For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஓ.பி.எஸ்ஸுடன் காரசார விவாதம்... திமுக, பாமக, பு.த எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் முதல்வருடன் திமுக எம்.எல்.ஏக்கள் காரசாரமாக விவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சபையில் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து திமுக, பாமக, புதிய தமிழகம் கட்சி எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

DMK members indulge in heated debate with

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களான கோ.இளங்கோவன் (திருவையாறு), கூத்தக்குடி சண்முகம் (திருப்பத்தூர்), முன்னாள் அமைச்சர் அ.மா.பரமசிவம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று மவுனம் கடைப்பிடித்தனர். மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களது குடும்பத்தினருக்கு அனுதாபம் தெரிவித்தும் இரங்கல் குறிப்பை சபாநாயகர் தனபால் வாசித்தார்.

தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் எழுந்து ஒரு பிரச்சினை குறித்து பேச அனுமதி கேட்டார்.

ஆனால் சபாநாயகர் முக்கிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட இருக்கிறது. எனவே அதன் பிறகு உங்கள் கருத்துக்களை பேசலாம் என்றார்.

முக்கிய தீர்மானம்

இதையடுத்து காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுப்பது தொடர்பாக சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தை வாசிப்பதற்கு முன்பு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே காவிரி நீரை பெறுவதற்கு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேச தொடங்கினார்.

துரைமுருகன் எதிர்ப்பு

உடனே துரைமுருகன் எழுந்து தீர்மானத்தை முதலில் படியுங்கள். பின்னர் விளக்கங்களை கூறலாம் அதுதான் மரபு என்றார். இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இதில் எந்த தவறும் இல்லை என்றார். சிறிது நேரம் துரைமுருகன் முதல்வருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஜெயலலிதாவிற்கு புகழுரை

அதன்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, காவிரியில் தண்ணீர் பெறுவதற்காக பல்வேறு வழக்குகள் தொடர்ந்தது, நடுவர்மன்றம் தீர்ப்பு வழங்கியது, அதை மத்திய அரசிதழில் வெளியிட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எடுத்த முயற்சி போன்றவற்றை குறிப்பிட்டார்.

காரசார விவாதம்

அப்போது ஜெ.அன்பழகன் எழுந்து முன்னாள் முதல்வர் கருணாநிதியும் எடுத்துள்ள முயற்சி குறித்து முதல்வர் குறிப்பிடாதது ஏன் என்பது குறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது. நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பிறகு ஜெ.அன்பழகன் அமர்ந்தார்.

நத்தம் விஸ்வநாதன்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி முடித்ததும் அவை முன்னவரான அமைச்சர் நத்தம் விசுவநாதன் எழுந்து 1990ஆம் ஆண்டு காவிரி பிரச்சினை தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றும் போது அன்றைய முதல்வர் கருணாநிதி இது போன்ற தீர்மானம் கொண்டு வருவதற்கு முன்பு முன்னுரையாக பேசி இருக்கிறார் என்று கூறினார். இவ்வாறு விவாதம் நடந்தது.

தீர்மானம் நிறைவேற்றம்

இதனைத் தொடர்ந்து கர்நாடக அரசுக்கு எதிரான தீர்மானம் ஏக மனதாக நிறைவேறியது. அதன் பின்னர் அனைத்து கட்சியினரும் அதற்கு ஆதரவு தெரிவித்து பேசினார்கள்.

துரைமுருகன் பேசும் போது, ‘‘காவிரி நதி நீரைப் பெறுவதற்கு உங்கள் ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பேசியிருக்கிறீர்கள். அதற்கு நன்றி தெரிவித்து இருக்கிறீர்கள். எங்கள் ஆட்சியில் எடுத்த நடவடிக்கைகளை குறிப்பிட்டு இருக்கலாம் என்றார்.

முதல்வர் பதில்

இதற்கு பதில் அளித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், இந்த தீர்மானத்துக்கு ஏகமனதாக ஆதரவு தெரிவித்து இருப்பதற்கு நன்றி. என்றாலும் துரைமுருகன் குறிப்பிட்ட கருத்துக்கு பதில் சொல்ல விரும்புகிறேன்.

2007ஆம் ஆண்டு காவிரி இறுதி தீர்ப்பு வந்தது. அப்போது மத்தியில் உங்கள் கூட்டணி ஆட்சிதான் இருந்தது. நீங்களும் இங்கு பொறுப்பில் இருந்தீர்கள். ஆனால் தீர்ப்பில் அரசிதழில் வெளியிட வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் இருந்தும் அதை நீங்கள் செய்யவில்லை.

அரசிதழில் வெளியீடு

2011ஆம் புரட்சித்தலைவி ஆட்சிக்கு வந்த பிறகு உச்சநீதிமன்றத்தை அணுகி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட செய்தார் என்றார்.

உடனே துரைமுருகன் எழுந்து, ‘‘கர்நாடகம், கேரள மாநிலங்களில் கட்சிகள் வேறுபட்டு இருந்தாலும், மாநில பிரச்சினையில் ஒன்றுபட்டு இருக்கிறது என்று கூறி விட்டு ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விளக்கம் அளிக்க முயன்றார்.

எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

அதற்கு சபாநாயகர் அனுமதி வழங்காததால் தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.இதே போல் பா.ம.க. உறுப்பினர் கணேஷ்குமாரும், புதிய தமிழகம் கிருஷ்ணசாமியும் பேச அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து வெளிநடப்பு செய்தனர்.

English summary
DMK members indulged in a heated debate with CM O Paneerselvam in the assembly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X