For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மோடிக்குத்தான் சப்போர்ட் பண்ணுமா?

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகளால் எந்த ஒரு கட்சிக்கும் துணைபோக முடியாது. தேர்தலில் ஒரு கட்சி வெல்லும் போது தோற்றக் கட்சி இப்படி பேசுவது வாக்குச் சீட்டு இருந்த காலத்திலேயே இருந்துள்ளது.

Google Oneindia Tamil News

-பா. கிருஷ்ணன்

சென்னை: "ஆடத் தெரியாத மங்கை அரங்கத்தைக் கோணல் என்கிறாள்" என்று தமிழில் மிகவும் புகழ்பெற்ற பழமொழி உண்டு. இப்போது மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்று கூச்சலிடும் அரசியல் கட்சிகளைப் பார்க்கும்போது அப்படித்தான் தோன்றுகிறது.

அண்மையில் ஐந்து மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகியுள்ளன. அதற்கேற்ப இயந்திரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது என்று 16 அரசியல் கட்சிகள் புகார் கூறியுள்ளன. முறைகேடுகளுக்கு வழிவகுப்பதை நிருபிக்கும் நிலையில் அதை சரி செய்ய தயாராக இருக்கிறது என்று அறிவித்துள்ளது. எந்த அரசியல் கட்சியும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் செய்யமுடியும் என்று இதுவரை நிருபிக்கவில்லை.

EVM supports Modi?

தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்ததால் புகார் கூறுவது புதிதல்ல. காங்கிரஸ் கட்சி முதல் முறையாகப் பிளவு பட்ட நிலையில், 1971ம் ஆண்டு மக்களவைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, பிரதமராக இருந்த இந்திரா காந்தியை எதிர்த்து காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா ஆகிய மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சுதந்திரா, சோஷலிஸ்ட், ஜனசங்கம் ஆகிய பல்வேறு கட்சிகளுடன் இணைந்து தேசிய அளவில் மகா கூட்டணி அமைத்தனர். எனினும் அந்தத் தேர்தலில் மகா கூட்டணி தோல்வியடைந்தது. தமிழகத்தில் இந்திரா காந்தியுடன் கூட்டணி சேர்ந்த தி.மு.க.வும் வெற்றி பெற்றது. அப்போது விரக்தி அடைந்த எதிர்க்கட்சியினர், தேர்தல் வாக்குச் சீட்டில் ரஷிய மை பயன்படுத்தப்பட்டது என்று புகார் எழுப்பினர். அவ்வாறு ரஷிய மையால் தயாரிக்கப்பட்ட வாக்குச் சீட்டில், பதிவு செய்யப்பட்ட முத்திரை மறைந்து, இந்திரா காங்கிரஸுக்கு ஆதரவான சின்னங்களில் முத்திரை தோன்றும் என்பது போல புகார்கள் கூறப்பட்டன.

அத்தகைய புகாரை காமராஜர் நிராகரித்தார். "ஜனநாயகத்தில் மக்கள் தந்த தீர்ப்பை ஏற்க வேண்டும். தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபடவேண்டும்" என்று கூறி அதற்கு முற்றுப் புள்ளி வைத்தார். மூத்த தலைவர்களும் அதையே கூறினர்.

இப்படி புகார் கூறிப் பேசுவதை மக்கள் செல்வாக்குடன் கறைபடாத அப்பழுக்கற்ற காமராஜர், மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா, அசோக் மேத்தா, பிஜு பட்நாயக், வீரேந்திரா பாட்டீல் போன்ற தலைவர்களே ஏற்கவில்லை. தேர்தல் முடிவை ஏற்றுக் கொண்டு பாடுபட்டனர் என்பதும், அடுத்து 1977ம் ஆண்டு தேர்தலில் வெற்றி கண்டதும் வரலாறு.

தேர்தல் நடைமுறையில் வாக்குப் பதிவு என்பது மக்களின் மனநிலையை அறிவதற்கான வழிமுறை. நல்ல பணிகளைச் செய்த தலைவர்கள் ஆட்சியில் தொடரவும், தவறான ஆட்சி நடத்தியவர்களை ஆட்சியிலிருந்து நீக்குவதற்கும் மக்களுக்குத் தரப்பட்ட அதிகாரத்தை நிரூபிக்கும் கருவியாகும்.

