For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.வு.க்கு மாற்றாகவே மக்கள் நலனுக்காக கூட்டியக்கம்: சி.பி.எம்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும் ஆட்சி மாற்றத்துக்காகவும் மக்கள் நலனுக்கான கூட்டியக்கம் உதயமாகி இருப்பதை வரவேற்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பில் இருந்து வரும் அவதூறுகள், அலறல்கள், அங்கலாய்ப்புகளிலிருந்தே இந்தக் கூட்டியக்கம் தமிழக அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் மார்க்சிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு கூட்டம் அக்டோபர் 7, 8 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ. வாசுகி தலைமை வகித்தார்.

கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே. ரங்கராஜன், அ.சவுந்தரராசன், பி. சம்பத், கே. பாலகிருஷ்ணன் உள்ளிட்ட மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

CPM wlecomes Vaiko lead PWF

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

மக்கள் நல கூட்டியக்க செயல்பாட்டிற்கு வரவேற்பு

தமிழக மக்களின் நலன்களை காப்பதற்கான போராட்டப் பாசறையாக மக்கள் கூட்டியக்கம் ஜூலை 27ம் தேதி உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் மலிந்துள்ள ஊழல், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கு, அதிகரித்து வரும் மதவெறி, தமிழகத்தின் நடந்துவரும் சாதி ஆணவக் கொலைகள் மற்றும் தீண்டாமைக் கொடுமை மற்றும் தமிழகத்திற்கு மத்திய அரசு இழைத்து வரும் நயவஞ்சகம், உலக மயம் என்ற பெயரில் திணிக்கப்படும் கார்ப்பரேட் ஆதரவு, பொருளாதாரக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என இந்த இயக்கம் சூல் கொண்ட போதே சூளுரை மேற்கொண்டது.

தேர்தல் நேரத்தில் தொகுதிகளை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கூட்டணிகள் உருவாக்கப்படும் தமிழக அரசியல் கலாச்சார சூழலில், போராட்டக் களத்திலேயே கட்சிகளிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைப்பும் உருவாக்கப்பட வேண்டும் என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு தொடர்ச்சியாக பல்வேறு மக்கள் நல இயக்கங்களை நடத்திவருகிறது.

தமிழகத்தில் இடையறாது நடந்து வரும் மணல், கிரானைட், தாதுமணல் கொள்ளையை தடுக்க வேண்டும் , மதுவிலக்கு, ஊழலற்ற நிர்வாகம், சாதி, மதவெறி எதிர்ப்பு, தமிழக உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஆக. 13ம் தேதி ஐந்து மண்டலங்களில் பல்லாயிரம் மக்கள் பங்கேற்ற பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஆந்திராவில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், செப்.2ம் தேதி அகில இந்திய அளவில் தொழிலாளி வர்க்கம் நடத்திய வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து பொதுக் கூட்டம், இதன் தொடர்ச்சியாக காவிரி பாசனப் பகுதியை பாலைவனமாக்க முயலும் மீத்தேன், ஷேல் கேஸ் திட்டங்களை எதிர்த்து திருவாரூரில் அக்.5ஆம் தேதி பிரம்மாண்டமான பொதுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் அக்.5 மக்கள் நல கூட்டியக்கத்தின் தலைவர்கள் கூடி, இயக்கத்தின் குறைந்தபட்ச செயல்திட்டத்தை தயாரிக்க குழு ஒன்றை உருவாக்கினர். இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ செயல்பட தீர்மானிக்கப்பட்டார். இந்த இயக்கத்தின் தலைவர்கள் வரும் அக். 23ஆம் தேதி சென்னையில் கூடி தமிழக சட்டமன்ற தேர்தல் அணுகுமுறை குறித்தும், குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்தும் விவாதிக்க உள்ளனர். குறைந்தபட்ச செயல்திட்டத்தை நவம்பர் 2 ஆம் தேதி சென்னையில் வெளியிடுவது என்றும் விளக்கப் பொதுக் கூட்டத்தை நவம்பர் மாதம் கோயம்புத்தூரில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்து வரும் அவதூறுகள், அலறல்கள், அங்கலாய்ப்புகளிலிருந்தே இந்தக் கூட்டியக்கம் தமிழக அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இன்றைக்கு தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிற பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளும் கட்சியான அதிமுக, ஆண்ட கட்சியான திமுக ஆகிய இரண்டுமே பொறுப்பாகும். ஊழல், லஞ்சம், இயற்கை வளக் கொள்ளை, அனைத்திலும் கமிஷன் மயம் ஆகிய அனைத்து சீர்கேடுகளையும் உருவாக்கியதில், வளர்த்ததில் இரு கட்சிகளுக்கும் பங்கு உண்டு. பகுத்தறிவு பாரம்பரிய மிக்க தமிழகத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடப்பதும், சாதிய அணி திரட்டல் நடப்பதும் , தீண்டாமைக் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்வதற்கும் இரு கட்சிகளின் அணுகுமுறைக்கும் சம்பந்தமில்லை என்று கூறிவிடமுடியாது. மத்தியில் ஆண்ட காங்கிரஸ், இப்போது ஆளும் பாஜக ஆகிய கட்சிகள் பின்பற்றிய அதே தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையைத்தான் தமிழகத்தில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பின்பற்றுகின்றன.

