For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பனை மட்டை பேட்.. தள்ளு வண்டி ஐஸ்..அம்மா வந்தால் ஆட்டம் க்ளோஸ்! பால்யத்தின் பசுமை நினைவுகள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: உலக கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்துவிட்டது. என்னதான் டி வில்லியர்ஸ், பிரெண்டன் மெக்கல்லம் என்றும், ஸ்டார்க், பவுல்ட் என்றும் நாம் பார்த்து ரசித்திருந்தாலும், இதெல்லாம் பார்ஸ்ட் ஃபுட் மாதிரி. சில நாட்களில் மறந்துவிடும். ஆனால், உள்ளூரில் நாம் விளையாடிய கிரிக்கெட்தான் எத்தனை பசுமையான நினைவுகளை நமக்குள் விதைத்து வைத்துள்ளது.

சொந்த ஊர்களுக்கு செல்லும்போது, நமது கிராமத்தில், நாம் கிரிக்கெட் விளையாடிய, கேட்பாரற்ற மைதானங்களை/வெட்டவெளிகளை ஒரு எட்டு பார்த்துவிட்டு கண்ணில் நீர் ததும்ப திரும்பாதவர் எத்தனை பேர்தான் இருக்க முடியும்.

நாம் ஆடிய களத்தில், அன்று தவண்டு விளையாடிய சிறுவர்கள், இன்று நம்மைவிட சிறப்பாக பேட் செய்வதை பார்த்துவிட்டு பொறாமையும், பெருமிதமும் கலந்து மனது கொந்தளிப்பதை யார்தான் தடுக்க முடியும்.

Do you remembers your childhood cricketing?

கிராமங்களில் இருந்து சென்னை, பெங்களூரு, துபாய், அமெரிக்கா, சிங்கப்பூர் என செட்டில் ஆனவர்களும் சரி, அல்லது தமிழக நகர்ப்புறங்களில் தெருமுனையில் ஆடிவிட்டு வெளியூர்களில் செட்டில் ஆனவர்களும் சரி, தங்களது பால்ய காலத்து பந்தாட்டத்தை மறந்துவிட முடியாது.

சிறுவர்களாக இருந்தபோது, நாம் எப்படியெல்லாம் ஆடினோம், என்னென்ன விதிமுறைகளை வைத்து சேட்டை செய்தோம் என்றெல்லாம் சிலருக்கு மறந்தும் போயிருக்கலாம். உங்களது மனதின் பசுமைக்கு நீர் தெளிக்கும் ஒரு மீள்பார்வை இதோ...:

கிராமங்களில் குழந்தைகளுக்கு தந்தை, பேட் வாங்கி தருவது பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம், ரொம்ப அபூர்வம். பனை மட்டையும், தென்னை மட்டையுமே பலருக்கும் அடிடாஸ், ரீபூக் பேட்டுகள். இன்று பத்தாயிரத்துக்கு பேட் வாங்கினாலும், பனை மட்டை நினைவு பலருக்கும் போக மறுக்கிறது. ஸ்டம்புக்கு பதிலாக எப்போதுமே கம்புகள்தான்.

Do you remembers your childhood cricketing?

கிராமத்தில் வீசும் காற்றுக்கு, டென்னிஸ் பந்தெல்லாம் சரிபட்டுவராது. எனவே ரப்பர் பந்துதான். அந்த பந்தை வாங்கிவிட்டு, அரைஞான் கயிற்றில் கோர்த்திருக்கும், ஊக்கை எடுத்து அதில் ஓட்டைபோடுவார்கள். ஏன் தெரியுமா...காற்று அழுத்தம் குறைந்து, பந்தை பிட்ச் செய்யும்போது அந்த ஓட்டை வழியே காற்று வெளியேற வாய்ப்பு கிடைக்கும். அல்லது, பந்து சீக்கிரம் உடைந்துவிடும் என்பது வில்லேஜ் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு.

ரப்பர் பந்து 10 ரூபாய்தான் என்றாலும், அதை வாங்கவும் பசங்களிடம் பணம் இருக்காது. ஆளுக்கு 2 ரூபாய், 1 ரூபாய் என அவரவர் 'ஸ்டேட்டஸ்க்கு' தக்கவாறு பணத்தை கொடுத்து பந்து வாங்கி பங்குதாரர்கள் ஆவார்கள்.

நாம் தங்க நாணயங்களில் டாஸ் போடுவதை டிவிக்களில் பார்க்கிறோம். ஆனால் கிராமங்களில், மண் பானைகளில் இருந்து உடைந்து விழுந்திருக்கும் ஓட்டாங்கனிகளை (சில்லோடு) எடுத்து, ஒருபக்கம் எச்சில் துப்பி டாஸ் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பார்கள்.

விளையாடும் பசங்களில், யாரோ ஒருவன் எப்படியோ பேட் வாங்கிவிடுவான். அவன்தான் அந்த குரூப்புக்கே ஹீரோ மாதிரி. ஒவ்வொரு போட்டி முடிந்ததுமே, அந்த பையன்தான் வந்து பேட்டை மேலும், கீழும் திருப்பி பார்ப்பான். குவாலிட்டி செக்காம். பேட் செய்யும் பையன், கொஞ்சம் வேகமாக தரையில் தட்டிக் கொண்டு நின்றாலும், "டேய் பந்த அடி.. பேட்ட கீழ கொத்தாத" என்று சவுண்ட் விடும் அதிகாரமும் அந்த பேட்டுக்கார பையனுக்குதான் உண்டு. எல்லோரும் அந்த பையனிடம் ஆட்டோமெட்டிக்காக, பவ்யம் காட்டுவார்கள்.

