For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு… விடிய விடிய பேசி வலையில் வீழ்த்திய பெண்… தப்பிய மாணவனின் கதை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: மிஸ்டு கால் கொடுத்து காதல் வலையில் விழவைத்து தொழிலதிபர் மகனை கடத்திய கடத்தல் கும்பல் தலைவனையும், காதலியாக நடித்த இளம் பெண்ணையும் தேடும்பணி தீவிரமடைந்துள்ளது. தொழில் அதிபர் மகன் கடத்தலில் தேடப்படும் கல்லூரி மாணவி படத்தை போலீசார் நேற்று வெளியிட்டுள்ளனர்.

காதல் வலையில் விழ வைத்து ஐந்து கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தொழிலதிபரின் மகன் அபிஷேக், கடத்தலின் போது நடந்த சம்பவங்களை செய்தியாளர்களிடம் விவரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட அபிஷேக் நேற்று தனது தந்தை ரவிசுந்தரம் மற்றும் தாயாருடன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு வந்தார். ஆணையர் ஜார்ஜை சந்தித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செப்டம்பர்1ம் தேதி இரவு, என் செல்போனுக்கு ஒரு, 'மிஸ்டு கால்' வந்தது. அந்த எண்ணில் நான் தொடர்பு கொண்ட போது, பெண் ஒருவர் பேசினார். முதலில், 'சாரிங்க! எங்க மாமாவை கூப்பிடுவதற்கு பதிலாக, உங்க எண்ணிற்கு அழைத்து விட்டேன்' என, தெரிவித்தாள். மீண்டும் நள்ளிரவில் அதே எண்ணில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. மறுபடியும் நான் தொடர்பு கொண்ட போது, உங்க வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு... உங்ககிட்ட பேசிக்கிட்டே இருக்கணும் போல இருக்கு என தெரிவித்தாள்.

மேலும் அவள், கிண்டியில் உள்ள கல்லுாரியில், பி.காம். படிப்பதாக தெரிவித்தாள். தொடர்ந்து என்னை தொடர்பு கொண்டு நட்பு வளர்த்தாள். என்னை காதலிப்பதாகவும் தெரிவித்தாள். நானும் சம்மதம் தெரிவித்தேன். ஆனால், தன் முகத்தை காட்டாமல் இருந்து வந்தாள்.எனக்கும் அவளை நேரில் பார்த்துவிட வேண்டும் என, தோன்றியது. ஆனால், அவள் தவிர்த்து வந்தாள். கடந்த, 3ம் தேதி, 'என் பெற்றோர் வெளியூர் சென்று விட்டனர். நீங்கள் கோட்டூர்புரம் பாலம் அருகே வந்து விடுங்கள்' என்றாள்.

நானும் காதலியை நேரில் பார்க்கும் ஆசையில், பெற்றோரிடம், நண்பன் ஒருவனின் பிறந்தநாள் இரவு விருந்துக்கு செல்வதாக தெரிவித்து என்னுடைய மோட்டார் பைக்கில் வாகனத்தில் கோட்டூர்புரம் பாலம் அருகே அவளுக்காக காத்து நின்றேன். இரவு, 10:30 மணிக்கு அங்கு இரு கார்கள் வந்தன. அதில் ஒரு கார் என் அருகே வந்தது நின்றது. அதில் இருந்த பெண், 'நான் தான் பானு. யாராவது பார்த்து விடுவர். காருக்குள்ளே அமர்ந்து பேசலாம்'என்று கூறினாள். நான் காரின் கதவை திறந்தபோது, பின்னால் இருந்து ஒருவன் என்னை காருக்குள் திடீரென தள்ளினான்.

நான் கூச்சல் போடவே, கை, கால்கள், வாயை கட்டி, இருக்கைக்கு அடியில் படுக்க வைத்து, கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் கத்தி, அரிவாளை வைத்து, 'சத்தம் போட்டால் குத்திவிடுவோம்' என, மிரட்டினர். நான் பானுவை கெடுத்துவிட்டதாகவும் தெரிவித்தனர். பின், வாயை திறந்து, மதுவை ஊற்றினர். பிடிக்காது என தெரிவித்ததால் அடித்தனர். பயந்து நானும் குடித்துவிட்டேன். இதனால் தலைசுற்றல் ஏற்பட்டது.

