For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் திமுக- காங். கூட்டணிகள் அமைந்த வரலாறு இது....

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக- காங்கிரஸ் இடையே கூட்டணி உதயமாகி உள்ளது. கடந்த காலங்களில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்த வரலாறு இது.

தமிழகத்தில் 1967-ல் திமுக ஆட்சி அமைத்து காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் மத்தியில் காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்தது. பிரதமர் இந்திரா காந்திக்கு திமுக ஆதரவளித்தது.

இந்நிலையில் லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமராக இருந்த இந்திரா முடிவு செய்திருந்தார். தமிழகத்திலும் முதல்வராக இருந்த கருணாநிதியும் முன்கூட்டியே சட்டசபை தேர்தலை நடத்த முடிவு செய்தார்.

1971

1971

இதனால் ஓராண்டுக்கு முன்னதாக 1971ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ், இந்திரா தலைமையிலான காங்கிரஸ் என 2ஆக பிளவுபட்டிருந்தது. தமிழகத்தில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சி(என்சிஓ) தான் வலுவானதாக இருந்தது.

1971 தேர்தலில் திமுக தலைமையிலான முற்போக்கு கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வார்டு பிளாக். பிரஜா சோசலிஸ்ட் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் இடம்பெற்றிருந்தது.

ஆனால் சட்டசபை தேர்தலில் இந்திரா காங்கிரஸ் போட்டியிடவில்லை. லோக்சபா தேர்தலில் 24 தொகுதிகளில் திமுக போட்டியிட்டு 23-ல் வென்றது. இந்திரா காங்கிரஸ் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் வென்றது.

திமுக அணிக்கு எதிரான ஜனநாயக முன்னணியில் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ், சுதந்திரா கட்சி, சமுக்ய சோசலிஸ்ட் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.

1977 தேர்தல்

1977 தேர்தல்

1977ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 4 முனைப் போட்டி இருந்தது. திமுக தனித்து 230 தொகுதிகளில் போட்டியிட்டது. அதிமுக, மார்க்சிஸ்ட், பார்வார்டு பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இணைந்து ஒரு கூட்டணி; இந்திரா காங்கிரஸ், சிபிஐ தலைமையில் ஒரு கூட்டணி; ஜனதா கட்சி தனித்தும் போட்டியிட்டன. இதில் அதிமுக 130, திமுக 48, காங்கிரஸ் 27 இடங்களில் வென்றிருந்தன.

1980

1980

காமராஜர் மறைவுக்குப் பின்னர் காமராஜ் தலைமையிலான காங்கிரஸ் அப்படியே இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸில் இணைய அது வலுவானதாக மாறியது. 1980ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக, திமுக இரு கூட்டணிகள் களத்தை சந்தித்தன. அதிமுக அணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காந்தி காமராஜ் காங்கிரஸ், காங்கிரஸ்( அர்ஸ்) அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சிகளும்

திமுக அணியில் இந்திரா காங்கிரஸ் கட்சி இடம்பெற்றிருந்தது. இத்தேர்தலில் திமுக 112 ; காங்கிரஸ் 114 தொகுதிகளில் போட்டியிட்டன. ஆனால் திமுக 37, காங்கிரஸ் 31 இடங்களில்தான் வென்றன.

1984

1984

1984ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பிடித்தது. அதிமுக 155 இடங்களிலும் காங்கிரஸ் 73 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் அதிமுக 132, காங்கிரஸ் 61 தொகுதிகளைக் கைப்பற்றின.

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் ஜனதா கட்சிகள் இடம்பிடித்திருந்தன. திமுக 167 தொகுதிகளில் போட்டியிட்டு 24, மார்க்சிஸ்ட் 16 தொகுதிகளில் போட்டியிட்டு 5, ஜனதா 16 தொகுதிகளில் போட்டியிட்டு 1, இந்திய கம்யூனிஸ்ட் 17 தொகுதிகளில் போட்டியிட்டு 2 இடங்களில்தான் வென்றன.

1987

1987

1987ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவைத் தொடர்ந்து அதிமுக இரண்டாக பிளவுபட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சிவாஜிகணேசன் தமிழக முன்னேற்ற முன்னணியைத் தொடங்கியிருந்தார்.

