For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தை மிரள வைக்கும் ரியல் எஸ்டேட் கொலைகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் அரசியல் படுகொலைகளும், ரியல் எஸ்டேட் தொழில் போட்டியினால் அரசியல் கட்சியினர் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. கிரிமினல்களாக இருந்தால்தான் கட்சியில் சீட் கிடைக்கும் என்ற அளவிற்கு இன்றைக்கு அரசியல் மாறி( நாறி)போய் கிடக்கிறது என்பதே உண்மை.

2011 தமிழக சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 738 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் 143 பேர் கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்கள். அ.தி.மு.க வேட்பாளர்கள் 160 பேரில் 53 பேர் குற்றப் பின்னணி கொண்டவர்கள். தி.மு.கவின் 119 வேட்பாளர்களில் 24 பேர் கிரிமினல் பின்னணி உடையவர்கள். பாஜக, பா.ம.க, தே.முதி.க. ஆகிய கட்சிகள் அடுத்த இடங்களில் இருந்தன.

அ.தி.மு.க 49 பேர், தி.மு.க 7 பேர், தே.மு.தி.க 6 பேர்

அ.தி.மு.க 49 பேர், தி.மு.க 7 பேர், தே.மு.தி.க 6 பேர்

2011 சட்டமன்ற தேர்தலில் வென்று சட்டமன்றத்துக்குள் நுழைந்த 234 எம்.எல்.ஏக்களில் 70 பேர் மீது வழக்குகள். இவர்களில் 37 பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தல் போன்ற மிகவும் கடுமையான சீரியஸான வழக்குகள் இருந்தன. கட்சிவாரியாகப் பார்த்தால், அ.தி.மு.கவினரில் 49 பேர், தி.மு.கவினரில் 7 பேர், தே.மு.தி.கவினரில் 6 பேர் மீது வழக்குகள் உள்ளன.

தனியரசு... 36 வழக்குகள்

தனியரசு... 36 வழக்குகள்

தமிழக எம்.எல்.ஏக்களில் அதிக வழக்குகள் உள்ளவர் கொங்கு இளைஞர் பேரவையின் தலைவர் தனியரசு. 2011 சட்டசபைத் தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றார். அவர் மீது 36 வழக்குகள். இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கொலை, கொலை முயற்சி, திருட்டு, பயங்கர ஆயுதங்கள் வைத்திருத்தல் என அவர் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் உள்ளன.

தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் கொடிகட்டிப் பறக்கிறது. அதனால், தமிழகத்தில் அது தொடர்பான குற்றங்களுக்கும் பஞ்சமில்லை.

காரணம் அதிகாரப்பசியும், மண்மீது கொண்ட மோகமும்தான் இந்த கொலைகளை செய்ய தூண்டுகோலாய் இருக்கிறது. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல.

உள்ளாட்சி தொடங்கி

உள்ளாட்சி தொடங்கி

தமிழகத்தில் 2011ம் ஆண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெற்றன. அவற்றில், வெற்றிபெற்ற பஞ்சாயத்துத் தலைவர்களில் சுமார் 40 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் பஞ்சாயத்துத் தலைவர்கள் 13 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அமைச்சரின் தம்பி கொலை

அமைச்சரின் தம்பி கொலை

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைச்சர் பி.வி.ரமணாவின் தம்பி செல்வம், கடந்த அக்டோபர் 10ம் தேதி கூலிப்படையினரால் கொலைசெய்யப்பட்டார். கூலிப்படையை ஏவிய நபர், செவ்வாய்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன். இருவருமே அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள். ரியல் எஸ்டேட் போட்டியே கொலைக்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

2006ம் ஆண்டு, அம்பத்தூர் அ.தி.மு.க நகரச் செயலாளர் எம்.ஆர்.ரவி, கூலிப்படையினரால் கொலை செய்யப்பட்டார். ரவியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் ஜெயலலிதா. கூலிப்படையை ஏவியவர் வெள்ளை ரமேஷ். இவரும் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். இந்தக் கொலைக்கும் ரியல் எஸ்டேட் தொழில் போட்டியே காரணம் என்று சொல்லப்பட்டது. கும்மிடிப்பூண்டி வட்டம் கண்டிகை பேரி ஊராட்சிமன்றத் தலைவர் திராவிடபாலு என்ற பாலு, 2013ம் ஆண்டு மே 15ம் தேதி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். சொந்தக் கட்சியினரே இவரைப் போட்டுத்தள்ளிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளது.

