For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனநாயகப் படுகொலைக்குத் துணை போகும் ரோசய்யா, லக்கானி.. டிஸ்மிஸ் செய்ய ராமதாஸ் கோரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக செயல்படும் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி தேர்தல் நடைமுறை முடிவடையும் முன் ஆளுநரை சந்தித்ததும், விளக்க அறிக்கை தாக்கல் செய்ததும் தவறு. எனவே, அரவக்குறிச்சி, தஞ்சாவூரில் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக்கூடாது. அதுமட்டுமின்றி, ஆளும்கட்சிக்கு சாதகமாக ஜனநாயகப் படுகொலைக்கு துணை போகும் தமிழக ஆளுநர் ரோசய்யாவை மத்திய அரசும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இந்திய தேர்தல் ஆணையமும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தல் விவகாரத்தில் நேரடியாக தலையிட்டதன் மூலம் ஆளுநர் என்பதைத் தாண்டி அதிமுகவின் விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார். தேர்தல் நடைமுறையில் இதுவரை எந்த ஆளுநரும் இவ்வளவு வெளிப்படையாக குறுக்கிட்டதில்லை. தேர்தல் நடைமுறையில் ஆளுநர் ஒரு கருவி தானே தவிர, அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை என்றும் டாக்டர் ராமதாஸ் சாடியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரவக்குறிச்சி - தஞ்சாவூர்

அரவக்குறிச்சி - தஞ்சாவூர்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய தொகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாற்றின் அடிப்படையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு விரைவாக, முடிந்தால் இம்மாத இறுதியில் வாக்குப்பதிவை நடத்தும்படி தேர்தல் ஆணையத்திற்கு ஆளுநர் ரோசய்யா பரிந்துரைத்திருக்கிறார். ஒரு தலைபட்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

மெய் சிலிர்க்க வைக்கும் ரோசய்யா

மெய் சிலிர்க்க வைக்கும் ரோசய்யா

ஒத்திவைக்கப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்பதில் ஆளுநர் காட்டும் ஆர்வமும், கடமை உணர்ச்சியும் மெய்சிலிர்க்க வைக்கின்றன. இரு தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் கடந்த 22-ஆம் தேதி ஆளுநரை சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, இரு தொகுதிகளின் தேர்தல் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாற்றுக்களை நீதிமன்றம் தான் விசாரிக்க வேண்டும். அதற்காக தேர்தலை ஒத்திவைத்தால் அத்தொகுதிகளில் வெற்றி பெறும் சட்டசபை உறுப்பினர்களின் பதவிக்காலம் குறைந்து விடும். எனவே ஒத்திவைக்கப்பட்ட தேர்தலை உடனடியாக நடத்த ஆணையிட வேண்டும் என்று ஆளுநரிடம் அதிமுக வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.

ஓடிப் போய் விளக்கிய லக்கானி

ஓடிப் போய் விளக்கிய லக்கானி

மனுவை பெற்றுக் கொண்ட ஆளுநர் அடுத்த நாளே தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை அழைத்து இதுகுறித்து விசாரித்துள்ளார். இதுதொடர்பான தேர்தல் ஆணையத்தின் விளக்க அறிக்கையை 24-ஆம் தேதி ஆளுநர் ரோசய்யாவிடம் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தாக்கல் செய்திருக்கிறார். தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை ஆய்வு செய்த ஆளுநர், இரு தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் அத்தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் மாநிலங்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழந்து விடுவார்கள். எனவே அனைவரின் நலன் கருதி இரு தொகுதிகளிலும் எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு விரைவாகவும், முடிந்தால் ஜூன் ஒன்றாம் தேதிக்கு முன்பாகவும் தேர்தலை நடத்த வேண்டும் என்று ஆணையத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.

அதிமுகவின் விசுவாசி

அதிமுகவின் விசுவாசி

இதன்மூலம் ஆளுநர் என்பதைத் தாண்டி அதிமுகவின் விசுவாசி என்பதை அவர் நிரூபித்துள்ளார். தேர்தல் நடைமுறையில் இதுவரை எந்த ஆளுநரும் இவ்வளவு வெளிப்படையாக குறுக்கிட்டதில்லை. தேர்தல் நடைமுறையில் ஆளுநர் ஒரு கருவி தானே தவிர, அவருக்கு அதிகாரம் எதுவும் இல்லை. தேர்தல் குறித்த அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கு மட்டுமே உண்டு. சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிக்கையை ஆளுநர் தான் வெளியிடுவார் என்ற போதிலும், தேர்தல் தேதிகளை அவர் முடிவு செய்வதில்லை. ஆணையம் முடிவு செய்யும் தேதியை உள்ளடக்கிய தேர்தல் அறிவிக்கையை அவர் வெளியிடுவார். அது மட்டுமே அவரது பணி. ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காக தேர்தலை ஆணையம் ஒத்திவைத்தால் அதில் குறுக்கிடும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.

