For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கூடங்குளத்தை சுற்றி குண்டுகள்.. சதியா, விதியா?, ஊடகங்கள் சொல்வது உண்மையா?

By Veera Kumar
Google Oneindia Tamil News

நெல்லை: கூடங்குளம் சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள மீனவ கிராமங்களில் அவ்வப்போது, நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படுவது தற்போது ஊடகங்களில் பரபரப்பு செய்தியாகிவருகிறது. இந்த நாட்டு வெடிகுண்டுகளுக்கும், கூடங்குளம் பாதுகாப்புக்கும் முடிச்சு போடுகின்றன தேசிய ஊடகங்கள். ஆனால், உண்மை அதுவல்ல என்கிறது கள நிலவரம்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின் நிலையம் ஆரம்பிக்கப்படும் என்ற உத்தரவு வந்தாலும் வந்தது, அந்த ஏரியாவே சர்ச்சைகளின் மையப்புள்ளியாகியது. மக்களுக்கு தீமை விளைவிக்கும் அணுமின் நிலையங்களை அனுமதியோம் என்று உதயகுமார் தலைமையில் மக்கள் அறவழியில் போராட்டத்தில் குதித்தது முதல் கூடங்குளம் என்ற பெயர் நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டது. எனவே அங்கு இருமினாலும், தும்மினாலும் அது தேசிய செய்திதான்.

மீனவர் கிராமங்களில்

மீனவர் கிராமங்களில்

இதில் சமீபத்தில் இணைந்துள்ளதுதான் வெடிகுண்டுகள் சர்ச்சை. கூத்தங்குழி மீனவர் கிராமத்தில் இருந்து 150க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது சமீபத்திய சர்ச்சைக்கு காரணம். இடிந்தகரை உள்ளிட்ட கூடங்குளத்தை சுற்றியுள்ள பல மீனவ கிராமங்களிலும் வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்படுவது தற்போதெல்லாம் ஊடகங்களில் இடம்பிடிக்கும் செய்தியாகியுள்ளது.

சம்மந்தம் இல்லை

சம்மந்தம் இல்லை

இந்த குண்டுகளுக்கும், கூடங்குளம் அணுமின் நிலைய பாதுகாப்புக்கும் முடிச்சு போட்டு மகிழுகின்றன தேசிய ஊடகங்கள். அணுமின் நிலையத்துக்கு ஆபத்து என்று அலாரம் அடிக்கின்றன. ஆனால், சர்க்கரை பொங்கலுக்கு, வடகறி போன்ற சம்மந்தம் இல்லாத காம்பினேஷன் என்கின்றன கள நிலவரம்.

மீனவர்கள்

மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்டம், வீரபாண்டியன்பட்டனம், ஆலந்தலை, மணப்பாடு, பெரியதாழை, நெல்லை மாவட்டம் கூடுதாழை, கூட்டப்பனை, பரதர் உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை ஆகிய கடற்கரை கிராமங்களில் 99 சதவீதம் மீனவர் சமூகத்தினர் வசிக்கின்றனர். இவை அனைத்தும் சராசரியாக 10 கிலோ மீட்டர்கள் இடைவெளியில் அமைந்துள்ளன.

நடுக்கடலில் மோதல்

நடுக்கடலில் மோதல்

இக்கிராமங்களிலுள்ள மீனவர்கள் தங்களுக்குள் பெண் எடுத்து பெண் கொடுத்துக்கொள்வது வழக்கம். எவ்வளவுக்கு எவ்வளவு பாசத்தோடு பழகிக்கொள்கிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு, தொழில் என்று வந்துவிட்டால் இம்மக்கள், ஆக்ரோஷமாக மோதிக்கொள்வதும் வழக்கம். கடலுக்குள் மீன்பிடிப்பதில் தங்கள் ஊர் எல்லை எதுவரை என்பதில் மீனவர்களுக்கு இடையே நடுக்கடலில் அவ்வப்போது மோதல்கள் எழுவது 40 வருடங்களுக்கும் மேலாக நடக்கும் அக்கப்போர்.

பராக்கிரமம்

பராக்கிரமம்

இரும்பு ஈட்டிகளில் தொடங்கி, நாட்டு வெடிகுண்டுகள் வரை இந்த கடல் யுத்தத்தில் பயன்படுத்தப்படுவது உண்டு. இதில் எந்த கிராமத்து மீனவர்கள் தங்கள் பராக்கிரமத்தை நிலைநாட்டுகிறார்கள் என்பதை வைத்துதான் அந்த ஊரின் மானம், மரியாதை நிர்ணயிக்கப்படுகிறது. மட்டுமின்றி, கடலுக்குள்ளும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியும். கடந்த பல ஆண்டுகளில், நடுக்கடலில் சண்டையிட்டு, திசையன்விளை, நாகர்கோயில், நெல்லை மருத்துவமனைகளில் குத்துபட்டு சிகிச்சை பெற்ற மீனவர்கள் எத்தனை பேர் என்று உளவுத்துறை கணக்கெடுத்தாலே உண்மை புரியும்.

