For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக எம்.எல்.ஏக்கள் கண்ணியம் காக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

தி.மு.க.எம்.எல்.ஏக்கள் அனைவரும் கண்ணியம் காத்திட வேண்டும் என்று அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: சட்டப்பேரவையில் சபாநாயகர் தன் இருக்கையில் இல்லாத நேரத்தில் திமுக உறுப்பினர்கள் அதில் அமர்ந்ததை திமுக செயல்தலைவர் என்கிற முறையில் தான் ஏற்கவில்லை எனவும், இது போன்ற செயல்கள் இனி ஒருபோதும் மேற்கொள்ளாமல் உறுப்பினர்கள் கண்ணியம் காத்திட வேண்டும் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தைப் புதைகுழிக்குத் தள்ளும் வகையில் தமிழக சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் (பிப்ரவரி 18) குற்றவாளியின் பினாமி ஆட்சியினர் திட்டமிட்டுக் கொடுக்க, அதற்கேற்ற வகையில் ஒரு தரப்பாக சபாநாயகர் செயல்பட்ட விதத்தைக் கண்டு வாக்காளர்களான தமிழ்நாட்டு மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

DMK party mla's should keep dignity, says m.k.stalin

'எங்கள் வாக்குகளை ரகசியமாகப் பதிவு செய்துதானே தேர்தல் நடத்துகிறீர்கள், அதுபோல எங்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாதா', என சமூக வலைத்தளங்கள் மூலமாக பொதுமக்கள் எழுப்பி வரும் கேள்வியைப் புறக்கணித்துவிடமுடியாது. மக்களின் கேள்வியைத்தான் சட்டமன்றத்தில் தி.மு.க.வும் தோழமைக் கட்சியினரும் கோரிக்கையாக வைத்தனர்.

குற்றவாளியின் பினாமி ஆட்சியை ஏற்காத அ.தி.மு.க அணியினரும் இதைத்தான் கோரினார்கள். ரகசிய வாக்கெடுப்பு அல்லது வேறொரு நாளில் வாக்கெடுப்பு என்கிற இரண்டு கோரிக்கைகளையும் தனது வானளாவிய அதிகாரத்தால் புறந்தள்ளி, பினாமி ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக சபாநாயகர் செயல்பட்டதே சட்டமன்றத்தில் நடந்த அனைத்து ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கும் காரணமாகும்.

எதிர்க்கட்சியினரின் கார்களை சோதனையிடுவதில் தொடங்கி, காவல்துறை அதிகாரிகளை சட்டமன்ற காவலர்கள் உடையில் உள்ளே அனுப்பி தாக்குதல் நடத்தியது வரை முழுக்க முழுக்க ஆளுங்கட்சியின் திட்டமிட்ட ஜனநாயகப் படுகொலையாகும். இவை அனைத்துக்கும் சபாநாயகர் துணை நின்றார் என்பது வேதனையானதும் வெட்கக் கேடானதுமாகும்.

இந்நிலையில், எதிர்க்கட்சியினரின் நியாயமான கோரிக்கையை ஏற்று தொடர்ந்து அவையை நடத்தும்படி வலியுறுத்தியபோதும், அவையை ஒத்திவைத்து ஏதோ ஒரு சில உத்தரவுகளை எதிர்பார்த்து சபாநாயகர் தன் இருக்கையிலிருந்து வெளியேறிய நிலையில், ஒத்திவைக்கப்பட்ட அவையில் காலியாக இருந்த அவரது இருக்கையில் திமுக உறுப்பினர்கள் ப.ரங்கநாதன், கு.க.செல்வம் ஆகியோர் அமர்ந்ததை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையிலும் அவர்கள் சார்ந்துள்ள தி.மு.க.வின் செயல்தலைவர் என்ற முறையிலும் நான் அதனை ஏற்கவில்லை.

சட்டமன்ற நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்ப மறுக்கும் குற்றவாளியின் பினாமி அரசு, ஒரு தரப்பு காட்சிகளை மட்டுமே எடிட் செய்து ஊடகங்களுக்குத் தருகிற நிலையில், கழகத்தினர் மேற்கொள்ளும் துரும்பளவு செயல்பாடுகளும் தூணாக்கப்படும் என்பதை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இத்தகைய செயல்களை இனி ஒருபோதும் மேற்கொள்ளாமல் கண்ணியம் காத்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சபாநாயகரின் ஒரு தரப்பு நடவடிக்கை, சட்டமன்ற நடவடிக்கைகளின் ஒரு தரப்புக்காட்சிகள் இவற்றையெல்லாம் சட்டரீதியாக எதிர்கொள்ள தி.மு.க. தயாராக உள்ளது. குற்றவாளியின் பினாமி ஆட்சியை அகற்ற மக்கள் மன்றத்துடன் இணைந்து களம் காண்கிறது. அதற்கேற்ற வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் கண்ணியம் காத்து அவையிலும், வெளியிலும் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

English summary
DMK working president M.K.stalin has request to his party mla's to keep dignity in aeesmbly
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X