For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பீப் சாங் சர்ச்சையை ஓரம் கட்டும் கோட்டா சாங்.. சமத்துவ டாக்டர்கள் சங்கம் போர்க்கொடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இட ஒதுக்கீடு மூலம், டாக்டராக பணியாற்றுவோரை அவமானப்படுத்தும் வகையில் பாடலை வெளியிட்டுள்ள, `பிச்சைக்காரன்' திரைப்படக்குழுவிற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள அறிக்கை: திரைப்பட இயக்குநர் அரிகரன் இயக்கத்தில் ``பிச்சைக்காரன்‘' என்ற திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்திற்கான விளம்பரப் பாடல் ஒன்று லாகன் எழுதி, விஜய் ஆண்டனி இசை அமைப்பில் உருவாகி யூ டியூபில் வெளியிடப்பட்டுள்ளது.

Doctor union condemn Pichaikaran film team

இந்தப் பாடல் காட்சிகள் மிகவும் ஆபாசமாக இருக்கிறது. இப்பாடலில் இட ஒதுக்கீடு மூலம் மருத்துவக் கல்வியை பயின்ற தாழ்த்தப்பட்ட, பழங்குடி இன, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த டாக்டர்களை இழிவு படுத்தும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன.

``கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டர் ஆவுறான், தப்பு தப்பா ஊசி போட்டு சாகடிக்கிறான் ‘' என்ற பாடல் வரிகள் மிகவும் மோசமாக, இட ஒதுக்கீடூ மூலம் படித்த டாக்டர்களை சித்தரிக்கிறது. அந்த டாக்டர்கள் தப்பு தப்பா ஊசிப்போட்டு நோயாளிகளை கொல்லுகிறார்கள் என்பது உண்மைக்கு புறம்பானது மட்டுமல்ல, விஷமத்தனமானது. இட ஒதுக்கீட்டிற்கும், சமூக நீதிக்கும் எதிரானது.

இட ஒதுக்கீடு, தகுதி-திறமையை பாதித்து விடுகிறது என்ற தவறான, உளுத்துப் போன வாதத்தை மீண்டும் மீண்டும் முன் வைக்கும் முயற்சியாகும்.

தமிழகத்தில் நீண்ட காலமாக இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. தற்பொழுது 69 விழுக்காடு இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.

தமிழகம் மருத்துவத் துறையில் முன்னேறி உள்ளது. இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக சென்னை உள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்காக சென்னைக்கு படை எடுக்கின்றனர். சென்னையிலும், தமிழகத்திலும் தலைசிறந்து விளங்கும் மருத்துவர்கள் பெரும்பாலும், இட ஒதுக்கீட்டின் மூலம் பயின்றவர்கள்தான். அவர்களது திறமையை உலகமே போற்றுகிறது. பாராட்டுகிறது.

உண்மைநிலை, இவ்வாறு இருக்க, இட ஒதுக்கீட்டின் மூலம் டாக்டர்கள் ஆனவர்களால், நோயாளிகள் இறப்பதாகக் கூறுவது இத்திரைப்படக் குழுவினரின் வக்கிரமான சாதி மேலாதிக்க உணர்வைத் தான் பிரதிபலிக்கிறது.

அதுவும், கோட்டாவில் சீட்டு வாங்கி டாக்டர் ``ஆவுறான்'' எனவும், ``சாகடிக்கிறான் ‘' என ஒருமையில் கூறுவது சாதி மேலாதிக்க வெறியை வெளிப்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்தியா முழுவதும் 406 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் சரிபாதிக்கு மேல் தனியார் மற்றும் தனியார் நிகர் நிலைப் பல்கைலக்கழகத்தை சார்ந்த மருத்துவக் கல்லூரிகள்தான்.

தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும், தனியார் நிகர்நிலைப் பல்கலைக் கழக மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து இடங்களுக்கும் தகுதி மற்றும் திறமைகளைப் பார்க்காமல்தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. கட்டாய நன்கொடையை கோடி கோடியாக பெற்றுக் கொண்டு மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற வசதியான வர்களுக்கு மருத்துவ இடங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் தகுதி - திறமை பாதிக்கப்படவில்லையா? இந்த உண்மை இந்தப் படக்குழுவின் மேதாவிகளுக்கு தெரியாதா? தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக் குறித்து கள்ள மௌனம் சாதிப்பதேன்?

தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதும் ஏராளமான, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பகிரங்கப் போட்டியிலேயே மருத்துவ இடங்களைப் பெறுகின்றனர். பல்வேறு பிரிவினருக்கும் இடையிலான கட் ஆஃப் மதிப்பெண் இடைவெளி மிகவும் குறைந்து விட்டது. எந்த விதத்திலும், தகுதியில் குறைந்தவர்கள் அல்ல, இட ஒதுக்கீட்டு உரிமையை பெற்ற மாணவர்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளில், ஒரே தகுதியாக பணம் மட்டுமே உள்ளது.

எனவே, உண்மைக்கு மாறாக ,திட்டமிட்டு உள்நோக்கதோடு, சாதிய மேலாதிக்க வக்கிர உணர்வோடு, ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சார்ந்த மருத்துவர்களை இழிவுபடுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கடும் கண்டனத்திற்குரியது. இந்தப் பாடலுக்கு உடனடியாக தடை விதிப்பதோடு, இந்தத் திரைப்படக் குழுவினர் மீது, குறிப்பாக பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர் ,இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மீது சாதிய ரீதியிலான வெறுப்பை தூண்டுவதற்காகவும், ஒடுக்கப்பட்டோரை இழிவு படுத்துவதற்காகவும் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இட ஒதுக்கீடு மூலம், டாக்டராக பணியாற்றுவோரை அவமானப்படுத்தும் வகையில் பாடலை வெளியிட்டுள்ள, `பிச்சைக்காரன்' திரைப்படக்குழுவிற்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

English summary
Doctor union condemn Pichaikaran film team for its glamour song.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X