1989

1989

இதனால் 1989ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மொத்தம் 4 முனை போட்டி நிலவியது. அதிமுக(ஜெ), இந்திய கம்யூனிஸ்ட் ஒரு கூட்டணி; அதிமுக (ஜா), சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு அணி; காங்கிரஸ், யூசிபிஐ ஒரு அணி; திமுக, மார்க்சிஸ்ட், ஜனதா கட்சி ஒரு அணியாக போட்டியிட்டன.

இதில் 202 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 150, 21 தொகுதிகளில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் 15, 10 தொகுதிகளில் போட்டியிட்ட ஜனதா 4 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது.

அதிமுக(ஜெ) அணி 198 இடங்களில் போட்டியிட்டு 27; இந்திய கம்யூனிஸ்ட் 13 தொகுதிகளில் போட்டியிட்டு 3-ல் வென்றன. அதிமுக ஜானகி அணி 2 இடங்களில்தான் வென்றது. சிவாஜி கணேசனின் தமிழக முன்னேற்ற முன்னணி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. யூசிபிஐ - உடன் காங்கிரஸ் போட்டியிட்ட போதும் கிட்டதட்ட அது தனித்து போட்டியிட்ட நிலைமைதான். மொத்தம் 214 தொகுதிகளில் போட்டியிட்டு 26 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது.

இருப்பினும் தேர்தலுக்கு அதிமுக 2 அணிகளும் ஒன்றாகின. 1990ஆம் ஆண்டு திமுக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

1991

1991

1991ஆம் ஆண்டு சட்டசபைக்கும் லோக்சபாவுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. 1991ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாமக, திமுகவை விட்டு வெளியேறிய டி. ராஜேந்தரின் தாயக மறுமலர்ச்சி கழகம், அதிமுகவில் இருந்து விலகிய திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன், உக்கம்சந்த், கருப்பசாமி பாண்டியன் என நால்வர் அணி என புதிய முகங்கள் களம் கண்டன. அதேபோல் தமிழக முன்னேற்ற முன்னணி நடத்திய சிவாஜிகணேசன் ஜனதா தளத்துக்குப் போனார்.

திமுக தலைமையில் மார்க்சிஸ்ட் கட்சி, ஜனதா தளம், தாயக மறுமலர்ச்சி கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அதிமுக தலைமையில் காங்கிரஸும் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டன. இத்தேர்தல் பிரசாரத்தின் போதுதான் ராஜிவ்காந்தி கொல்லப்பட்டார். 168 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 164, 65 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 60 இடங்களில் வென்றன. 176 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 2 இடங்களில்தான் வென்றது. தாயக மறுமலர்ச்சி கழகம் 2, மார்க்சிஸ்ட் 1, ஜனதா தளம் 1 இடத்தில் வென்றது. தனித்துப் போட்டியிட்ட பாமக 1 இடத்தில் வென்றது.

1996

1996

1996ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் இரண்டாக பிளவுபட்டிருந்தது. அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க மேலிடம் முடிவெடுத்ததால் மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. அதேபோல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ மதிமுகவை தொடங்கியிருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தேர்தல் களத்துக்கு வந்தது.

இதனால் அதிமுக, காங்கிரஸ் ஒரு அணியாகவும் திமுக, மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வார்டு பிளாக் ஒரு அணியாகவும் களம் கண்டனது. மதிமுக, மார்க்சிஸ்ட், ஜனதா தள் இணைந்து 3-வது அணியாக களம் கண்டன. 4வது அணியாக பாமக, காங்கிரஸ் இருந்து வெளியேறிய வாழப்பாடியின் திவாரி காங்கிரஸும் களமிறங்கின. திமுக- தமாகா அணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்திருந்தார்.

அதிமுக 4 இடத்தில் வென்றது. காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெல்லவில்லை. திமுக 182 இடங்களில் போட்டியிட்டு 173 தொகுதிகளிலும் 40 தொகுதிகளில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் 39-லும் வென்றது. 116 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 4 இடங்களில் வென்றது. மதிமுக ஒரு இடத்திலும் வெல்லவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8, மார்க்சிஸ் கட்சிக்கு 1 இடம் கிடைத்தது.

