For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குற்றப்பத்திரிக்கை வாசித்த ஜெயந்தி நடராஜன்: அரசியலில் இருந்து ஓய்வு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சி தலைமை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன்வைத்துள்ளது பரபரப்பை பற்றவைத்துள்ளது.

கட்சியில் தம்மை ஒரங்கட்டுவதாக ராகுல் காந்தி மீதும் அவர் புகார் கூறியுள்ள ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். எந்த கட்சியிலும் சேரமாட்டேன் என்றும் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சேருவது பற்றி மறுபரிசீலனை செய்யமாட்டேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

Former UPA minister Jayanthi Natarajan quits Congress; Where will she go now?

மத்திய அமைச்சர்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தவர் ஜெயந்தி நடராஜன், கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீரென பதவி விலகினார். ராகுல்காந்தியுடன் உரசல் கட்சிப் பணிகளில் ஈடுபட ஏதுவாக அவர் ராஜினாமா செய்ததாக காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்பட்டது. எனினும் அப்போது நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, புதிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறையிடம் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.

நெருக்கடி இல்லை

லோக்சபா தேர்தல் நடைபெறுவதற்கு சரியாக 100 நாட்களுக்கு முன்னதாக டிசம்பர் 2013-ல் ஜெயந்தி நடராஜன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அப்போது அவர் நானே தான் ராஜினாமா செய்கிறேன், எனக்கு எந்த நெருக்கடியும் இல்லை என கூறியிருந்தார்.

ஒரங்கட்டப்பட்டார்

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஜெயந்தி நடராஜன் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து கட்சி செயல்பாடுகளிலிருந்து ஓரங்கட்டப்பட்ட நிலையில் இருந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

காரணம் தெரியாது

அந்த கடிதத்தில் "நான் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்று வரை எனக்குத் தெரியாது" என குறிப்பிட்டுள்ளார்.

வளைந்து கொடுக்கவில்லை

30 ஆண்டு காலமாக எனது களங்கமற்ற அரசியல் வாழ்க்கைக்கும், என் குடும்ப பெருமைக்கும் ஊறு விளைவிப்பதுபோல் ஊடகங்களில் என் மீது விமர்சனங்கள் எழ மேலிட நெருக்கடிக்கு நான் வளைந்து கொடுக்காததே காரணம் எனவும் அக்கடிதத்தில் ஜெயந்தி நடராஜன் கூறியுள்ளார். இதனால் தாம் பழிவாங்கப்பட்டதோடு திட்டமிட்டு தம்மை பற்றி அவதூறு பரப்பப்பட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.

சந்திக்க முடியவில்லை

ஜெயந்தியின் கடிதத்திற்கு, சோனியா காந்தியிடம் இருந்து இன்னும் பதில் வரவில்லை. தவிர, சோனியா காந்தியை நேரில் சந்தித்து தன் மீதான வீண் பழிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும் என ஜெயந்தி பல முறை முயன்றும் அதற்கான சந்தர்ப்பமும் அமையவில்லையாம்.

பக்தவச்சலம் பேத்தி

ஜெயந்தி நடராஜன் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். முன்னாள் முதல்வர் பக்தவச்சலம் (இவர்தான் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் கடைசி முதல்வரும் கூட) அவர்களின் பேத்தி என்ற பெருமைக்குரியவர். வழக்கறிஞர் பட்டம் பெற்றுள்ளார். ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சியில் 1980 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியால் அடையாளம் காணப்பட்டார் ஜெயந்தி நடராஜன். 1986, 1992 ஆம் ஆண்டுகளில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ்

ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை தொடங்கிய போது தனது ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துவிட்டு மூப்பனார் கட்சியில் இணைந்தார். 1997 ஆம் ஆண்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார் ஜெயந்தி.

செய்தி தொடர்பாளர்

தமிழ் மாநில காங்கிரஸ் மீண்டும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்த உடன் சோனியா காந்தியால் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து 2011ஆம் ஆண்டு ஜூலை மாதம் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சராக ஜெய்ராம் ரமேசுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார் ஜெயந்தி நடராஜன்.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் மோதல்

தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுடன் ஜெயந்தி நடராஜனுக்கு எப்போதுமே இணக்கமான போக்கு இருந்தது இல்லை. இப்போது ராகுல்காந்தி மீது குற்றம் சாட்டியுள்ள கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார் ஜெயந்தி நடராஜன்.

வேறு கட்சியில்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய உடன் தமிழ் மாநில காங்கிரஸ் அல்லது பாரதிய ஜனதா கட்சியில் ஜெயந்தி நடராஜன் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால் தான் எந்தக்கட்சியிலும் இணையப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கசப்பான சூழல்

நான் ஒரு கசப்பான சூழலில் இருக்கிறேன். காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தில் பிறந்த என்னை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதித்து, புறக்கணித்துள்ளது. அந்தக் கசப்புணர்வில் இருந்து நான் விடுபட சற்று கால அவகாசம் வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயந்தி நடராஜன்.

மறுபரிசீலனை இல்லை

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ள நிலையில், மறுபடியும் எனக்கு கட்சி மேலிடத்திலிருந்து அழைப்பு வரும் என நினைக்கவில்லை. அப்படியே அழைத்தாலும் அது குறித்து மறு பரிசீலனை செய்ய விரும்பவில்லை என்றும் ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சரியும் சீட்டுக்கட்டுக்கள்

மத்தியில் ஆட்சி மாறிய உடன் காட்சிகளும் மாறத் தொடங்கின. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜி.கே.வாசன் தலைமையில் ஒரு அணி விலகியது. ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போர்க்கொடி உயர்த்தியுள்ளார். அந்த பரபரப்பு நீங்குவதற்குள் ஜெயந்தி நடராஜன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியது ஊடகங்களுக்கு உற்சாக தீனி போட்டுள்ளது.

English summary
Former Minister Jayanthi Natarajan may join TMC or BJP soon, it is expected. In a major embarrassment for the Congress party days ahead of the Delhi Assembly polls, Jayanthi Natarajan, who was sacked as Environment minister three months ahead of the 2014 Lok Sabha polls has quit the Congress after what she terms has been a period of 'excruciating mental agony and public humiliation.'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X