For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சி குறைபாடுகளை அச்சிட்டு வினியோகம்: திமுக இளைஞர் அணி முடிவு!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அதிமுக அரசின் குறைபாடுகளை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய சென்னையில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கூட்டம் இன்று காலை சென்னை, அண்ணா அறிவாலயத்தின் அருகில் உள்ள ஹோட்டலில் நடைபெற்றது.

DMK youth wing met today in Chennai

இணைச் செயலாளர் திருப்பூர் மு.பெ.சாமிநாதன், துணைச் செயலாளர்கள் ஆர்.டி.சேகர், சுபா.சந்திரசேகர், ப.தாயகம் கவி, அசன் முகமது ஜின்னா, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலையில் இக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

தலைமைக்கழக ஒப்புதலோடு புதிதாய் நியமிக்கப்பட்டு, முதன்முறையாக நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள தி.மு.க. இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் - துணை அமைப்பாளர் களையும், ஏற்கனவே வகிக்கும் பொறுப்பில் தொடர்ந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள அமைப்பாளர்- துணை அமைப்பாளர்கள் அனைவரையும் வரவேற்று மகிழ்வதோடு, கழகப்பணிகளை தொய்வின்றி தொடர்ந்து மேற்கொள்ள இக்கூட்டம் உளமார்ந்த வாழ்த்துக்களை-பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறது.

திமுக தலைவர் கருணாநிதியின், 92வது பிறந்த நாளான வரும் ஜூன் 3ம் தேதி தமிழகமே விழாக்கோலம் பூணுகின்ற வகையில், தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் நகரங்கள், மாநகரங்கள், கிராமங்கள், வார்டுகள் தோறும் வீதிக்கு வீதி, கொடி தோரணங்களை கட்டி, ஒலிபெருக்கி அமைத்து, கழகக்கொள்கைப் பாடல்களை ஒலிபரப்பச் செய்வதோடு, கழகக் கொடியேற்று நிகழ்ச்சிகளையும் அமைத்து, ஏழை, எளியோர்க்கு அறுசுவை உணவினையும், புத்தாடைகளையும் வழங்கி எழுச்சியோடு கொண்டாடிட வேண்டும்.

தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு, தலைவர் கலைஞர் அவர்களின் அளப்பரிய சிறப்புக்களை விளக்கி கருத்தரங்கம் - கவியரங்கம் - பட்டிமன்றம் - கலை நிகழ்ச்சி போன்றவற்றையும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்பாடு செய்து அதன் வாயிலாக மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும்.

ஆதரவற்றோர் - முதியோர் இல்லங்களில் வாழ்வோர்க்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளை நிவர்த்தி செய்வதோடு, ஏழை, எளியோர், நடுத்தர மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்றாற்போல் கிராமப் புறங்களில் இலவச மருத்துவ முகாம்களையும், கண்தான முகாம், ரத்ததான முகாம் போன்ற சிறப்பு முகாம்களையும் ஆங்காங்கே தி.மு.க. இளைஞர் அணி சார்பில் அமைத்திட வேண்டும்.

இளைஞர் அணியில் உறுப்பினர்களாக பதிவு செய்வோருக்கு நவீன முறையில் தயாரிக்கப்பட்ட "ஸ்மார்ட் கார்டு" வடிவிலான உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் மாவட்டந்தோறும் ஒன்றியம், நகரம், பகுதி, பேரூர் மற்றும் ஊராட்சி, கிராமங்கள், குக்கிராமங்கள் வாரியாக முகாம் அமைத்து 15 வயதுக்கு மேற்பட்ட இளம் தலைமுறையினர் அனைவரையும் தி.மு.க. இளைஞர் அணியில் உறுப்பினர்களாக சேர்த்திட வியூகம் அமைத்து செயலாற்றிட வேண்டும். ஏற்கனவே உறுப்பினராகப் பதிவு செய்து உறுப்பினர் சீட்டுக்கள் பெற்றுள்ள இளைஞர்களையும் புதிதாக மீண்டும் பதிவு செய்திட வேண்டும்.

உறுப்பினர் சேர்த்தல் - புதுப்பித்தல் பணிகளில் உடனே ஈடுபட்டு ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிட உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட, மாநகர, மாநில மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

தமிழகத்தில் நடைபெறுகிற அ.தி.மு.க. ஆட்சியினால் தமிழக மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கும் அவலம் நீடிக்கிறது. அனைத்துத்துறை நிர்வாகமும் முடமாக்கப்பட்டு, படுபாதாளத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியின்மை - நிர்வாகச் சீர்கேடுகள் தலைதூக்கி நிற்கிறது. நாளேடுகளும் - ஊடகங்களும் இதனைச் சுட்டிக்காட்டி அன்றாடம் வெளிப்படுத்திவருகின்றன.

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது. வரலாறு காணாத தொடர் மின்வெட்டு, கடுமையான மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, ஆவின் பால் விற்பனையில் ஊழல், தாது மணல் ஊழல், கிரானைட் முறைகேடு-ஊழல், சத்துணவிற்கு முட்டைகள் வாங்கியதில் ஊழல், நெடுஞ்சாலை பராமரிப்பு பணியை தனியாருக்கு தாரை வார்த்ததில் முறைகேடு-ஊழல், வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கியதில் ஊழல் என அனைத்து துறைகளிலும் ஊழல் தாண்டவமாடுகிறது. மொத்தத்தில் இருண்ட ஆட்சியாகவே அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.

மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற முன்வராமலும் - அரசியல் கட்சிகள், ஊடகங்களால் கண்டறியப்பட்டு, சுட்டிக்காட்டப்படும் ஊழல், முறைகேடுகளைக்கூட கவனத்தில் கொண்டு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு நலன் பயக்கும் காரியங்களில் மட்டுமே தனிக்கவனம் செலுத்தி வருவதை தி.மு.க. இளைஞர் அணி வன்மையாகக் கண்டிக்கிறது.

நான்கு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் நடைபெற்றுவரும் முறைகேடுகளையும், ஊழல்களையும் - நிர்வாகச் சீர்கேடு, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலை உயர்வு உள்ளிட்ட, மக்கள் விரோதப் போக்கினையும் பட்டியலிட்டு அதனை துண்டு பிரசுரங்களாக எளிய முறையில் அச்சிட்டு, மாநகரம், நகரம், ஒன்றியம், பகுதி, பேரூர், சிற்றூர், கிராமங்கள், குக்கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் உள்ள பொதுமக்களை அவரவர் இல்லம் தேடி சந்தித்து தி.மு.க. இளைஞர் அணி சார்பில் வழங்கிட வேண்டும். அதற்கான அனைத்து முயற்சிகளையும் இளைஞர் அணியின் மாவட்ட அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் உடனே மேற்கொள்ள வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.

கருணாநிதி பிறந்த நாளினையொட்டி 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாவட்ட, மாநில அளவில் தேர்ச்சிபெறும் மாணவ, மாணவியர்க்கு பரிசுத் தொகையும், சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க உள்ளது என்பதை இக்கூட்டம் பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறது.

தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட, மாநகர, மாநில மைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் தமக்கையாராகிய முரசொலி செல்வம் அவர்களின் தாயார்

இயற்கையெய்தினார் எனும் செய்தி கிடைத்தது. உடனடியாக இக்கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று அன்னாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
DMK youth wing decided to go to the people for anti government campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X