2001

2001

2001ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் பாஜக கை கோர்த்தது. திமுக- பாஜக கூட்டணியில் 15 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. திமுக, பாஜக, புதிய தமிழகம், மக்கள் தமிழ் தேசம் கட்சி, புதிய நீதி கட்சி, எம்.ஜி.ஆர். அண்ணா திமுக, எம்.ஜி.ஆர். கழகம், கொங்குநாடு மக்கள் கட்சி, தமிழர் பூமி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக முஸ்லிம் இயக்க ஜமாத், ப.சிதம்பரத்தின் காங்கிரஸ் ஜனநாயக பேரவை, தமிழக முத்தரையர் சங்கம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, தொண்டர் காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

திமுக அணியில் பாஜக மற்றும் காங்கிரஸ்- அதிமுக கட்சிகளில் இருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியவர்கள் என ஒரு கலவையான கூட்டணி அமைந்தது.

அதிமுக அணியில் தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பார்வார்டு பிளாக், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், தமிழக மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் இணைந்திருந்தன.

தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பெற்ற இந்த அதிமுக கூட்டணியில் காங்கிரஸும் இடம்பெற்றிருந்தது. மதிமுக தனித்து போட்டியிட்டது.

இத்தேர்தலில் 140 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 132, 32 தொகுதிகளில் போட்டியிட்ட தமாகா 32, 14 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 7 தொகுதிகளில் வென்றன.

பாமக 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20-ல் வென்றது. திமுக 169 தொகுதிகளில் போட்டியிட்டு 31 இடங்களையும் பாஜக 21 தொகுதிகளில் போட்டியிட்டு முதல் முறையாக 4 இடங்களைப் பெற்றது.

இத்தேர்தலுக்குப் பின்னர் மூப்பனார் மறைய மீண்டும் காங்கிரஸ் கட்சியில் ஐக்கியமானது தமிழ் மாநில காங்கிரஸ்.

2006

2006

2006ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஒரு அணியாகவும் திமுக, காங்கிரஸ், பாமக, இடதுசாரிகள் ஒரு அணியாகவும் களம் கண்டன. 130 இடங்களில் போட்டியிட்ட திமுக 96-லும் 48 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 34 இடங்களிலும் வென்றது.

இத்தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிட்டு 1 இடத்தைப் பெற்றது. மதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை.

2011

2011

கடந்த 2011ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக, தேமுதிக, இடதுசாரிகள், மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், சமத்துவ மக்கள் கட்சி இணைந்து ஒரு அணியாகவும் திமுக, காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு முன்னேற்ற கழகம் ஒரு அணியாகவும் களம் கண்டன.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150, 41 தொகுதிகளில் போட்டியிட்ட தேமுதிக 29 இடங்களிலும் 119 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 23, 63 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 5 இடங்களிலும் வென்றது.

ஆனால் 2013 ஆம் ஆண்டு ஈழப் பிரச்சனையை முன்வைத்து திமுக- காங்கிரஸ் கூட்டணி முறிந்தது. இதனால் 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக தனி அணியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட்டது.

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. அக் கட்சியில் இருந்து விலகி ஜி.கே. வாசன் மீண்டும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். பாமகவில் இருந்து வெளியேறிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை தொடங்கினார்.

2016

2016

திமுக- காங்கிரஸ் கூட்டணி உதயமாகி உள்ளது. மதிமுக, இடதுசாரிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி என்ற தனி அணியை உருவாக்கியுள்ளனர். பாமக முதல்வர் வேட்பாளரை அறிவித்து தனி அணியாக களம் இறங்குகிறது. தேமுதிக பாஜகவுடன் போகுமா? மக்கள் நலக் கூட்டணியுடன் போகுமா? என்பது முடிவாகவில்லை.

பாஜக, தேமுதிகவுடன் அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைக்கலாம்.

English summary
Here are the details of DMK -Congress allinace in past Tamilnadu assembly Elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X