For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செல்லாத நோட்டு விவகாரம் … 1946, 1978 க்கும் 2016 க்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?

By R Mani
Google Oneindia Tamil News

- ஆர் மணி

நரேந்திர மோடி 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்று அறிவித்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகி விட்டது. அந்த அதிர்ச்சியிலிருந்து இந்தியா இன்னமும் மீளவே இல்லை. எப்போது மீளப் போகிறது என்பதற்கு எந்த உத்திரவாதமும் ஆட்சியாளர்களிடமிருந்து வரவில்லை.

எந்த ஒரு நாகரீக நாட்டின் பொருளாதாரமும் வலுவாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம் அந்த நாட்டின் நிதி நிர்வாகத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைதான். அந்த நம்பிக்கை இன்று இந்தியாவில் சிதைந்து சின்னாபின்னமாகிக் கிடக்கின்றது. ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பு இந்திய வங்கிகள் மீது மட்டுமின்றி நாட்டின் நிதி மேலாண்மை மீதே மக்களின் நம்பிக்கையை சிதைத்துச் சின்னாபின்னமாக்கி விட்டது என்று இதனால்தான் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாநிலங்களவையில் பேசும்போது குறிப்பிட்டார்.

Demonetisation Then and now!

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மூன்றாவது நடவடிக்கைதான் இது. ஆனால் கடந்த இரண்டு முறைகள் இம்முயற்சி மேற்கொள்ளப் பட்டதற்கும் தற்போது செய்யப் பட்டிருப்பதற்கும் சில அடிப்படை வேறுபாடுகள் இருக்கின்றன. அவற்றைப் பார்க்கலாம்.

20 ம் நூற்றாண்டில் இரண்டு முறை ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பு இந்தியாவில் செய்யப்பட்டது. முதல் அறிவிப்பு நாடு விடுதலை பெறுவதற்கு ஓராண்டுக்கு முன்பு 1946 ல் செய்யப் பட்டது. இரண்டாவது அறிவிப்பு 1978 ல் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருக்கும் போது அன்றைய ஜனதா கட்சி ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப் பட்டது.

ஜனவரி 12, 1946 ம் ஆண்டில் 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அறிவித்தனர். இந்த நோட்டுக்களை மாற்றிக் கொள்ள சொற்ப கால அவகாசமே கொடுக்கப் பட்டது. இந்திய மக்கள் தொகையில் அப்போது 3 சதவிகதம் பேர் மட்டுமே இவற்றைப் பயன்படுத்தி வந்தனர். இவற்றின் மதிப்பு அப்போது வெறும் 143 கோடி ரூபாயாக இருந்திருக்கிறது. கால அவகாசத்தில் 134 கோடி ரூபாய் திரும்ப ஒப்படைக்கப்பட்டு மாற்றிக் கொள்ளப் பட்டது. மீதமுள்ள 10 கோடி ரூபாய் திரும்பி வராமலே போய், செல்லாதது என்று அறிவிக்கப்பட்டது. அன்றைய பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் நேரடி மேற்பார்வையில் இது மேற்கொள்ளப்பட்டது. இது தற்பொது மேற்கொள்ளப் பட்டிருக்கும் ரூபாய் நோட்டு செல்லாதென்ற அறிவிப்புக்குச் சம்மானதுதான். இரண்டாம் உலகப் போரில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார இழப்பு மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் சுரண்டலால் இந்தியாவுக்கு ஏற்பட்டிருந்த அசாதரணமான பொருளாதார சிக்கலை சமாளிக்க இது மேற்கொள்ளப் பட்டது.

1978 ல் ஏற்பட்ட நிலைமை வித்தியாசமானது. 1978 ம் ஆண்டு ஜனவரி 16 ம் நாள் காலையில் அகில இந்திய வானொலி மூலம் ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் இனிமேல் நாட்டில் 1,000, 5,000 ரூபாய் மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்று அறிவித்தது. ஆனால் 1946 க்கும் 1978 க்குமான ஒரு பெரிய வித்தியாசம் ஒன்று உண்டு. 1946 ஐ போல 1978 ல் செல்லாத நோட்டுக்களை மாற்றிக் கொள்ள அவகாசம் கொடுக்கப் படவில்லை. ஆம். ஜனவரி 16, 1978 ல் ஒரே நிமிடத்தில் 1,000, 5,000 மற்றும் 10,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்று ரிசர்வ் வங்கி அறிவித்து விட்டது. அதாவது அந்த நொடியே இந்த ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழந்து போயின.

மற்றோர் விஷயம். 1946ல் ஒழிக்கப் பட்ட 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுக்களை 1954 ல் அரசு மீண்டும் கொண்டு வந்தது. இதற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு தரப்பிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பிக் கொண்டிருந்தது. 1966 ல் பிரதமரான இந்திரா காந்தி இடது சாரி பொருளாதார கொள்கைகளை கடைபிடித்தார். மன்னர் மானியத்தை ஒழித்தார். 1969 ல் வங்கிகளை தேசிய மயமாக்கினார். அப்போது கருப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஆலோசனைகளை வழங்க வான்சூ கமிட்டி என்ற ஒன்றை அவர் அமைத்தார். இந்த கமிட்டி 1960 களின் இறுதியில் கொடுத்த ஒரு அறிக்கையில் அதிக மதிப்பு கொண்ட 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுக்களை ஒழிக்க வேண்டும் என்று சிபாரிசு செய்தது. இந்த சிபாரிசைத்தான் மொரார்ஜி தேசாய் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து 1978 ல் செயற்படுத்தினார்.

