திருப்பரங்குன்றத்தை குறிவைத்த பைனான்சியர் அன்பு, காளிமுத்து மகன் - கடைசியில்ஏ .கே.போஸ்!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுகவில் மறைந்த எம்.எல்.ஏ. சீனிவேலுவின் மகன் செல்வக்குமார், சினிமா பைனான்சியர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை ஆகியோர் குறிவைத்தனர். எதிர்பாராத விதமாக முன்னாள் எம்.எல்.ஏவான ஏ.கே. போஸ்க்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 19ஆம் தேதி நடக்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஏற்கனவே, கடந்த மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் இந்த மூன்று தொகுதிகளிலும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நேரடியாக மோதின.

இந்த முறையும் 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படவுள்ளனர். எனவே, இந்த 3 தொகுதிகளிலும் மீண்டும் அதிமுக - திமுக இடையே மிகக்கடுமையான பலப்பரீட்சை நடக்கும் என்றே கூறப்படுகிறது.

திமுக பரபரப்பு

அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா மருத்துமனையில் இருக்கும்நிலையில், திமுக தன் பணிகளை துரிதமாக்கியிருக்கிறது. விருப்பமனு, வேட்பாளர் நேர்காணல் என அண்ணா அறிவாலயம் பரபரப்படைந்துள்ளது. ஏற்கனவே வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் போட்டியிட தடையில்லை என்று தேர்தல் ஆணையம் கூறிய நிலையில் விருப்பமனு பெறுகிறது திமுக.

திருப்பரங்குன்றம் தொகுதி

திமுகவில் கடந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றியை இழந்த சேடபட்டி முத்தையா மகன் மணிமாறன் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக கூறப்பட்டது. ஆனால் திமுகவில் இந்தத் தொகுதியை பல முன்னாள், இந்நாள்கள் குறிவைத்துள்ளதால் புதுமுகத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

அதிமுகவில் வேட்பாளர் ஏ.கே.போஸ்

அதிமுகவில் எம்.எல்.ஏ. சீனிவேலுவின் மகன் செல்வக்குமார், கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன், டேவிட் அண்ணாதுரை ஆகியோர் குறிவைத்துள்ளனர். அதிமுகவைப் பொருத்தவரை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் மதுரை மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் டேவிட் அண்ணா துரை நிறுத்தப்படலாம் என்று கூறப்பட்டது. ஆனால் எதிர்பாராதவிதமாக முன்னாள் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பலமுனை போட்டி

கடந்த முறை போட்டியில் இருந்த மக்கள் நலக் கூட்டணி இம்முறை போட்டியில் இல்லை. ஆனால் அதேநேரம் மூன்று தொகுதிகளிலும் பாஜக போட்டியிடப்போவதாக அதன் தமிழகத் தலைவர் தமிழிசை அறிவித்துள்ளார். தேமுதிக தேர்தல் தோல்வியிலிருந்து மீளவும், பலவீனமாக இருக்கும் கட்சிக்கு புத்துணர்வு கொடுக்கவும் இந்தத் தேர்தலை பயன்படுத்த முடியுமா என்று ஆலோசித்து வந்தாலும் இன்னும் அதன் முடிவு அறிவிக்கப்படவில்லை. பலமுனை போட்டி ஏற்பட்டாலும் வெற்றி தோல்வி யாருக்கு என்பதில் இந்த தொகுதியில் திமுக அதிமுக இடையே கடுமையான பலப்பரிட்சை நடக்கும் என்றே கூறப்படுகிறது.

English summary
Cinema financier Anbu Chezhiya is trying to get seat in Thiruparankundram by election, But sources say that late Kalimuthu's son David Annadurai be given the seat.
Please Wait while comments are loading...