For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

15 ஆண்டு சிறை வாசத்திற்குப் பின்னர் விடுதலையானார் டாக்டர் பிரகாஷ்!

Google Oneindia Tamil News

சென்னை: பெண்களை வைத்து ஆபாசப் படம் எடுத்து இணையதளங்கள் மூலம் விற்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான சென்னையைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ், கிட்டத்தட்ட 15 வருட சிறை வாசத்திற்குப் பின்னர் விடுதலையாகியுள்ளார்.

சென்னை நெற்குன்றம், காருனீகர் தெருவைச் சேர்ந்தவர் டாக்டர் பிரகாஷ். எலும்பு மற்றும் மூட்டு சிகிச்சை மருத்துவரான இவர் அண்ணாநகரில் மருத்துவமனை நடத்தி வந்தார்.

Dr Prakash released after 15 years

இவர் மீது 2001ம் ஆண்டு பரபரப்பான புகார் எழுந்தது. தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த பெண்களை மயக்கி, அவர்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அவற்றை இன்டர்நெட் மூலம் விற்பனை செய்ததாக சர்ச்சையில் சிக்கினார் பிரகாஷ். இவரிடம் சிக்கியவர்கள் பெரும்பாலும் கல்லூரி மாணவிகள்தான். இதுதவிர பல்வேறு மாணவர்களையும் பெண்களுடன் ஆபாச கோலத்தில் இருக்க விட்டு படம் பிடித்து அவற்றையும் இன்டர்நெட்டில் உலவ விட்டார் டாக்டர் பிரகாஷ்.

இந்த நிலையில் புதுச்சேரியைச் சேர்ந்த கணேசன் என்ற வாலிபர் கடந்த 2001 ஆம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி வடபழனி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டார். அவருக்கு உடந்தையாக இருந்ததாக வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் நிக்சன் ஆகியோரும், பிரகாஷின் உதவியாளர் சித்ரா என்பவரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் சித்ரா அப்ரூவர் ஆனார். மற்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். நிக்சன் மட்டும் கைதான மூன்று மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்தார். மற்றவர்கள் கடந்த 6 வருடங்களாக சிறையில் அடைக்கப் பட்டு இருந்தனர். இவர்களில் பிரகாஷை தவிர மற்றவர்களுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. டாக்டர் பிரகாஷின் ஜாமீன் மனுவை ஆறு முறை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கு விசாரணை சென்னை 5வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ராதா முன்பு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இருதரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், 2008ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அப்போது நிக்சனைத் தவிர மற்ற நான்கு பேரையும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார். நிக்சன் விடுதலை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

டாக்டர் பிரகாஷ், கற்பழிப்பு மற்றும் கொலை முயற்சி வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதேசமயம், ஆள் கடத்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், விபச்சாரம், கொலை மிரட்டல், பெண்களை தவறாக சித்தரித்தல், ஆயுத சட்டம் உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.

வார்டு பாய் சரவணன், கார் டிரைவர் விஜயன், எக்ஸ்ரே தொழில்நுட்பாளர் ஆசிப் ஆகியோர் ஆள் கடத்தல், சதி மற்றும் உடந்தையாக செயல்பட்டது, விபச்சார தடுப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றவாளிகள் என நீதிபதி ராதா தெரிவித்தார். அதன் பின்னர் தண்டனை விவரத்தை நீதிபதி வெளியிட்டார். அதன்படி, பிரகாஷுக்கு நீதிபதி ராதா ஆயுள் தண்டனை விதிப்பதாக அறிவித்தார். சரவணன், விஜயன், ஆசிர் குணசிங் ஆகிய மற்ற 3 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

இதுதவிர ரூ. 1.25 லட்சம் அபராதமும் டாக்டர் பிரகாஷுக்கு விதிக்கப்பட்டது. சரவணன், விஜயன் மற்றும் ஆசிர் குணசிங் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை தவிர தலா ரூ. 2500 அபராதமும் விதிக்கப்பட்டது. நான்கு பெரும் பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான குற்றத்தை இழைத்துள்ளனர். எனவே இவர்களை மன்னிக்க முடியாது என்று நீதிபதி ராதா தெரிவித்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து டாக்டர் பிரகாஷ் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். வழக்கு நீதிபதிகள் தமிழ்வாணன், சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. டாக்டர் பிரகாஷ் சார்பில் மூத்த வக்கீல் எ.ரமேஷ், வக்கீல் நமோ நாராயணன், அரசு வக்கீல் சண்முக வேலாயுதம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.

பிரகாஷ் தரப்பு வக்கீல்கள் வாதிடுகையில், தற்போது டாக்டர் பிரகாஷ் சிறையில் சீர்திருந்தி வாழ்ந்து வருகிறார். பல மாற்றங்களை அவர் கண்டுள்ளார். நிறைய புத்தகம் எழுதியுள்ளார். சிற்பம் செதுக்குகிறார். அவர் சமூகத்தில் மிகவும் திருந்த நிலையில் வாழும் தகுதியை அடைந்துள்ளார். எனவே இதுவரை அவர் சிறையில் இருந்த காலத்தை தண்டனை காலமாக கருதி அவரை விடுவிக்க வேண்டும் என்று கோரினர்.

இந்த மனுவை விசாரித்த பின்னர் நீதிபதிகள் கூறுகையில், மனுதாரர் பிரகாஷுக்கு விரைவு நீதிமன்றம் ஆயுள் தண்டனையும் ரூ. 1 லட்சத்து 19 ஆயிரம் அபராதமும் கடந்த 2008ல் விதித்தது. அதிலிருந்த 13 ஆண்டுகளுக்கு மேல் அவர் சிறையில் இருந்துள்ளார். அந்த கீழ் நீதிமன்ற தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது.
இருந்த போதிலும் டாக்டர் பிரகாஷ் சிறையில் இருந்த காலத்தை தண்டனைக் காலமாக கணக்கில் எடுத்து அவரை விடுதலை செய்ய இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர் வறுமையில் வாடவில்லை. எனவே அவரது அபராதத் தொகையை ரத்து செய்ய முடியாது. அதை அவர் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு பிரகாஷை விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.

இந்த உத்தரவைத் தொடர்ந்து உடனடியாக பிரகாஷுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் விடுதலை உத்தரவு சிறை நிர்வாகத்திடம் கொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உடனடியாக விடுதலையாகி விட்டார் பிரகாஷ்.

English summary
Dr Prakash, who was arrested in 2001 on multile charges has been released from the jail after 15 years of imprisonment.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X