நாடு விடுதலை பெறுவதற்கு முன் நடத்தப்பட்ட தேர்தல்களில் வாக்குச் சாவடிகளில் இரு வண்ணப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும். மக்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டுமானால், அதற்காக வைக்கப்பட்ட வண்ணப் பெட்டியில் சீட்டு போடுவார்கள். ஆளும் கட்சியை நிராகரிக்க வேண்டுமானால், எதிர்க்கட்சிக்கான வேறு வண்ணப் பெட்டியில் போடுவார்கள். இது பிறகு, மாறி, ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி சின்னங்கள் தரப்பட்டு, வாக்குச் சீட்டில் அச்சின்னம் அச்சிடப்பட்ட பகுதியில் முத்திரையிட்டு தேர்ந்தெடுக்கும் நடைமுறை வந்தது.

இது பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தது. இத்தகைய வாக்குச் சீட்டு முறையில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்குச் சாவடியில் எல்லாக் கட்சிகளின் ஏஜெண்டுகளும் இருப்பர்.
எனினும் அரசியல் சீர்குலைந்து போனநிலையில், தேர்தலுக்கு முன் வாக்காளர்களைக் கவர்வதற்காக பகட்டான பிரசாரம், வாக்குறுதிகள் அள்ளி வீசப்படுகின்றன. அப்படியும் மசியாத நிலையில், பணம் கொடுத்து வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் மோசமான நடைமுறை கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகிறது.

வாக்குச் சாவடிக்குச் செல்லும் பாமரர்களை அறியாமையைப் பயன்படுத்தி, மயக்கியும் மிரட்டியும் குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக முத்திரையிடச் செய்வது நடந்து வருகிறது. பல இடங்களில் வாக்குச் சீட்டுகளைக் கைப்பற்றி, கள்ளத்தனமாக வாக்குகளைப் பதிவு செய்வது ஆகியவை நடைபெறுகின்றன.

இந்த முறைகேடுகளைப் பெருமளவுக்குக் குறைப்பதற்கும், வாக்குகளை விரைவாக எண்ணி, தேர்தல் முடிவுகளை அறிவிக்கவும், காகிதப் பயன்பாட்டை ஒழிக்கவும், மின்னணு வாக்குப் பதிவு இயந்திர முறை கொண்டு வரப்பட்டது.

வாக்குச் சீட்டுகளைப் பறித்து, கள்ள வாக்குகளைப் போடலாம். வாக்குச் சீட்டில் மக்கள் இரு சின்னங்களில் முத்திரையிடுவதன் மூலம் செல்லாத வாக்குகள் பதிவாவதைத் தடுக்கலாம். மற்றபடி அதில் முறைகேடு எதற்கும் வழியே இல்லை.

காரணம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் ஒன்றுக்குப் பல முறை பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் வாக்குச் சின்னங்களையும் வாக்காளர் பெயர்களையும் இடம்பெறச் செய்வது போன்ற பணிகள் யாவும் வெளிப்படையாகவே நடக்கின்றன. இவற்றில் எல்லாக் கட்சிகளும் கேள்வி எழுப்பலாம். ஆனால், அப்படிச் செய்வதில்லை.

அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவரும்போது, அதனால் பின் விளைவுகள் வரும் என்று கவலைப்பட்டு, ஆயிரம் குரல் எழுப்பும் கட்சிகள் யாரும், வாக்குப் பதிவு இயந்திரம் குறித்து தேர்தல் நேரத்தில் குரல் எழுப்புவதேயில்லை. மாறாக, பணப் பட்டுவாடா, முறைகேடான வாக்குறுதிகள், கொள்கைகள் ஆகியவை குறித்துதான் பேசுகின்றன.

ஆனால், தேர்தல் முடிந்து வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டால் வெளியிடும் முதல் அறிக்கை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் முறைகேடு என்பதுதான்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எவ்வித முறைகேடு செய்ய இயலாது என்று ஏராளமான விஞ்ஞானிகள் நிரூபித்துக் காட்டிவிட்டனர்.

