For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.20 கோடி செலவில் தரமணியில் உயிரி தொழில்நுட்ப மையம்: ஜெயலலிதா அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் சென்னை தரமணியில் ரூ.20 கோடி செலவில் உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி மையம் ஒன்று அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்..

சட்டப்பேரவையில் விதி எண் 110 இன் கீழ் தொழில்துறை குறித்த அறிவிப்புகளை வெளியிட்டபோது இதனை தெரிவித்தார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் துறையில் சிறப்பான இடத்தை தமிழ்நாடு பெற்றுள்ளது. எனது தலைமையிலான அரசு மேற்கொண்ட முன்முயற்சிகளின் காரணமாக முதலீட்டாளர்கள் தொழில் துவங்க நாடி வரும் இடமாக தமிழ்நாடு விளங்குகிறது.

highest technical center in Tharamani-Jayalalithaa

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2,42,160 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இதுவரை 64 நிறுவனங்கள் 87,062 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் துவங்குவதற்கான பணிகளை துவங்கி விட்டன. அவை, இதுவரை 25,020 கோடியே 48 லட்சம் ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளன. ஏனைய நிறுவனங்கள் தேவையான முன் ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளன.

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு மேலும் மேன்மை அடையும் வகையில், பின்வரும் அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் வெளியிடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

1. உயிரி தொழில்நுட்ப துறையில் ஆரம்ப நிலை நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில், உயிரி தொழில்நுட்ப அபிவிருத்தி ஒன்று 20 கோடி ரூபாய் செலவில் சென்னை தரமணியில் உள்ள டைடல் பயோபார்க் நிறுவனத்தில் நிறுவப்படும்.

இந்த மையமானது, உயிரி தொழில்நுட்ப தொடக்க நிறுவனங்கள், தொழில் முனைவோர்கள், விஞ்ஞானிகள் மற்றும் தனி நபர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை திட்டமிடவும், உருவாக்கவும் மற்றும் செயல்படுத்தவும் வழிவகை செய்து உயிரி தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த மையமானது உட்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ஆய்வகங்கள், வணிகப் பகுதிகள் மற்றும் அலுவலகப் பகுதிகள் ஆகியவைகளைக் கொண்டதாக 12,000 சதுர அடியில் அமையும்.

2. காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதுலீர் சிப்காட் வல்லம்-வடகால் தொழில் பூங்காவில், 245 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள வானுலீர்திப் பூங்காவில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பொருட்டு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். மேலும், இப்பூங்காவில், தொழில்களுக்கான பொது ஆய்வு மற்றும் தொழில்நுட்ப மையம் ஒன்றும் அமைக்கப்படும்.

3.1979-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட தமிழ்நாடு செய்திதாள் மற்றும் காகித நிறுவனம் கரும்புச் சக்கையை முக்கிய மூலப் பொருளாக உபயோகப்படுத்துவதில் உலகிலேயே முதலிடத்தையும்; அச்சு மற்றும் எழுது காகித உற்பத்தியில் இந்தியாவில் இரண்டாவது இடத்தையும் வகிக்கிறது. கரூர் மாவட்டம் காகிதபுரம் ஆலையில் உள்ள காகித ஆலையின் செயல்திறன் மற்றும் சுற்றுச்சூழலை மேம்படுத்த, ரசாயன மீட்பு கொதிகலன் பிரிவில் மின்னியல் துகள்படிவு அமைப்பினை விரிவாக்கம் செய்தல் மற்றும் கொதிகலன் பிரிவில் நிலக்கரி சேமிப்பு கிடங்கினை விரிவாக்கம் செய்தல், மின் உற்பத்தி பிரிவில் பழைய மின்மாற்றிகள் மற்றும் மின் கடத்திகளை புதுப்பித்தல், காகிதம் மற்றும் காகிதக் கூழ் பிரிவில் தேய்ந்த அழுத்த உருளைகளை சீரமைத்தல் ஆகிய அபிவிருத்தி திட்டங்கள் 25 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

4. திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், மொண்டிப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தால் ஆண்டொன்றுக்கு இரண்டு லட்சம் டன் திறன் கொண்ட இருபுறமும் மேற்பூச்சு செய்யப்பட்ட, அடுக்கு காகித அட்டை ஆலை ஒன்று நிறுவப்பட்டு என்னால் 29.1.2016 அன்று துவக்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் காகிதம் மற்றும் அடுக்கு காகித அட்டையின் மொத்த உற்பத்தியில் இந்திய அளவில் இந்நிறுவனம் மூன்றாம் இடத்தை அடைந்துள்ளது என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அடுக்கு காகித ஆலையின் தேவையினை கருத்தில் கொண்டு தேய்ந்த உருளை செப்பனிடும் இயந்திரம், சுருள் குழாய்களை தயாரிக்கும் இயந்திரம் ஆகியவை நிறுவப்படும். மேலும், அடுக்கு காகித அட்டை வைப்பதற்கான கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். இவை 35 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.

5.தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், உற்பத்தியைப் பெருக்கவும், நவீன இயந்திரங்களைக் கொண்டு குவாரி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், 10 மண்வாரி இயந்திரங்கள், 12 சுரங்க லாரிகள் டிப்பர்கள், 10 காற்றழுத்தி இயந்திரங்கள் மற்றும் 4 ஹைட்ராலிக் டிரில்லர்ஸ் ஆகியவை 20 கோடி ரூபாய் செலவில் வாங்கப்படும்.

6. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் 675 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் அரியலூர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பின்வரும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்

* அரியலூர் மாவட்ட மருத்துவமனைக்கு 36,000 சதுர அடி பரப்பளவு கொண்ட புதிய கட்டடம், பார்வையாளர்கள் காத்திருப்போர் அறை, நவீன சலவையகம் மற்றும் உள் மற்றும் வெளி நோயாளி பிரிவுகள் அமைக்கப்படும். ஆய்வகம் புதுப்பிக்கப்பட்டு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்படும். இவை 9 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.

* அரியலூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆனந்தவாடி, மணக்குடி, சீனிவாசபுரம், தாமரைகுளம், உசேனாபாத், ராஜீவ் நகர், வாலாஜாநகரம், கிருஷ்ணாபுரம் மற்றும் ராவுத்தன்பட்டி ஆகிய கிராமங்களிலிருக்கும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில், 2 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறைகள், ஆழ்துளை கிணறுகள், சுற்றுச் சுவர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் சிறுவர், சிறுமியருக்கான தனித்தனி கழிப்பறைகள் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும்.

*அரியலூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் மரக்கன்றுகள் நடுதல், கசிவு நீர் குட்டைகள் அமைத்தல், மழை நீர் சேகரிப்பு செய்தல் போன்ற பசுமை மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

மொத்தத்தில் அரியலூர் பகுதியில் 13 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு சிமெண்ட்ஸ் நிறுவனம் மூலமாக மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

7.தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில், தொழில் பூங்காக்களை எனது தலைமையிலான அரசு ஏற்படுத்தி வருகிறது. மேலும், தொழில் பூங்காக்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டு வரும் சிப்காட் செய்யாறு தொழில் வளாகத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், முதற்கட்டமாக 1,300 ஏக்கர் நிலப்பரப்பில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளான உட்சாலைகள், தண்ணீர் வழங்குவதற்கான ஏற்பாடுகள், மழைநீர் வடிகால் வசதி, சாலையோர மரங்கள், தெரு விளக்குகள் மற்றும் இதர வசதிகள் உலகத் தரத்தில் அமைக்கப்படும். இப்பணிகள் 2 ஆண்டுகளில் முடிக்கப்படும். தற்போது நான் அறிவித்துள்ள அறிவிப்புகளின் வாயிலாக தொழில் வளர்ச்சி மேலும் மேம்பட வழிவகுக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
tamilnadu chief minister jayalalithaa has announced highest technical center in Tharamani
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X