ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் களமிறங்குகிறார் கவுதமி? கங்கை அமரன் பெயரும் பரிசீலனை

கவுதமி ரெட் சிக்னல் காட்டினால், ஏற்கனவே கட்சியில் இணைந்துள்ள கங்கை அமரன் அடுத்த சாய்ஸ் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆர்.கே.நகரில் பாஜக சார்பில் நடிகை கவுதமியை களமிறக்க பாஜக யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆர்.கே.நகர் தொகுதியில், 2015ல் நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க. பா.ஜ.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், ஜெயலலிதாவிற்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தாமல் தேர்தலை புறக்கணித்தன.

இந்நிலையில், முதல்வராக இருந்த, ஜெயலலிதா மறைவால், ஏப்ரல் 12ல், ஆர்.கே.நகர் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதில், பங்கேற்பதா, வேண்டாமா என, பா.ஜ.க குழப்பத்தில் உள்ளது.

புதிய ஐடியா

ஆர்.கே.நகர் தேர்தலில் நிறுத்துவதற்கு நல்ல வேட்பாளர் கிடைக்காவிட்டால் தேர்தலை புறக்கணிக்கலாம் எனதான் யோசித்து வந்தது பாஜக. ஆனால் இப்போது திடீரென ஒரு ஐடியா அக்கட்சிக்கு கிடைத்துள்ளது.

கவுதமி, கங்கை அமரன்

பாஜக மாநில தலைவர் தமிழிசை, நடிகை கவுதமி, இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆகியோரது பெயர்கள் தீவிர பரிசீலனையில் உள்ளது. அதில் கவுதமி பெஸ்ட் சாய்ஸ் என பாஜக மேலிடம் நினைக்கிறது.

விசாரணை கமிஷன்

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல் முதலில் வலியுறுத்தியது கவுதமிதான். யாருமே பிரச்சினை கிளப்பாத நேரத்தில் கவுதமி பேசியதால் மக்கள் மத்தியில் அதற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. ஜெயலலிதா போட்டியிட்டு வென்ற தொகுதியில், கவுதமி போட்டியிட்டால் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்பதால் அவரை பாஜகவில் இணைத்துக்கொண்டு போட்டியிட செய்யலாம் என்பது பாஜக தலைமை எண்ணம்.

யோசனை

இதுகுறித்து கவுதமியிடம் சீனியர் பிரமுகர் ஒருவர் தூது போய் பேசியுள்ளாராம். எனக்கு பிரதமர் மோடியை நன்றாகத் தெரியும். அரசியல் தாண்டி பல சேவைகளை நான் செய்து வருகிறேன். இருப்பினும் அரசியலுக்கு வரலாமா என்பது குறித்து சில நாட்களில் கருத்து தெரிவிக்கிறேன் என பதில் அளித்தாராம் கவுதமி. ஒருவேளை கவுதமி ரெட் சிக்னல் காட்டினால், ஏற்கனவே கட்சியில் இணைந்துள்ள கங்கை அமரன் அடுத்த சாய்ஸ் என்கிறார்கள் பாஜக வட்டாரத்தில்.

தொகுதியில் களப்பணி

குஷியான பாஜக நிர்வாகிகள், ஆர்.கே.நகர் தொகுதியில் பூத் வாரியாக ஆய்வு நடத்தி வருகிறார்களாம். தொகுதி மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அறிக்கை தயாரித்துள்ளார்களாம். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் வடசென்னை மக்களுக்கு எந்தவித நன்மையும் நடக்கவில்லை என்பதை பிரசாரத்தின்போது பேச பாஜக பிரசார வியூகமும் தீட்டியுள்ளதாம்.

வெளிமாநில பிரபலங்கள்

ஆர்.கே.நகர் தொகுதியில் கணிசமாக உள்ள தெலுங்கு மொழி பேசும் மக்களிடம் வாக்குகளை ஈர்க்க, கர்நாடகா, ஆந்திராவில் இருந்து பாஜக நிர்வாகிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என கூறப்படுகிறது. அதேநேரம், டெல்லி மேலிட தலைவர்கள் பிரசாரத்தில் பங்கெடுக்க மாட்டார்கள் என கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் இந்த மர்மத்திற்கு விடை கிடைத்துவிடும்.

English summary
Gowthami is the BJP choice of candidate for R.K.Nagar by election, says sources.
Please Wait while comments are loading...