ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கு… உச்ச நீதிமன்றத்தை நாட ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரின் பிரேத பரிசோதனையில் தனியார் மருத்துவர் இருக்க வேண்டும் என்ற தந்தை பரமசிவத்தின் கோரிக்கை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டை அணுக சென்னை ஹைகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் புழல் சிறையில் மின் கம்பியை வாயால் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவரும் இருக்க வேண்டும் என்று அவரது தந்தை பரமசிவம் சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை இரண்டு பேர் கொண்ட அமர்வு விசாரித்தது. இந்த அமர்வில் இருந்த நீதிபதி குலுவாடி ரமேஷ் தனியார் மருத்துவரை வைத்து கொள்ளலாம் என்று கூறினார். அதற்கு நீதிபதி வைத்தியநாதன் மறுப்பு தெரிவித்தார். இரண்டு நீதிபதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவியதால் இந்த வழக்கு 3வது நீதிபதியிடம் சென்றது.

High court rejects plea of Ramkumar’s father

சென்னை ஹைகோர்ட்டின் தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல் 3வது நீதிபதியாக கிருபாகரனை நியமித்தார். ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கை விசாரித்த 3வது நீதிபதி கிருபாகரன் எய்ம்ஸ் மருத்துவரை பிரேத பரிசோதனையின் போது வைத்துக் கொள்ளலாம் என்றும் செப். 27ம் தேதிக்குள் பிரேத பரிசோதனையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

இதனை ஏற்க மறுத்த ராம்குமாரின் தந்தை பரமசிவமும், வழக்கறிஞர் சங்கர சுப்பும் இன்று தலைமை நீதிபதி எஸ்.கே கவுலிடம் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ராம்குமார் பிரேத பரிசோதனை வழக்கை விசாரிக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி, ராம்குமார் பிரேத பரிசோதனை தொடர்பாக 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், ராம்குமாரின் உடலைப் பாதுகாக்க வேறு அமர்வில் முறையிடுமாறும் ராம்குமார் தந்தைக்கு அறிவுரை வழங்கியுள்ளது உயர்நீதிமன்றம்.

சந்தேகத்திற்குரிய மரணங்களின் பிரேத பரிசோதனையின் போது தனியார் மருத்துவர் ஒருவர் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. இது ஒரு சாதாரண கோரிக்கைதான். இருந்தபோதும் சாதாரண மனிதர் பரமசிவம் ஏன் இப்படி அலையவிடப்படுகிறாரோ?

English summary
High court rejects plea of Ramkumar’s father to appoint private doctors during the Ramkumar’s body autopsy and directs to approach the Supreme Court.
Please Wait while comments are loading...

Videos