இதில் மற்றோர் முக்கியமான விஷயம் 1946, 1978 ல் இந்த அறிவிப்புக்களை கொடுத்தது ரிசர்வ் வங்கிதான். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களோ அல்லது பிரதமரோ கிடையாது. 1978 ஜனவரியில் இது ஒரு அவசர சட்டமாக கொண்டு வரப்பட்டு பின்னர் அந்தாண்டு மார்ச்சில் நாடாளுமன்றத்தில் மசோதாவாக நிறைவேற்றப்பட்டுத்தான் 1,000, 5,000, 10,000 ரூபாய் நோட்டுக்கள் ஒழிக்கப்பட்டன. அதனால்தான் 1998 ல் வாஜ்பாய் அரசு மீண்டும் 1,000 ரூபாய் நோட்டை கொண்டு வந்தபொழுது அப்போதய நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை தாக்கல் செய்து. சட்ட திருத்தத்தின் மூலம்தான் மறுபடியும் 1,000 ரூபாய் நோட்டை அறிமுகப் படுத்தினார்.

ஆனால் இந்த முறை அறிவிப்பை பிரதமர் செய்திருக்கிறார். அதுமட்டுமின்றி நாடாளுமன்றத்திற்கு கொண்டு போயிருக்க வேண்டிய இவ்வளவு பெரிய விஷயத்தை ரிசர்வ் வங்கி சட்டம் 26, உப பிரிவு 2 ன் கீழ் மோடியே மேற் கொண்டிருக்கிறார். இதற்கு அர்த்தம் இனி வரும் ஆண்டுகளில் எவ்வளவு பெரிய ரூபாய் நோட்டுக்களையும் தன்னிச்சையாக அரசே இந்த சட்டத்தின் கீழ் புதியதாக அறிமுகப்படுத்த முடியும். எந்த மதிப்பு கொண்ட ரூபாயையும் செல்லாதென்று இந்த சட்டப்பிரிவின் கீழ் நினைத்த நேரத்தில் அரசால் அறிவித்து விட முடியும். இது ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை காலின் கீழ் போட்டு மிதிப்பதுடன், நாடாளுமன்றத்தின் மாட்சிமையையும் துவம்சம் செய்வதாகும். ஆகவே ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடித்து கையில் பிடித்து இன்று சுவைத்துக் கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.

கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 16 நாடுகள் demonetization என்று சொல்லப்படும் ரூபாய் நோட்டுக்கள் செல்லாதென்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா தவிர வேறெந்த நாட்டிலும் இது வெற்றி பெறவில்லை.

1969 ல் அமெரிக்கா 100 டாலர்களுக்கு மேற்பட்ட அதனது அனைத்து கரன்சி நோட்டுக்களையும் செல்லாதென்று அறிவித்தது. அதன் பிறகு இதில் அமெரிக்கா கைவைக்கவில்லை. இப்போதும் அங்கே உயர்மதிப்பு நோட்டு 100 டாலர்தான்.

மியான்மார், பாகிஸ்தான், ஜிம்பாப்வே, அன்றைய சோவியத் யூனியன், கானா, காங்கோ, நைஜீரியா, வட கொரியா போன்ற நாடுகளில் படு மோசமான தோல்வியைத்தான் demonetization தழுவயிருக்கிறது. பொருளாதாரம் முற்றிலும் முடங்கிப் போன நாடுகளிலும், பண நோட்டுக்கள் மிகவும் அதிகமாக, அதற்கான மதிப்பிழந்து புழக்கத்திலிருந்த நாடுகளிலும்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.

ஆனால் ஆண்டுக்கு 8 சத விகித பொருளாதார வளர்ச்சியை கொண்டிருந்த, உலகின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றான ஒருநாட்டில் இந்த நடவடிக்கை என்பது தற்கொலைக்கு சமமானது என்றே பார்க்கப் படுகிறது.
இதனிடேயே மோடியின் நடவடிக்கை பற்றி கருத்து தெரிவித்த நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுனர் டாக்டர் அமர்தியா சென், இது, 'முட்டாள்தனமானது, மனிதாபினமற்றது, சர்வாதிகரத் தன்மை கொண்டது' என்று விமர்சித்தார்.

'ரூபாய் நோட்டுகளின் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கையை இது சிதைத்துள்ளது. இதனது பலன்கள் பொருளாதாரத்தின் மீது கடுமையானதாக இருக்கும்,' என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Demonitization என்பது எந்த பொருளாதார நிபுணரும் நடப்பதற்கு அஞ்சி நடுங்கும் பாதையாகும். அறிவாளிகள் பயணப்பட அஞ்சும் பாதையில் முட்டாள்கள் சர்வசாதாரணமாக நடந்து செல்லுவார்கள் என்ற பொன்மொழியைத்தான் தற்போது இந்தியாவில் நடக்கும் காரியங்கள் மீண்டும் உண்மை என்று நிருபித்துக் கொண்டிருக்கின்றன!

English summary
Here is the comparison of Demonetisation in 1946, 1978 and 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X