For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐ.நா ஆண்டு அறிக்கையில் இடம்பெற்ற திமுகவின் 'டெசோ' மாநாட்டு தீர்மானம்!

ஐநா அவையின் ஆண்டு அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பான திமுகவின் டெசோ தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: ஐநா அவையின் ஆண்டு அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சனை தொடர்பான திமுகவின் டெசோ தீர்மானம் இடம்பெற்றுள்ளது.

இதுதொடர்பாக திமுக செய்தித் தொடர்பாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின்படி மு.க.ஸ்டாலின் ஐக்கிய நாடுகள் மன்றத்தில் சமர்ப்பித்த 'டெசோ' மாநாட்டுத் தீர்மானங்கள் இந்தாண்டுக்கான ஐநா ஆண்டறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் 2017-18 ஆண்டு அறிக்கையில், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்து திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் டெசோ அமைப்பு இணைந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் பதிவாகி, வெளியிடப்பட்டு இருப்பதன் மூலம், ஈழ மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக திமுக தொடர்ந்து மேற்கொண்டுவரும் நிலைப்பாடு உலக அரங்கில் ஆணித்தரமாக வெளிப்பட்டு உள்ளது.

DMK's TESO resolution placed in the UN annual report

இதனைத்தொடர்ந்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் , மு.க.ஸ்டாலினுக்கு 17-04-2017 அன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பெருநகரில், நடைபெறவுள்ள தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவையின், ஏழாவது நேரடி அமர்வில், மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், ஈழத் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு மு.க.ஸ்டாலின் பங்கேற்பு வலு சேர்க்கும் என உறுதியாகக் கருதுகிறேன் என்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

அதேபோல, ஜெனீவாவில் வரும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள, 35 ஆவது மனித உரிமைகள் ஆய்வுக்கூட்டத்தில் தமிழீழ மக்களின் பிரச்சினைகள், விடுதலைக்கான தீர்வுகள் குறித்து மு.க.ஸ்டாலின் உரையாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உலகளாவிய தமிழர்களிடம் எழுந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த 13-05-1985 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டெசோ அமைப்பு மற்றும் திமுகழகத்தின் சார்பில், இலங்கைத் தமிழர்களின் அமைதியும் கண்ணியமும் நிறைந்த நல்வாழ்வுக்காக பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டன. அவற்றின் தொடர்ச்சியாக 12-09-2012 அன்று சென்னை, ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் நடைபெற்ற டெசோ மாநாட்டில், இலங்கைத் தமிழர்கள் நல்வாழ்வுக்காகப் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நியூயார்க்கில் ஸ்டாலின்

இதனையடுத்து, மு.க.ஸ்டாலின் கடந்த 1.11.2012 அன்று 'டெசோ' மாநாட்டின் தீர்மானங்களை அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. மன்றத் துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசனிடம் நேரில் கொண்டு சென்று வழங்கினார். மேலும், யான் லியாசனிடம், எங்கள் தலைவர் கருணாநிதிக்கு இப்போது வயது 89. இதில் 75 ஆண்டுகளாக அவர் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு உலகெங்குமுள்ள தமிழர்களுக்காகவும், தமிழ் இன உணர்வுகள் பாதுகாக்கப்படவும் தொடர்ந்து பாடுபட்டு வருகிறார். இலங்கைத் தமிழர் பிரச்சினையில் 1958 ஆம் ஆண்டு முதல் கருணாநிதி தன்னை தொடர்ந்து ஈடுபடுத்திக் கொண்டு, பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளார். இதற்காக சிறை சென்றும் தியாகம் புரிந்து உள்ளார். மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் அவர் மிகுந்த அக்கறை கொண்டவர்.

டெசோ தீர்மானம்

இலங்கையில் நடைபெற்ற போரினால் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும், நிம்மதியான வாழ்க்கை அமைய மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும், கெளரவமான வாழ்க்கை அமைய வேண்டுமென்ற 'டெசோ' மாநாட்டின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இலங்கையில் நடைபெற்ற போரினால் 90 ஆயிரம் பெண்கள் விதவைகளாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் மேலும் துன்பத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களை இலங்கை ராணுவம் தவறான முறையில் நடத்துகின்றது. இதற்கு தீர்வு காண வேண்டும்.

இலங்கை யுத்த பாதிப்பு

இலங்கை போரினால் 1 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் பல்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து நிம்மதியற்ற வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் விரும்பியபடி இலங்கையில் குடியுரிமை பெற்றுத் தர வேண்டும். அனாதைகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கு அவர்கள் விரும்பும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள இலங்கை ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். தமிழர்கள் அவர்கள் விரும்பிய அரசியல் தீர்வு ஏற்பட அவர்கள் விருப்பப்படி பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் உள்ள எல்லா கட்சிகளும் இலங்கை பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களின் மனித உரிமை காக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

லியாசன் பதில்

இந்தப் பிரச்சினையில் ஐ.நா. மன்றம்தான் சரியான தீர்வை ஏற்படுத்த முடியும் என்று நம்புகிறார்கள். மனித உரிமை மீறல் என்பது இலங்கையில் நடைபெற்ற தனி ஒரு நாட்டின் பிரச்சினை என்று கருதாமல் உலக நாடுகள் சம்பந்தப்பட்ட மனித இனப் பிரச்சினை என்று எடுத்துக் கொண்டு ஐ.நா. மன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுதிபடத் தெரிவித்தார் ஸ்டாலின். இதை ஏற்று பதிலளித்த யான் லியாசன, நீங்கள் அளித்துள்ள இந்த தகவல்கள் மிக மிக முக்கியமானவை. இந்தப் பிரச்னைக்கு ஐ.நா.மன்றம் எப்படி தீர்வு காண வேண்டும் என்பது குறித்து ஐ.நா. மன்றத்தின் பொதுச்செயலாளரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று தீர்வு காண்போம்" என்று உறுதியளித்தார்.

லண்டனில்..

இதனையடுத்து, 03-11-2012 அன்று ஜெனிவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை பாதுகாப்பு கூட்டத்திலும் கலந்து கொண்டனர். பின்னர் லண்டனில் 3 நாட்களாக நடந்த ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

உற்சாக வரவேற்பு

ஈழத் தமிழர்கள் குறித்து தலைவர் கருணாநிதி தலைமையிலான திமுகவின் நிலைப்பாட்டையும், டெசோ அமைப்பின் தீர்மான விவரங்களையும் உலக அரங்கில் உறுதிபட வெளிப்படுத்தும் பணியை வெற்றிகரமாக முடித்து விட்டு இந்தியாவுக்குத் திரும்பிய மு.க.ஸ்டாலினை கருணாநிதி விமான நிலையத்திற்கு நேரடியாகச் சென்று, தாரை தப்பட்டைகள் முழங்க ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றதுடன், அன்று மாலை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி நடைபெற்ற பாராட்டு விழாவில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், தமிழ் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர்களின் உரிமைகளுக்காகவும் நல்வாழ்வுக்காகவும் திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் குரல் கொடுக்கும் என்பதும், அந்த குரலுக்கு ஐ.நா. போன்ற உலக அமைப்புகளில் மதிப்பு உண்டு என்பதும் தற்போது ஐ.நாவின் ஆண்டு அறிக்கையில் "டெசோ" தீர்மானங்களும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கைகளும் இடம் பெற்றுள்ளதிலிருந்து வெள்ளிடைமலையாக விளங்குகிறது.

இவ்வாறு கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

English summary
DMK's TESO resolution placed in the UN annual report. DMK leaders happy for this. DMK Lawyer Radakirshnan gives statement on this. He is telling that DMK voice has the volue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X