ரியல் எஸ்டேட் தொழில் போட்டி

ரியல் எஸ்டேட் தொழில் போட்டி

தமிழக மாவட்டங்களில் அதிக அளவில் கொலைகள், குற்றங்கள் நிகழ்கிற முதல் இடத்தைப் பிடித்து இருப்பது காஞ்சிபுரம். 2006ம் ஆண்டு முதல் இந்த மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, வெட்டுக்குத்து, நிலமோசடி, கட்டப்பஞ்சாயத்து போன்ற குற்றங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. காரணம் ஸ்ரீபெரும்புதூர் உட்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் சூடுபிடித்தது. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்படுவதற்கு ரியல் எஸ்டேட் தொழில் போட்டியும் முக்கியக் காரணமாக இருந்து வருகிறது.

எத்தனை கொலைகள்

எத்தனை கொலைகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், 2012ம் ஆண்டு முதல் தற்போது வரை, படுகொலை செய்யப்பட்ட அரசியல்வாதிகளின் பட்டியல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும். செங்கல்பட்டு நகராட்சியின் துணைத்தலைவர் ரவி பிரகாஷ் (தி.மு.க.), செங்கல்பட்டு கவுன்சிலர் சுரேஷ் (தே.மு.தி.க.), தே.மு.தி.க மாவட்ட பிரதிநிதி கண்ணதாசன், மண்ணிவாக்கம் ஊராட்சிமன்றத் தலைவர் புருஷோத்தமன் (அ.தி.மு.க.), மறைமலைநகர் ஒன்றியக் கவுன்சிலர் வேலு (அ.தி.மு.க.), பி.வி. களத்தூர் ஊராட்சிமன்றத் தலைவர் விஜயகுமார் (தி.மு.க.), ஸ்ரீபெரும்புதூர் ஒன்றிய பெருந்தலைவர் பி.பி.ஜி. குமரன் (அ.தி.மு.க.), சேத்துப்பட்டு ஊராட்சிமன்றத் தலைவர் சங்கர் (தி.மு.க.), பி.வி. களத்தூர் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் குப்பன் (அ.தி.மு.க.), பி.வி. களத்தூர் ஒன்றிய இளம்பாசறை தலைவர் நித்யானந்தம் (அ.தி.மு.க.), காஞ்சிபுரம் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட துணைச்செயலாளர் நாராயணன், காரணை புதுச்சேரி முன்னாள் தலைவர் சம்பத் (ம.தி.மு.க.), திருமணி முன்னாள் தலைவர் ராஜகோபால் (அ.தி.மு.க.), ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் பட்டியலில் இடம்பெறாத அரசியல் கொலைகளும் இன்னும் ஏராளம். ரியல் எஸ்டேட், மணல் கொள்ளை, கட்டப்பஞ்சாயத்து, அதிகாரப் போட்டி ஆகியவையே இந்தக் கொலைகளுக்கு முக்கியக் காரணங்கள்!