கடைசி ஓவரில் 10 ரன் அடிக்க வேண்டிய பரபரப்பான நேரத்திலும், ஐஸ் வண்டிக்காரர் அந்த பக்கமாக வந்தால், அத்தனை பசங்களும் வண்டி பக்கத்தில்தான் போய் நிற்பார்கள். ஐஸ் சாப்பிட்டுவிட்டு திரும்பி வருவதற்குள் அடிக்க வேண்டிய ஸ்கோர் மறந்துபோவதும் நடக்கும்.

நல்லா பேட்டிங் பண்ற பையனா இருந்தால், அவன் பேட்டில் படாம பந்து மிஸ் ஆகி, கீப்பரிடம் போனாலே, அதை வைடு என்றுதான் வாதாடுவான். இல்லை என்று பவுலிங் பையன் வாதாட ஆரம்பிப்பான். "பந்து இங்க பிட்ச் ஆச்சா.. இப்படியே உள்ள கட் ஆகி வந்துச்சா" என்று ஸ்லோ மோஷனில் பவுலிங் பையனும், விக்கெட் கீப்பரும் விளக்கம் கொடுப்பார்கள் பாருங்க, மோஷன் பிக்சர்சே தோத்துடும்.

ஊர்லயே கொஞ்சம் அடாவடி பையனா இருந்தான்னா அவ்ளோதான். அவனை மூனு முறை அவுட் ஆக்க வேண்டியிருக்கும். ஏன்னா ஒவ்வொரு அவுட்டுக்கும், ஏதாவது ஒரு நொட்ட சொல்லிட்டு பேட் புடிப்பதிலேயே இருப்பான். 3வது முறை, அவனா பாவம் பார்த்து பேட்ட வேற ஆளுகிட்ட கொடுப்பான்.

அவுட் ஆகிட்டு அடுத்தவனிடம் பேட்ட கொடுத்தா, அதக்கூட வாங்க மாட்டானுங்க. ஏன்னா அவன் அதிருஷ்டம் நமக்கும் வந்துர கூடாதேன்னு, பேட்ட கீழ போடச் சொல்லிட்டுதான் எடுப்பானுங்க. உலக கோப்பை பைனல்னு நினைப்பு.

ஒரு பேட் கிடைப்பதே பெருசு என்பதால், பெரும்பாலும், மறுமுனையில் நிற்கும் பேட்ஸ்மேன், ஏதோ ஒரு கம்பு குச்சியை கையில் வைத்துக் கொண்டுதான் ரன்னிங் ஓடுவான்.

'ஏல உன்ன கடைக்கு போவ சொன்னா, இங்க என்னல பண்ணிகிட்டு இருக்க..' அப்படீன்னு, யாராவது ஒரு 'வீரரின்' அம்மா குச்சியுடன் அந்த பக்கமாக வந்தால் அவ்வளவுதான், ஒட்டுமொத்த பசங்களும், மழையால் பாதிக்கப்பட்டு மைதானத்தைவிட்டு ஓடும் வீரர்களை போல அங்கிருந்து தெரித்து ஓடுவார்கள். சில அணிகளிலோ, அந்த பையன் கடைக்கு போய், சாமானெல்லாம் வாங்கிட்டு வரும்வரை போட்டி தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும்.

உங்களில் பெரும்பாலானோருக்கு இந்த அனுபவம் இருக்கும். முதல் பந்தில் எந்த பையனாவது அவுட் ஆனால், "அது டிரையல் பால் அப்படீன்னு நினைச்சேன், இனிமேல் ரியல்ஸ் போடுங்கள்" என்று கூலாக சொல்வான். ஸ்டம்பை புடுங்கி நாலு சாத்து சாத்தலாம் என்று தோனும். இருந்தாலும், நல்ல ஐடியாவாதான் இருக்கு...நாமளும் அதையே பாஃலோ செய்யலாம் என்று சும்மா இருந்துவிடுவோம்.

ஆளில்லைன்னா, ரெண்டு சைடுமே ஃபீல்டிங் செய்ய வேண்டிய தண்டனையும் கிடைக்கும். குறிப்பாக விக்கெட் கீப்பர் வேறு டீம்காரனாத்தான் இருப்பான். ஒருவேளை தெரியாம கேட்ச மிஸ் பண்ணிட்டாலும், நம்மள துரோகி மாதிரியே பார்ப்பானுக. ஏன் நான் கேட்ச விட்டேன் என்பதற்கு தன்னிலை விளக்கம் கொடுக்க வேண்டிவரும் என்பது தனிக்கதை.

பெரும்பாலான பேட்டுகளில், கைப்பிடி உறை பிய்ந்து போய்விடும். எனவே, பத்தாம் நம்பர் நூலை பெவிக்காலில் தடவி, அதை பேட் கைப்பிடியில் சுத்தி கிரிப் கொடுத்த அனுபவமும் எத்தனை பேருக்குதான் மறந்துபோயிருக்கும். சொல்லுங்கள்...

English summary
World cup cricket might be getting over now. But we never forgot our childhood cricketing experience.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X