For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதானியுடன் போட்ட ஒப்பந்தம் என்ன.. வெள்ளை அறிக்கை கேட்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Google Oneindia Tamil News

சென்னை: தொழிலதிபர் அதானியின் நிறுவனத்துடன் தமிழக அரசு போட்டுள்ள மின் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தம் தொடர்பாக வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சூரிய மின்சக்தி நிலையம் அமைத்து 648 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க அதானி நிறுவனத்தோடு முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கான அதானி நிறுவனத்தின் முதலீடு ரூ 4536 கோடி என்று கூறப்பட்டுள்ளது.

EVKS questions the contract between TN govt and Adani group

அ.தி.மு.க. அரசின் பெரும் உதவியுடன் 5000 ஏக்கருக்கும் மேல் இத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

நரேந்திர மோடி அரசின் விவசாயிகளுக்கு விரோதமான புதிய நில கையகப்படுத்தும் அவசர சட்டத்தை எதிர்த்து நாட்டு மக்கள் போராடி கொண்டிருக்கும் பொழுது எந்த அடிப்படையில் 5000 ஏக்கர் நிலம் அதானி நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்டது என்கிற விபரம் மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்தின் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை எவ்வளவு என்கிற விபரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், அதானி நிறுவனத்திடமிருந்து 1 யூனிட் மின்சாரத்தை ரூ.7.01 விலை கொடுத்து 25 வருடத்திற்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் படி பார்த்தால் தற்போது இருக்கிற மின் உற்பத்தி முறைகளில் அதானி நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் சூரிய மின் சக்திதான் மிகவும் அதிக விலை கொடுத்து வாங்கப்பட இருக்கிறது.

அதானி நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கான விலை எந்த அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது? பகிரங்க டெண்டர் கோரப்பட்டு அதனடிப்படையில் நிலை நிர்ணயிக்கப்பட்டதா?

அதானி நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு அளவற்ற சலுகைகள் வழங்கும் நோக்கத்துடன், அதிக விலை நிர்ணயம் செய்யபட்டுள்ளதா? இப்போது நிர்ணயம் செய்திருக்கின்ற விலை மார்ச் 2016 வரை தான் என்றும் 25 வருடங்களுக்கு இந்த விலை பொருந்தாது என்றும் கூறப்படுகிறதே? மின்சாரத்தின் விலையை, மின்சார வாரியம் முடிவு செய்யாமல் அதானி நிறுவனம்தான் முடிவு செய்கிறது எனக் கூறப்படுவது உண்மையா? இத்தகைய ஒப்பந்தங்கள் போடுவதில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன்?

மின் உற்பத்தியில் மிகக் குறைந்த விலையில் காற்றாலை மின்சாரம் 1 யூனிட்டிற்கு விலை ரூ.3.50 விலைக்கு விற்க முனைகிறவர்களிடமிருந்து அ.தி.மு.க ஆட்சியாளர்கள் வாங்க மறுப்பது ஏன்? அதே போல அனல் மின்நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படுகிற மின்சாரம் மிகக்குறைந்த விலையில் 1 யூனிட் ரூ.4.00 க்கு கிடைக்கிற போது அதை ஊக்குவிக்காமல் இருப்பது ஏன்?

கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட தனியாரிடமிருந்து 1 யூனிட் மின்சாரம் ரூ.12.50 விலைக்கு 2950 மில்லியன் யூனிட் ஆண்டுதோறும் வாங்கப்படுகிறது. இதனால் மின்சார வாரியத்திற்கு ரூ.5212 கோடி கூடுதல் செலவாகிறது.

இத்தகைய நடவடிக்கைகள் காரணமாகவே மின்சார வாரியத்திற்கு நடப்பாண்டில் ரூ.13,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ரூ.54,000 கோடி நஷ்டத்தில் மின்சார வாரியம் சிக்கியுள்ளது.

மேலும், மின்சாரவாரியம், தனியாருக்கு மின்பாக்கி தொகையாக ரூ.90,000 கோடி செலுத்த வேண்டிய நிலை உள்ளது. இத்தகைய பொருளாதார சீரழிவில் உள்ள மின்சாரவாரியத்தை தொழில் திமிங்கலமாக உள்ள அதானி குழும நிறுவனத்திடம் சிக்க வைக்கலாமா? அப்படி சிக்கவைக்கப்பதற்கான முயற்சிகளில் திரைமறைவு பின்னணி ரகசியங்கள் என்ன? அதானி நிறுவனத்திற்கு மட்டும் அளவற்ற சலுகைகள் காட்டுவதன் உள்நோக்கம் என்ன?

எனவே, தமிழக மின்சார வாரியம் அதானி நிறுவனத்தோடு போடப்பட்டுள்ள ஒப்பந்தம் பல்வேறு சந்தேகங்களையும், சர்ச்சைகளையும் கிளப்பி உள்ளது. இதன் முழு விபரமும் நாட்டு மக்களுக்கு தெரிந்தாக வேண்டும். அதானி நிறுவனத்திடம் போடப்பட்டுள்ள ஒப்பந்தம் குறித்த முழுவிபரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று இளங்கோவன் கேட்டுள்ளார்.

English summary
TNCC president EVKS Elangovan has questioned the agreement between TN govt and Adani group regarding solar power production.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X