குடிசைதொழில் போல குண்டுகள்

குடிசைதொழில் போல குண்டுகள்

இந்த கடல் யுத்தத்துக்காகவே, வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து வைப்பது பல மீனவர் கிராமங்களில் வழக்கமான ஒன்றாக இருந்துவந்துள்ளது. மோதல் பெரிய அளவில் போய், மரணம், கொலை முயற்சிகள் நடக்கும்போதுதான் காவல்துறை தலையிடும். மற்றபடி காவல்துறை ஊருக்குள் போனாலே, நாங்கள் கடலுக்குள் தீர்த்துக்கொள்கிறோம், நீங்கள் வெளியே போங்கள் என்பதுதான் மீனவர் கிராம ஆண்கள், பெண்களிடமிருந்து வரும் பதிலாக இருக்கும். அல்லது படகில் கடலுக்குள் தப்பி ஓடிவிடுவர். கடல்கரை வரை சென்று எட்டிப்பார்த்துவிட்டு ஏட்டைய்யாக்கள் திரும்பிவிடுவார்கள்.

பிறருக்கு தொல்லையில்லை

பிறருக்கு தொல்லையில்லை

இந்த மோதல் மீனவர்களுக்குள் மட்டுமே நடைபெறுவதாலும், கடலுக்குள்தான் பெரும்பாலும் நடப்பதாலும், அதை பெரிய விஷயமாக காவல்துறை எடுத்துக்கொண்டதும் இல்லை. தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்து இந்த மீனவர் கிராமங்களை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் திருச்செந்தூர், உடன்குடி, திசையன்விளை, ராதாபுரம், கூடங்குளம் போன்ற டவுன்களில் பெரும்பான்மையாக நாடார் சமுதாயத்து மக்களும், கணிசமாக தலித் இனத்து மக்களும் வசிக்கிறார்கள். ஆனால், மீனவர்கள் எவ்வளவுதான் ஆக்ரோஷமானவர்களாக இருந்தாலும், பிற சமூக மக்களுடன் நல்லிணக்கமாகவே நடந்து கொள்வது வழக்கம்.

நாவலில் பதிவு

நாவலில் பதிவு

இப்படி மீனவர்கள் தங்களுக்குள் மோதி, தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளாமல், நவீனங்களை கண்டுகொள்ளாமல் தனி ராஜாங்கம் நடத்திவருவதை, உவரியை சேர்ந்த அதே மீனவ சமூகத்தை சேர்ந்த ஜோ டி குரூஸ், சாகித்ய அகாடமி விருது பெற்ற தனது, கொற்கை நாவலில் விரிவாக கூறியுள்ளார். எனவே, இது பதிவு செய்யப்பட்ட ஒரு ஆவணமாகிறது. நாட்டு வெடிகுண்டுகளை குடிசை தொழில்போல சில மீனவ கிராமங்கள் தயாரித்து வருவது நெல்லை, தூத்துக்குடி மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிந்த விஷயம்தான்.

யாருக்காக இந்த மசாலா?

யாருக்காக இந்த மசாலா?

ஆனால், இப்போது, நாட்டு வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்படும்போது மட்டும், அதற்கு கூடங்குளம் மசாலா தடவப்படுகிறது. கூடங்குளத்துடன் முடிச்சு போட்டு மீனவர் சமுதாய மக்களை, தீவிரவாதிகள் என்பது போல சுட்டிக்காண்பிப்பதும், அதன்மூலம், அவர்களை வாழ்விடங்களைவிட்டு விரட்டிவிட்டு தாது மணல் கடத்தல் மாஃபியாக்களுக்கு துணை போவதுதான் இதன் இறுதி பயனாக இருக்குமே தவிர, அந்த மண்ணின், பூர்வ குடிமக்களான அவர்களின் உண்மையான உணர்வுப்பூர்வ பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த மசாலா எந்த வகையிலும் உதவாது.

English summary
More than 200 country-made bombs were recovered during raids in two coastal villages near Kudankulam in the district on Saturday, police said. But it no where connected with Kudankulam Nuclear Power Plant protection.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X