தான் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக நேரடி ஒளிபரப்பு செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
English summary
The Madras High Court asked the Bar Council of India to abolish the 3 year law degree courses at the earliest and retain only five-year courses in the stream on par with other professional courses like medicine and engineering.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X