மதவெறி எதிர்ப்பில் உறுதியில்லாத தி.மு.க, அ.தி.மு.க.

அதிமுக, திமுக ஆகிய இரண்டுக்கும் மாற்றாக ஒரு புதிய மாற்று தேவையாகிறது. அந்த அடிப்படையில்தான் காலத்தின் தேவையாக, களத்தின் விளைச்சலாக, போராட்ட வானத்தில் உதயமான புதிய நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் நல கூட்டியக்கம் உருவெடுத்துள்ளது. தேர்தல் அவசரத்தில், அப்போதைய தேவைக்காக மட்டும் அமைக்கப்படும் அணி அல்ல இது. மக்கள் நலனை பாதுகாப்பதற்காக திட்டவட்டமான திட்டத்தின் அடிப்படையில் உருவெடுக்கும் அணிவகுப்பு இது.

மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து உருவாக்க உள்ள குறைந்தபட்ச செயல்திட்டம் என்பது தமிழக அரசியலில் மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி என்பது மட்டுமல்ல எழுச்சிமிகு வரலாற்றுக்கான புதிய அத்தியாயமும் ஆகும்.

தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும் ஆட்சி மாற்றத்திற்கு அடிகோலவும் உருவாக்கப்பட்டுள்ள மக்கள் நலன் காக்கும் கூட்டியக்கத்தின் செயல்பாடுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத அதிமுக, திமுக இல்லாத புதிய அணி தேவை என்று உணரும், பல கட்சிகள் இதில் இணையும் என்று எதிர்பார்க்கிறது.

நுழைவுத் தேர்வு தேவையில்லை

பொது மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அகில இந்திய மருத்துவக் கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு வலியுறுத்துகிறது. இந்த முயற்சி என்பது உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே அளித்துள்ள தீர்ப்புக்கு எதிரானது மட்டுமல்ல, மாநிலங்களின் உரிமையை பறிக்கக்கூடியது. கிராமப்புற மாணவர்கள், சமூகப் பொருளாதார ரீதியாக பின்தங்கிய ஏழை-எளிய மாணவர்களுக்கு எதிரானது. எனவே இந்த முயற்சியைக் கைவிட்டு இப்போதுள்ள முறையே தொடரவேண்டும் என கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

படுகொலைக்கு கண்டனம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள ராசாக்கவுண்டன் பாளையத்தைச் சேர்ந்த விசைத்தறி தொழிலாளி தங்கவேல் மற்றும் அவரது 11 வயது மகள் மகாலெட்சுமி ஆகியோர் கொலை செய்யப்பட்டுள்ளதை கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

விசைத்தறி குடோன் உரிமையாளர் செல்வத்திடம், தங்கவேல் வேலை செய்வதற்கு அட்வான்ஸ் பெற்றுள்ளார். தறியில் வேலைசெய்யும் பொழுது விபத்தில் சிக்கியதால் அவர் வேலைக்குச் செல்ல முடியவில்லை. அவருக்கு எந்தவித இழப்பீடும் வழங்காததோடு முன்பணத்தைக் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் தங்கவேலும் அவருடைய மகளும் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

காவல்துறையிடம் முன்னதாகவே புகார் செய்யப்பட்டிருந்தும் அவர்கள் அலட்சியமாக இருந்ததாலேயே இந்தப் படுகொலைகள் நடந்துள்ளது. இந்தக் கொடூரக் கொலையில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும். அலட்சியமாக இருந்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தங்கவேலின் மனைவிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
CPM State Unit passed a resolution to welcome the Vaiko lead PWF.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X