ஒரு மணிநேர பயணத்துக்கு பின், ஒரு வீட்டில் என்னை அடைத்தனர். மதன் மற்றும் அவனது கூட்டாளிகள் முகத்தில் குத்தியதால் கண் அருகே எனக்கு காயம் ஏற்பட்டது.
இரவு சாப்பாடு எதுவும் தரவில்லை. அடுத்த நாள் காலை காபி தந்தனர்; பின், அடிக்கவில்லை.பின், ஒரு காரில் என்னை ஏற்றினர். உடன் பெண் ஒருத்தி இருந்தாள். காரை மதன் ஓட்டினான்.என்னுடன் இருந்த பெண், 'உன் தந்தை பணம் கொண்டு வருகிறார். அவர் வந்த பின், உன்னை ஒப்படைத்து விடுகிறோம்' என, தெரிவித்தாள். போலீசாரால் உயிர் பிழைத்தேன் என்று அபிஷேக் தெரிவித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், அபிஷேக்கை கடத்தல்காரர்கள் சினிமா படபாணியில் திட்டமிட்டு கடத்தி இருக்கிறார்கள். 2 குழுவாக செயல்பட்டு கடத்தலை அரங்கேற்றி இருக்கிறார்கள். கடத்தல் கும்பல் தலைவன் மதன் தலைமையில் ஒரு குழுவினர் அபிஷேக்கை கடத்திச்சென்று சிறை வைத்துள்ளனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதாம் உசேன் உள்ளிட்ட 3 பேரும் தொழில் அதிபர் ரவிசுந்தரத்திடம் பணம் கேட்டு பேரம் பேசி, பணத்தை வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கும்பல் பிடிபட்டால், இன்னொரு கும்பல் தப்பிச்சென்று விடலாம் என்ற திட்டத்துடன் இவ்வாறு 2 குழுவாக செயல்பட்டுள்ளனர்.

பழி வாங்கும் நடவடிக்கை

பழி வாங்கும் நடவடிக்கை

சென்னையை அடுத்த ஊரப்பாக்கத்தில் குர்ஷித் வசிக்கிறார். அவரது வீட்டில்தான் அபிஷேக்கை சிறை வைத்தனர். கணவரை பிரிந்து வாழும் குர்ஷித் தனது காதலன் மதனுக்காகவும், ரூ.10 லட்சம் கிடைக்கும் என்ற ஆசையிலும் கடத்தல் திட்டத்தில் சேர்ந்தார்.மதன், தொழில் அதிபர் ரவிசுந்தரத்திடம் வேலை பார்த்தவர். மதன் மீதான புகாரை அடுத்து அவரை வேலையை விட்டு துரத்தி விட்டார் ரவிசுந்தனம். அதற்கு பழிவாங்கவும், பணம் சம்பாதிக்கவும் ஆசைப்பட்டு அபிஷேக்கை கடத்திச்சென்று சிறை வைத்திருந்தான்.

7 தனிப்படை அமைப்பு

7 தனிப்படை அமைப்பு

கடத்தல்காரர்களின் இந்த வியூகத்தை தெரிந்து கொண்ட நாங்கள் அதை உடைக்க புதிய வியூகம் அமைத்து 7 தனிப்படையை களத்தில் இறக்கினோம். முதலில் ரவிசுந்தரம் போலீசில் புகார் கொடுத்ததை வெளியில் தெரியாத அளவிற்கு மறைத்து விட்டோம். கடைசி நிமிடம் வரை அதை கடத்தல்காரர்களுக்கும் தெரியாதபடி பார்த்துக்கொண்டோம். ரவிசுந்தரமும் கடத்தல்காரர்களிடம் பணம் தருவதாக பேசிக்கொண்டே இருந்தார். பணம் கிடைத்துவிடும் என்று கடத்தல்காரர்களை நம்ப வைத்தோம்.

பத்திரமாக மீட்பு

பத்திரமாக மீட்பு

இன்னொருபுறம் கடத்தல்காரர்களின் நடமாட்டத்தை ரகசியமாக கண்காணித்தோம். தென் சென்னை முழுவதும் போலீஸ் ரோந்து படையை கடைசி நேரத்தில் முடுக்கி விட்டோம். எந்த பக்கமும் தப்பிச்செல்ல முடியாத அளவிற்கு கடத்தல்காரர்களுக்கு இக்கட்டை உண்டாக்கினோம். இதனால் காரை சாலை ஓரம் விட்டு, விட்டு கடத்தல்காரர்கள் தப்பித்தால் போதும் என்று ஓட்டம் பிடித்தனர். அபிஷேக் பத்திரமாக மீட்கப்பட்டார். தனிப்படை போலீசாரின் செயல்பாடு பாராட்டுக்குரியது என்றார்.

கடத்தல் கும்பல் தலைவன்

கடத்தல் கும்பல் தலைவன்

இந்த வழக்கில் கடத்தல் கும்பல் தலைவன் மதன், காதல் நாடகம் நடத்திய கல்லூரி மாணவி பானு உள்ளிட்ட மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கல்லூரி மாணவி பானுவை பிடிக்க தனிப்படை போலீசார் திருச்சி சென்று தேடினார்கள். ஆனால் அவர் சிக்கவில்லை. தொடர்ந்து தேடுதல் வேட்டை நடக்கிறது. கடத்தல் கும்பல் தலைவன் மதனை தேடி தனிப்படை சாத்தூர் சென்றுள்ளது.

English summary
The police team working on the kidnap of a businessman’s son went to great lengths to ensure that their plans worked without hiccups to rescue the victim unhurt. A police officer went as far as to hide in the boot of the Poes Garden businessman’s car that was being tailed by the outlaws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X