கருணாநிதியிடம் தோற்றுப் போன ஸ்டாலின்- நம்பிய வாசன் நடுத்தெருவில்!

By:

சென்னை: உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் கருணாநிதியிடம் அவரது மகனும் திமுக பொருளாளருமான ஸ்டாலின் தோற்றுவிட்டதாகவே தெரிகிறது. ஸ்டாலின் விரும்பியபடி ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ், திமுக கூட்டணியில் இடம்பெறாது என்பது உறுதியாகி உள்ளது.

திமுக யார் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதில் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையே உச்சகட்ட மோதல் நடந்து வருவதை சில நாட்களுக்கு முன்னர் நாம் பதிவு செய்திருந்தோம். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸை ஒட்டுமொத்தமாக விரட்டியடித்துவிட்டு தமிழ் மாநில காங்கிரஸை கொண்டுவர வேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம்.

ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்க வேண்டும் என்பதில் கறாராக இருக்கிறார் கருணாநிதி. அவருக்கு தெரியாமலேயே ஜி.கே.வாசனுடன் பேச்சுவார்த்தை நடத்தி நம்பிக்கையும் கொடுத்து வைத்திருந்தார் ஸ்டாலின். இதில் மிகவும் கடுமையான அதிருப்தியில் இருந்து வந்தார் கருணாநிதி.

கருணாநிதி பிரகடனம்

இருவருக்கும் இடையேயான முட்டல் மோதல், திமுக முப்பெரும் விழா மற்றும் மாவட்ட செயலர்கள் கூட்டத்தில் பகிரங்கமாகவே வெளிப்பட்டது. கருணாநிதியும் தாம் உள்ள வரை கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருக்கும் என பிரகடனமும் செய்தார்.

கடுப்பில் கருணாநிதி

இந்த நிலையில் ஜி.கே.வாசனும் போகிற இடங்களில் எல்லாம் திமுக கூட்டணியில் இணைகிறோம் என பேட்டி கொடுத்து வந்தது கருணாநிதியை மேலும் கடுப்பேற்றியது. காங்கிரஸிலும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது.

காங். எதிர்ப்பு

ஸ்டாலினை நேரில் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளிப்படையாகவே, திமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெறுவதை டெல்லி மேலிடம் ஏற்க முடியாது என சொல்லிவிட்டது என திட்டவட்டமாக பேசியிருக்கிறார். இதை ஸ்டாலின் கண்டுகொள்ளாதவராகத்தான் இருந்திருக்கிறார்.

பழைய கூட்டணிதான்

தற்போது ஸ்டாலினின் காய்நகர்த்தல்களுக்கு செக் வைக்கும் வகையில் திமுக பொதுச்செயலர் அன்பழகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், கடந்த 18-ந் தேதி நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சியினர் போட்டியிட வாய்ப்புள்ள இடங்களைக் கண்டறிய வேண்டும். இது தொடர்பாக கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நமது கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்துபேசி அவர்களின் பரிந்துரையைத் தலைமை அலுவலகத்துக்கு மாவட்டச் செயலாளர்கள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தரப்பு அதிர்ச்சி

அதாவது சட்டசபை தேர்தலில் இடம்பெற்றிருந்த கூட்டணிதான் உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடரும்; தமாகா போன்ற கட்சிகளுக்கு கூட்டணியில் இடம் இல்லை என்பதை வெளிப்படுத்தியது இந்த அறிக்கை. இதனால் ஸ்டாலின் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்து போனது.

வாசனை கைவிட்ட ஸ்டாலின்

இதனால் வேறுவழியே இல்லாமல் வாசனை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார் ஸ்டாலின். சென்னை கோபாலபுரத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு வந்த ஸ்டாலினிடம், ஜி.கே.வாசன் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வுடன் கூட்டணி சேர விரும்புவதாக கூறியிருக்கிறாரே? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

திமுக நிலைப்பாடு

இதற்கு பதிலளித்த ஸ்டாலின், அவருடைய விருப்பத்தை அவர் சொல்லி இருக்கின்றார். தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் தி.மு.க.வின் நிலைப்பாடு குறித்து, எந்தெந்த கட்சிகளுடன் பேச வேண்டும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதுதான் தி.மு.க.வின் நிலைப்பாடு என்றார். இதன் மூலம் திமுக கூட்டணியில் தமாகா இடம்பெறாது என்பது திட்டவட்டமானது.

தோற்ற ஸ்டாலின்

திமுகவில் கருணாநிதியை மீறி செயல்பட நினைத்த ஸ்டாலின் தோல்வியைத்தான் தழுவ நேரிட்டுள்ளது. இருப்பினும் கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் இடையேயான முட்டல் மோதல் திமுகவினரை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.

English summary
DMK asked its district secretaries to hold talks for the coming civic polls with all parties that had been part of its alliance for the Assembly polls.
Please Wait while comments are loading...

Videos