ஓரிரு முறை வடகிழக்கு மாநிலத்தில் நடந்த தேர்தல்களில் வாக்குச் சாவடியில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்று கூறுவதைப் போல, மோசடியாக குறிப்பிட்ட சின்னத்தில் பட்டனை அழுத்திய சம்பவம் நடந்திருக்கிறது. காரணம், உதவுவதாகக் கூறும் அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் தனது கட்சிக்கு ஆதரவாக பட்டனை அழுத்திவிட்டால், அதுமட்டுமே பதிவாகும். அடுத்து, வாக்காளர் அழுத்துவது பதிவாகாது. அதுபோல முறைகேடு செய்தால்தான் உண்டு. அப்போது கூட அது இயந்திரத்தின் பிழை அல்ல. அதுபோல் முறைகேடு செய்பவரை வாக்குச் சாவடி அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதைத் தவிர வேறு வழியில் ஒரு கட்சியின் சின்னத்தில் பட்டனை அழுத்தினால், வேறு கட்சியின் சின்னத்தில் பதிவாகும் என்பது அறிவியல் அடிப்படையில் மிகவும் தவறானது. காரணம் மின்னணு இயந்திரங்களில் ஒன்றை புரோக்ராம் செய்துவிட்டால், கடைசி வரையில் அப்படித்தான் இயங்கும். உதாரணத்துக்கு காக்கை சின்னத்தில் பட்டனை அழுத்தினாலும், குருவி சின்னத்தில் பதிவாவது போல முன்கூட்டியே ஆளும் கட்சி முறைகேடு செய்திருந்தால் அந்த வாக்குப் பதிவு இயந்திரத்தில் 100 சதவீதம் குருவிச் சின்னத்தில்தான் எல்லா வாக்குகளும் பதிவாகியிருக்கும்.

நாட்டின் மிகப் பெரிய விஞ்ஞானிகளைக் கொண்ட குழு பலமுறை பரிசோதித்த பிறகே மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தைப் பயன்படுத்துவதற்கு தேர்தல் ஆணையம் இசைந்தது. அதையடுத்து 1982ம் ஆண்டு கேரளத்தில் பரூர் என்ற தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் பரிசோதனை முறையில் 50 வாக்குச் சாவடிகளில் செயல்படுத்தப்பட்டது. 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாடு முழுவதும் 10 லட்சத்து 75 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

இந்த இயந்திரம், கட்டுப்பாட்டுக் கருவி், ஓட்டுப்பதிவுக் கருவி என இரு பகுதிகளைக் கொண்டது. கட்டுப்பாட்டு கருவி மூன்றாவது வாக்குப்பதிவு அலுவலர் வசம் இருக்கும். ஓட்டுப்பதிவுக் கருவி மறைவான இடத்தில் வாக்காளர் வாக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் பட்டனை அழுத்திவிட்டால், அதை யாரும் இயக்க முடியாது. எனவே, அடுத்த வாக்காளர் வந்த பிறகே, அதை விடுவித்து, மீண்டும் பட்டன் அழுத்தும் வகையில் அலுவலர் கட்டுப்பாட்டுக் கருவியை இயக்குவார். அப்போது அடுத்த வாக்காளர் தனது வாக்கைப் பதிவு செய்யலாம்.

இறுதியில், மூடுவதற்கான பட்டனை அதிகாரிகள் அழுத்திவிட்டால், அதற்குப் பின் எதுவும் பதிவாகாது. மொத்தம் என்ற பட்டனை அழுத்தினால், அதுவரை பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை தெரியும்.
இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டால், அதற்கு பதில் புதிய இயந்திரத்தை அப்பகுதிக்கான மண்டல அதிகாரி பொருத்துவார். பழுதான இயந்திரத்தில் பதிவான ஓட்டுக்கள் அதன் 'மெமரி'யில் அப்படியே இருக்கும் என்பதால், முதலில் இருந்து ஓட்டுப்பதிவை நடத்த வேண்டியதில்லை. இந்த இயந்திரம் ஒரு நிமிடத்திற்கு ஐந்து ஓட்டுகளுக்கு மேல் பதிவு செய்யாது. யாராவது ஓட்டுச் சாவடியை கைப்பற்ற முயன்றால், தலைமை அலுவலர் 'முடிவு' பொத்தானை அழுத்தி ஓட்டுப்பதிவை நிறுத்திவிட முடியும்.

உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் எந்த வாக்குச் சாவடியிலாவது ஆளும் கட்சிக்கே அத்தனை வாக்குகளும் பதிவாகியுள்ளன என்று தகவல் உண்டா. மின்னணு இயந்திரத்தில் அப்படி முறைகேடு செய்ய இயலாது.

தங்களது தேர்தல் தோல்விக்கு இயந்திரம் சரியில்லை என்று கூறுவது பழைய தமிழ்ப் பழமொழியை நினைவுபடுத்துகிறது.

English summary
EVM does not make mistake. Defeated parties in the elections have to work hard to win.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X