டி.என்.சேஷன் வழக்கு

டி.என்.சேஷன் வழக்கு

1993 ஆம் ஆண்டில் ஹரியானா மாநிலம் கல்கா தொகுதி இடைத்தேர்தலை அப்போதைய தேர்தல் ஆணையர் டி.என். சேஷன் ஒத்திவைத்தது செல்லாது என்று பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் ஆணையிட்ட போதிலும், மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அவ்வாறு இருக்கும்போது தேர்தலை குறிப்பிட்ட தேதிக்குள் நடத்த வேண்டும் என்று ஆணையத்திற்கு பரிந்துரைக்கும் அதிகாரம் ஆளுநருக்கு எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை. ஒருவேளை, ஆளுநருக்கு அத்தகைய அதிகாரம் இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அவரது செயல்பாடு ஒருதலைப்பட்சமானது என்பதை யாரும் மறுக்க முடியாது. இரு தொகுதிகளிலும் எந்த தேதியில் தேர்தலை நடத்துவது குறித்து அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை கலந்து பேசி முடிவெடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.

ஆளுநர் செய்யத் தவறியது ஏன்?

ஆளுநர் செய்யத் தவறியது ஏன்?

இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி அரவக்குறிச்சி பா.ம.க.வேட்பாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் தொடர்ந்த இன்னொரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் இச்சிக்கலில் ஆளுநர் தலையிடுவது எந்த வகையில் நியாயமானதாக இருக்கும்? அப்படியே இச்சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த விஷயத்தில் தலையிட்டதாக வைத்துக் கொண்டாலும், 2 தொகுதிகளிலும் போட்டியிடும் மற்ற வேட்பாளர்களையும் அழைத்து பேசி, கருத்து கேட்பது தான் சரியானதாக இருக்கும். ஆனால், ஆளுநர் அவ்வாறு செய்யத் தவறியதன் மர்மம் விளங்கவில்லை.

வாக்குரிமை முக்கியமா, ஜனநாயகம் முக்கியமா?

வாக்குரிமை முக்கியமா, ஜனநாயகம் முக்கியமா?

இரு தொகுதி தேர்தலை உடனடியாக நடத்தாவிட்டால், அத்தொகுதி உறுப்பினர்களின் மாநிலங்களவைத் தேர்தல் வாக்குரிமை பறிபோகும் என்ற ஆளுநரின் வாதத்தை ஏற்கவே முடியாது. இரு தொகுதிகளில் எந்த கட்சி வென்றாலும் அது மாநிலங்களவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதையும் தாண்டி ஜனநாயகம் பாதுகாக்கப்படுவது முக்கியமா... இரு உறுப்பினர்களின் மாநிலங்களவைத் தேர்தல் வாக்குரிமை முக்கியமா? என்று கேட்டால் ஜனநாயகம் பாதுகாக்கப்படுவதே முதன்மையானதாகும். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்குகள் ரூ.500 முதல் ரூ.5000 வரை விலை கொடுத்து வாங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் ரூ.5000 பணத்துடன் இருசக்கர ஊர்தி, குளிர்பதனப் பெட்டி, துணி துவைக்கும் எந்திரம் ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த அளவு ஜனநாயகப்படுகொலை நடந்துள்ள நிலையில், அதை ஓரளவு சரி செய்யும் நோக்குடன் தான் இரு தொகுதிகளின் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன.

அதிமுகவின் குரலாக ஆளுநர்

அதிமுகவின் குரலாக ஆளுநர்

இதுவே போதுமானதல்ல; இரு தொகுதிகளிலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த அதிமுக, திமுக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பட்டு வருகிறது. ஆனால், இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரைப்பதன் மூலம் அதிமுகவின் குரலாக மாறி ஜனநாயகப் படுகொலைக்கு துணை போயிருக்கிறார் ஆளுநர் ரோசய்யா. தமிழக அரசின் ஊழல்கள் குறித்து ஆதாரங்களுடன் பா.ம.க. அளித்த புகார் மனு மீது ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத ஆளுநர், இப்போது அதிமுக வேட்பாளர்கள் அளித்த புகார் மனு மீது ஒரே நாளில் நடவடிக்கை எடுத்திருப்பதன் மூலம் தாம் யார்? என்பதை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்டவர் தமிழகத்தின் ஆளுநராக தொடர்ந்தால், அது ஜனநாயகப் படுகொலைகள் தொடரவே வழி வகுக்கும். ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநர் பதவியும் தேவையில்லை என்று ஒரு காலத்தில் தி.மு.க. எழுப்பிய முழக்கத்தை நியாயப்படுத்தும் வகையில் தான் ஆளுனரின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

டிஸ்மிஸ் செய்ய வேண்டும்

அதேபோல், தேர்தல் ஆணையத்தின் பிரதிநிதியாக செயல்படும் தலைமைத் தேர்தல் அதிகாரியான ராஜேஷ் லக்கானி தேர்தல் நடைமுறை முடிவடையும் முன் ஆளுநரை சந்தித்ததும், விளக்க அறிக்கை தாக்கல் செய்ததும் தவறு. எனவே, தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் பரிந்துரையை ஆணையம் ஏற்கக்கூடாது. அதுமட்டுமின்றி, ஆளும்கட்சிக்கு சாதகமாக ஜனநாயகப் படுகொலைக்கு துணை போகும் தமிழக ஆளுநர் ரோசய்யாவை மத்திய அரசும், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை இந்திய தேர்தல் ஆணையமும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

English summary
PMK founder Dr Ramadoss has slammed Governor Rosaiah and CEO Lakhoni for their invovlement in Tanjore, Aravakurichi elections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X