For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தி.மு.க.வை அழித்துவிடலாம் என எவனும் கனவு காண தேவையில்லை: கருணாநிதி காட்டம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: திராவிட முன்னேற்றக் கழகத்தை அழித்துவிடலாம் என எவனும் கனவு காண தேவையில்லை என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி காட்டமாக கூறியுள்ளார்.

சென்னையில் நேற்று நடைபெற்ற தி.மு.க. தலைமை செயற்குழுக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பெயரைக் குறிப்பிடாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டி கருணாநிதி பேசியதாவது:

DMK cannot be destroyed: Karunanidhi

முதலில் தி.மு.க., பிறகுதான் நாம் என்ற உணர்வு அனைவருக்கும் வேண்டும். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர்கள் என அனைவரின் முன்னேற்றத்துக்கும் தி.மு.க.வே காரணம். நாம் விழித்திருக்காவிட்டால், ஹிந்தி ஆதிக்கம் தமிழகத்தில் கோலோச்சியிருக்கும். சாதி மதமற்ற சமுதாயம் என்று இன்று முழக்கமிடும் கட்சிகள் அனைத்தும் நாம் அதைக் கூறியபோது, நம்மை எள்ளி நகைத்தவர்கள் தான். இன்றைக்கு நம்மை ஏற்றுள்ளனர்.

இந்த நாட்டில், குறிப்பாக தமிழகத்தில் உருவாகியுள்ள ஒரு ஆட்சி, நம்முடைய சமுதாய கருத்துகளுக்கெல்லாம் எதிரான ஒரு ஆட்சி. இப்போது தமிழகத்திலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றால், அதை வரவிடுவதற்கு யார் காரணம் என்பதை அறிய வேண்டும். அந்தக் காரணத்தை அறிந்து, அடி வேரை, ஆணி வேரைக் கிள்ளியெறிந்தால், அந்த ஆட்சியினால் பரவுகின்ற நச்சுக்காற்று தடுக்கப்படும். அப்படித் தடுக்கப்படுவதற்கு எல்லோரும் ஒன்று சேருவோம் என்று தான் உங்களையெல்லாம் நான் அழைக்கிறேன்.

தமிழ்நாடு என்றால், தமிழை அங்கே நாங்கள் பரப்புவோம், தமிழுக்கு ஏற்றம் தருவோம் என்று சொன்னால் தான், இங்கே தங்களுடைய கட்சியை வளர்க்க முடியும், பரப்ப முடியும், கட்சியை ஆட்சிப் பொறுப்புக்குக் கொண்டுவர முடியும் என்பதையெல்லாம் அறிந்த புத்திசாலிகள் வடக்கே இருக்கிறார்கள்.

வடக்கே இருப்பவர்களுக்குத் துணையாக இங்கே ஒரு கூட்டம் இருக்கிறது. அந்தக் கூட்டத்திற்குத் துணையாக சில பத்திரிகைகள் இருக்கின்றன. இவர்கள் எல்லாம் சேர்ந்து செய்கின்ற மிக முக்கியமான காரியம் என்னவென்றால், வேலை என்ன வென்றால், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவது ஒன்று தான்.

திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிற வரை நாம் தமிழ்நாட்டில் தலை காட்ட முடியாது என்று கருதுகிற காரணத்தால் தான் இந்தக் கழகத்தை எப்படி வீழ்த்தலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் நான் சொல்லுகிறேன், உங்களை நம்பிச் சொல்கிறேன், நாங்கள் இருக்கும் வரையில், எங்களால் வளர்க்கப்பட்ட நீங்கள் இருக்கும் வரையில், இந்தக் கழகத்தின் செயற்குழு மாத்திரமல்ல, பொதுக் குழுவிலே உள்ளவர்கள், ஊர்களிலே உள்ளவர்கள், வட்டங்களிலே உள்ளவர்கள், இலட்சக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், இவர்கள் எல்லாம் உள்ளவரை, திராவிட இயக்கத்தை எவனும் அழித்து விடலாம் என்று கனவு காணத் தேவையில்லை. அத்தகைய இரும்பு நெஞ்சம் கொண்டவர்கள், அத்தகைய கொள்கை உரம் வாய்ந்தவர்கள் நாம்.