ஆறுபேர் கொடூர கொலை

ஆறுபேர் கொடூர கொலை

சேலத்தை அடுத்த தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ், அவரது மனைவி சந்திராம்பாள், மகன் ரத்தினம், மருமகள் சந்தானகுமாரி, அவர்களது குழந்தைகள் கௌதமன், விக்னேஷ்வரி ஆகிய ஆறு பேர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். 2010ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி, அந்தக் கோரச்சம்பவம் நிகழ்ந்தது. குப்புராஜுக்கு சொந்தமான நாலரை ஏக்கர் நிலம்தான், இந்தக் கோரக் கொலைகளுக்குக் காரணம். அன்றைக்கு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புடைய நிலம் அது. சொத்துகளைப் பிரித்ததில் குப்புராஜ் குடும்பத்தினருக்குள் பிரச்னை ஏற்படவே தி.மு.கவில் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவராகவும் பனமரத்துப்பட்டி ஒன்றியச் செயலாளராகவும் இருந்த பாப்பாரப்பட்டி சுரேஷிடம் பஞ்சாயத்து போனது. பாப்பாரப்பட்டி சுரேஷிடம் இருந்து குப்புராஜுக்கு மிரட்டல் வந்தது. அதன்பின், குப்புராஜ் உட்பட 6 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், குண்டாஸில் கைது செய்யப்பட்ட பாப்பாரப்பட்டி சுரேஷ், ஜாமீனில் வெளிவந்தார். இந்த பாப்பாரப்பட்டி சுரேஷ் திமுக ஆட்சியில் வேளாண் துறை அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் ஆவார்.

இ.கம்யூனிஸ்ட் ‘தளி’ ராமச்சந்திரன்

இ.கம்யூனிஸ்ட் ‘தளி’ ராமச்சந்திரன்

1993ல் அ.தி.மு.கவில் இருந்த என்.சி.ராமன், நாகமங்கலம் பஞ்சாயத்துத் தலைவர். அரசியல் காரணங்களுக்காக அவர் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 'தளி' தொகுதி எம்.எல்.ஏ ராமச்சந்திரன்
ராமச்சந்திரன், ராமச்சந்திரனின் அண்ணன் வரதராஜன் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டள்ளார். கொலையை நேரில் பார்த்தவர் என்.சி.ராமனின் தம்பி என்.சி.சந்திரசேகரன். சாட்சி சொல்லக்கூடாது என்று சந்திரசேகரனை மிரட்டினர். அதற்கு அவர் உடன்படவில்லை. 15.08.95 அன்று அவர் வெட்டி கொல்லப்பட்டார்.

கொடூர கொலை

கொடூர கொலை

பெரியார் திராவிடர் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பாளர் பழனி படுகொலை சம்பவம் தமிழகத்தையே மிரள வைத்தது. 5.7.2012ம் தேதி, பழனியும் அவரது மகன் வாஞ்சிநாதனும் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது இரண்டு டாடா சுமோ மற்றும் பைக்குகளில் ஒரு கும்பல் அதிரடியாகத் தோட்டத்துக்குள் நுழைந்தது. துப்பாக்கியால் பழனியை சுட்டனர். ரத்தவெள்ளத்தில் அவர் சாய்ந்தார். கொல்லப்பட்டவர் பழனிதான் என்பதை உறுதி செய்ய, பழனியின் தலையை தனியாக வெட்டி எடுத்துச் சென்று காரில் இருந்த நபர்களிடம் காட்டியிருக்கின்றனர். காரில் இருந்தவர்கள் ராமச்சந்திரனின் மாமனார் லகுமய்யா, அண்ணன் வரதராஜன், மச்சான் கேசவன். குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது செய்யப்பட்டார் ராமச்சந்திரன். இவ்வளவு பயங்கரமான குற்றப்பின்னணிக்கு காரண கர்த்தாவான ராமச்சந்திரன் மீது தா.பாண்டியன் தலைமையிலான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதுதான் கொடுமை.

