இளம்பெண் கடத்தல் வழக்கு சசிகலா புஷ்பாவை ஏப்.20 வரை கைது செய்ய தடை

சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை ஏப்ரல் 20ஆம் தேதிவரை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராஜ்யசபா எம்.பி சசிகலா புஷ்பா அவரது கணவர் லிங்கேஸ்வரன் ஆகியோரை ஏப்ரல் 20ஆம் தேதிவரை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டுள்ளார்.

தி.மு.க. எம்.பி. திருச்சி சிவாவுடன் டெல்லி விமான நிலையத்தில் தகராறில் ஈடுபட்டதால் சசிகலா புஷ்பாவிற்கும் அ.தி.மு.க. தலைமைக்கும் மோதல் ஏற்பட்டது. போயஸ் தோட்டத்திற்கு அழைத்து தன்னை தாக்கியதாகவும், தனது பதவியை ராஜினாமா செய்ய வலியுறுத்துவதாகவும் ராஜ்யசபாவில் சசிகலா புஷ்பா எம்.பி. பரபரப்பு புகார் தெரிவித்தார். இதனையடுத்து அதிமுகவில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டார்.

பாலியல் தொந்தரவு புகார்

சசிகலாபுஷ்பா வீட்டில் வேலை செய்த நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆனைகுடியை சேர்ந்த பாஸ்கர் மனைவி ஜான்சிராணி, 25 அவரது தங்கை பானுமதி,24, ஆகியோர் கடந்த 8.8.2016 அன்று தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில், சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வர திலகர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் தொந்தரவு செய்தனர் என்று கூறியிருந்தனர்.

புகார் வாபஸ்

இந்த புகார் குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் இளம்பெண்களுக்கு ஆதரவாக திசையன்விளையை சேர்ந்த வக்கீல் சுகந்தி ஆஜரானார். இந்நிலையில், அரசியல் நெருக்கடி காரணமாக சசிகலா புஷ்பா எம்.பி. மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பாலியல் புகார் அளித்ததாகவும், அந்த புகாரை வாபஸ் பெற உள்ளதாகவும் சகோதரிகள் இருவரும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்னீசுக்கு மனு அனுப்பினர்.

பானுமதி கடத்தல்

சகோதரிகளின் இந்த திடீர் பல்டி பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனது தங்கை பானுமதியை சாத்தான்குளம் முன்னாள் யூனியன் தலைவர் ஆனந்தராஜ் கடத்தி சென்றதாக ஜான்சிராணி திசையன்விளை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் முன்னாள் யூனியன் தலைவர் ஆனந்தராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மிரட்டல் புகார்

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பானுமதி திசையன்விளை போலீஸ் நிலையத்திற்கு ஒரு மனு அனுப்பினார். அந்த மனுவில், எனது சொந்த ஊரான ஆனைகுடியில் இருந்தபோது அங்குள்ள ஒரு வீட்டிற்கு சசிகலா புஷ்பாவின் ஆதரவாளரான வக்கீல் சுகந்தி என்னை வரவழைத்தார். அந்த வீட்டில் சசிகலாபுஷ்பா எம்.பி., அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், தாயார் கவுரி மற்றும் 2 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் எம்.பி. மீது கொடுத்த புகாரை வாபஸ் வாங்கும்படி மிரட்டினர்.

உயிருக்கு ஆபத்து

வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கிக் கொண்டு என்னை கடத்திச் சென்று நெல்லையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்தனர். மேலும் என்னை பொய் சாட்சி சொல்ல வற்புறுத்தினர். அப்போது என்னை விட்டு விடும்படி அவர்களிடம் கெஞ்சினேன். இதையடுத்து எனது வளர்ப்பு தந்தை ஜெயசீலனிடம் அவர்கள் என்னை ஒப்படைத்தனர். மீண்டும் திசையன்விளை வந்தால் எனக்கு பாதுகாப்பு இருக்காது என கருதினேன். எனவே சென்னை வந்து வக்கீல் ஞானபானு உதவியுடன் இந்த புகாரை அளிக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

9 பிரிவுகளில் வழக்கு

இந்த புகாரின் பேரில் திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் விசாரணை நடத்தி, சசிகலா புஷ்பா எம்.பி., அவருடைய கணவர் லிங்கேஸ்வர திலகன், தாயார் கவுரி, வக்கீல் சுகந்தி உள்பட 6 பேர் மீது 365- ஆள்கடத்தல், 368- போலி ஆவணங்கள் தயாரித்தல், 465- நம்பிக்கை துரோகம், 506 (2)- கொலை மிரட்டல், 195- பொய் சாட்சி கூற வற்புறுத்துதல், 147- கலகத்தை ஏற்படுத்துதல், 148- ஆபத்தான ஆயுதங்களை வைத்து கலகத்தை ஏற்படுத்துதல் மற்றும் 342, பெண்களை துன்புறுத்துதல் ஆகிய 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

கைது செய்ய தடை

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவர் தரப்பில் ஹைகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தனர். இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, மார்ச் 17ம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து, நீதிபதி நிஷா பானு உத்தரவிட்டார். இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஏப்ரல் 20ஆம் தேதிவரை சசிகலா புஷ்பா மற்றும் அவரது கணவரை கைது செய்ய தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

English summary
HC Madurai bench stayed arrest of Sasikala Pushpa and her husband in the kidnap case, till April 20.
Please Wait while comments are loading...