அதனால் தான் எத்தனையோ வீழ்ச்சிக்குப் பிறகும், எத்தனையோ கஷ்டங்களுக்குப் பிறகும், சோதனைகளுக்குப் பிறகும் வாழ்கிறோம். நம்மை சீண்டிப் பார்க்காத நெருக்கடி கால நிலைமையா? அதிலேயே தப்பித்தோம். தப்பித்தோம் என்றால் பயந்து கொண்டு ஓடி ஒளிந்து தப்பிக்கவில்லை.

எதிர்த்து நின்று மார்பு காட்டி, நெஞ்சத்தைத் திறந்து காட்டி தப்பித்தவர்கள் நாம். அந்தச் சட்டங்களை வீழ்த்தியவர்கள் நாம். எந்தச் சட்டத்தையும் கண்டு நாம் அஞ்சி நடுங்கி வளைந்து, பணிந்து ஒடுங்கியவர்கள் அல்ல.

அது எவ்வளவு பெரிய சட்டமாக இருந்தாலும், நம்முடைய இயக்கத்தை அழிப்பதற்காக ஏவப்பட்ட அக்னியாஸ்திரமாக இருந்தாலும் கூட, அந்த அக்னியாஸ்திரம் உடைந்து தவிடுபொடியாகக் கூடிய அளவுக்கு நாம் பல வெற்றிகளை அதிலே பெற்றிருக்கிறோம்.

அப்படிப்பட்ட இயக்கம் இன்றைக்கு காலையிலே இங்கே சில நண்பர்கள் பேசியதைப் போல - நாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்று சொன்னார்கள் என்றால் - இப்போது எங்கே போய் விட்டது ஆட்சி? ஆட்சி நம்மிடம் தான் இருக்கிறது. நாம் சொன்னபடி செய்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும். நாம் நினைக்கிற படி நடக்கின்ற ஆட்சி தான் இங்கே இருக்க முடியும்.

அப்படிப்பட்ட ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்கனவே தந்து, அந்தக் கழகத்தின் சார்பில் ஆட்சி நடத்தி - நாம் கொண்டு வந்த திட்டங்களை - நாம் உருவாக்கிய கட்டிடங்களை யாரும் தொட முடியாது, அந்தக் கட்டிடங்கள் எல்லாம் திராவிடப் பாரம்பரியத்தை - திராவிட இன உணர்வை - திராவிட சமுதாய எழுச்சியை பரப்பக் கூடியவை.

அதை யாராலும் ஒன்றும் செய்து விட முடியாது என்ற அளவில் அந்தக் கழகத்தை இன்றைக்கு நிலைநாட்டியிருக்கிறோம். அது மேலும் வளர்ந்திடும், பலம் பெருகும். அப்படி பலம் பெருகும் நேரத்தில் நீங்கள் இப்போது சொன்னீர்களே, எங்கள் மாவட்டத்தில் இத்தனை தொகுதிகளில், இத்தனை சட்ட மன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவோம், இத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு வருவோம் என்றெல்லாம் சொன்னீர்களே, அவைகள் எல்லாம் வீண் வார்த்தைகளாக ஆகி விடாமல், அவைகள் எல்லாம் எங்களை நம்ப வைப்பதற்காக - எங்களை மகிழ்ச்சியடையச் செய்வதற்காகச் சொல்லப்பட்ட சொற்களாக இல்லாமல் - உண்மையிலேயே ஆக வேண்டுமென்றால் நீங்கள் ஒவ்வொரு ஊரிலும் நம்முடைய கழகத்தை சகோதர மனப்பான்மையோடு நடத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி பேசினார்.

English summary
DMK leader Karunanidhi, without naming the BJP, took a swipe at it by saying that a party was trying to gain foothold in Tamil Nadu by claiming to propagate Tamil. "Some media houses are here to support the North Indian party and their target is to slay the DMK. But the DMK cannot be destroyed," he said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X