பாஜகவில் குற்றவாளிகள்

பாஜகவில் குற்றவாளிகள்

பி.ஜே.பியின் கிரிமினல் வேட்பாளர் 'தூய்மையான' அரசியலை முன்னெடுப்பதாகக் கூறிக்கொள்கிற பி.ஜே.பியால், 2014 நாடாளுமன்றத் தேர்தலில், வேட்பாளராக நிறுத்தப்பட்டவர் கறுப்பு முருகானந்தம். பி.ஜே.பியின் மாநில பொதுச் செயலாளராக இவர் மீது கொலை முயற்சி வழக்குகள் 6, பயங்கர ஆயுதங்களால் காயப் படுத்துதல் 2, கொள்ளை 1, கலவரத்தை ஏற்படுத்துதல் 13, பயங்கர ஆயுதங்களை வைத்து கலவரம் உண்டாக்குதல் 9, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து தாக்குதல் 2 உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளனவாம்.

பாமகவில் பயங்கரம்

பாமகவில் பயங்கரம்

இன்றைக்கு உயர்மட்ட அரசியல்வாதிகள் தொடங்கி கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் வரை ரியல் எஸ்டேட் தொழிலில் படுதீவிரமாக இருக்கிறார்கள். இதனால் சமீபத்தில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் கே.ஏ.மூர்த்தி படுகொலை செய்யப்பட்டதற்கு காரணம் பா.ம.க-வுக்குள் இருந்த அதிகாரச் சண்டையே காரணம் என்று கூறப்படுகிறது. அதேசமயம் மூர்த்திக்கும் கொலைக்குற்றம் சாட்டப்பட்ட, பா.ம.க-வில் இருந்து வெளியேற்றப்பட்ட அகோரத்துக்கும் இடையே, தனியார் அனல் மின்நிலையம் ஒன்றுக்கு இடங்கள் வாங்கிக் கொடுப்பதிலும், பிரச்னை இருந்ததாகவும்,ரியல் எஸ்டேட் தொழில் போட்டியே இந்த கொலைக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அதிகாரபசியும் காரணம்

அதிகாரபசியும் காரணம்

அரசியலில் நீ பெரியவனா? நான் பெரியவனா என்பதும் கொலைகளுக்கு காரணமாக அமைகிறது. மதுரையில் நடைபயிற்சி சென்ற தா.கி கொலை செய்யப்பட்டார். அதேபோல திமுகவின் பொட்டு சுரேஷை பொட்டென்று போட்டனர். அந்த கொலைக்கு முக்கிய காரணகர்த்தாவை இன்னமும் பிடிக்க முடியாமல் போலீஸ் தடுமாறுகிறது. சமீபத்தில் கொலை செய்யப்பட்ட ஜமால்முகம்மது கொலையும் ரியல் எஸ்டேட் கொலைதான். இந்த வழக்கில் திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள், சகலை, கொழுந்தியாள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டுபிடிக்கமுடியாத கொலைகள்

கண்டுபிடிக்கமுடியாத கொலைகள்

தமிழக அரசியல் வட்டாரத்தை அதிர வைத்தது தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயத்தின் கொலை. மூன்று ஆண்டுகள் கடந்தும், கொலைக்கு யார் காரணம் என்கிற மர்மம் விலகவில்லை. 2011 நவம்பரில் திருச்சி பொன்மலை பகுதி அ.தி.மு.க செயலாளர் 'பன்னி' சேகர் கொலை, வழக்கறிஞர் மதியழகன் கொலை ஆகியவையும் திருச்சியை மிரட்டிய கொலைகள்.
ஆண்ட கட்சியினர், ஆளும் கட்சியினர்,மட்டுமல்லாது ஆளப்போவதாக கனவுகண்டு கொண்டிருக்கும் கட்சியினரும் இந்த குற்றப்பட்டியலில் எந்தவித பேதமும் இன்றி சிக்கியுள்ளனர்.
அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டிகளாலும் தொழில்போட்டிகளாலும் தலைநகர் சென்னை தொடங்கி மாநிலத்தின் பல பகுதிகளில் நிகழும் அரசியல் படுகொலைகள் தமிழக மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதே உண்மை.

English summary
Here is a round up on the criminal background of TN MLAs.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X