For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனைவியை கொன்று நாடகமாடிய கணவன்: காட்டிக் கொடுத்த சிசிடிவி கேமரா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை சூளையில் குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியைக் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை வேப்பேரியில், காளயத்தியப்பன் தெருவைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் ஜெயின்(வயது 50). இவர் சவுகார் பேட்டையில், எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது மனைவி பெயர் மஞ்சு(48). இவர்களுக்கு ஆஷிஷ்புஞ்ச்(23) என்ற மகனும், பூஜா(21) என்ற மகளும் உள்ளனர்.

Husband arrest Vepery woman murder case

வெள்ளிக்கிழமையன்று மாலையில் வீட்டில் தனியாக இருந்த மஞ்சு மிகவும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். வீட்டில் குளியலறையில் உள்ள லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 1 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டதாகவும், தகவல் வெளியானது.

கொலை நடந்த வீட்டில் அன்றைய தினம் பூச்சி மருந்து அடித்த ஊழியர் ஒருவர்தான், மஞ்சுவை கொலை செய்து விட்டு, நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக, மஞ்சுவின் கணவர் ஹேம்ராஜ் ஜெயின் போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதை அடிப்படையாக வைத்து போலீசார் முதல் கட்ட விசாரணை தொடங்கினார்கள்.

கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ஆபாஷ்குமார், இணை கமிஷனர் தினகரன், துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர் ஜோஸ்தங்கையா(பொறுப்பு), வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பிரபு, ரங்கசாமி ஆகியோர் நடத்திய விசாரணையில் இந்த வழக்கில் சனிக்கிழமையன்று வீட்டில் பூச்சி மருந்து அடித்த ஊழியரை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அவர் கொலை,கொள்ளையில் சம்பந்தப்படவில்லை, என்று தெரியவந்தது. கொலை நடந்த வீட்டுக்கு எதிரில் உள்ள பள்ளியின் வாசலில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில், கொலையாளியின் உருவம் பதிவாகி இருந்தது. கொலையாளி மாலை 5 மணி அளவில் வீட்டுக்குள் செல்வதும், மாலை 6.24 மணி அளவில், வெளியில் வருவதும் கேமராவில் பதிவாகி இருந்தது. ஆனால் கொலையாளியின் உருவம் சரியாக தெரியாததால், போலீசார் சரியான முடிவுக்கு வர முடியவில்லை.

கேமரா காட்சியை தொழில் அதிபர் ஹேம்ராஜ் ஜெயினிடம் காட்டியபோது, அவர் கேமராவில் பதிவான உருவம் எனக்கு சரியாக தெரியவில்லை, என்று மழுப்பினார். ஆனால் அவரது உறவினர்கள், அந்த உருவம் ஹேம்ராஜ் உருவம்போல தெரிவதாக சொன்னார்கள். ஹேம்ராஜ் இந்த கொலையை செய்திருப்பாரா? என்று போலீசார் சந்தேகம் கொண்டனர். ஆனால் சம்பவம் நடந்ததை பார்த்தபோது, வேறு யாரும் வீட்டுக்கு வந்ததாக தெரியவில்லை. ஹேம்ராஜ் ஒருவர் மட்டுமே வீட்டுக்கு ஆட்டோவில் வந்து சென்றது உறுதிபடுத்தப்பட்டது.

இது பற்றி ஹேம்ராஜின் மகன், மகளிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்களும் முதலில் மழுப்பலாகவே பதில் சொன்னார்கள். ஆனால் போலீசாரின் அதிரடி விசாரணையில், மகன், உறுதியான சில தகவல்களை தெரிவித்தார்.

தந்தை ஹேம்ராஜூக்கும், தாயார் மஞ்சுவிற்கும் தனது திருமண விஷயத்தில் தகராறு ஏற்பட்டதாகவும், வெள்ளிக்கிழமையன்று மாலையில் தனது தந்தை, கடையில் இருந்து வீட்டுக்கு வந்ததாகவும், மகன் கூறினார். மேலும் கொலை செய்ததை, தனது தந்தை ஒப்புக்கொண்டதாகவும், ஒரு தகவலை அவர் கூறினார்.

அதன்பிறகு ஹேம்ராஜிடம் போலீசார் தங்களின் பாணியில் விசாரணை நடத்தினர் ஆனாலும் ஹேம்ராஜ் முரணான தகவல்களை வெளியிட்டார். எனது மனைவியே போய் விட்டாள், வழக்கு எதுவும் வேண்டாம், விட்டு விடுங்கள் என்று போலீசாரிடம் சொன்னார்.

மகனையும், அவரையும் ஒன்றாக வைத்து விசாரணை நடத்திய போதுதான் மனைவியை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார். நகை எதுவும் கொள்ளை போகவில்லை, என்றும் கொள்ளை போனதாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.

குளியலறையில் இருந்த நகைகளை, படுக்கை அறையில் ஒளித்து வைத்து விட்டு, கொள்ளை போனதாக போலீசாரிடம் தெரிவித்தார். அந்த நகைகளையும், போலீசார் படுக்கை அறையில் இருந்து மீட்டனர்.

சிசிடிவி கேமரா காட்சி, மகனின் சாட்சியம் ஆகியவை, மஞ்சுவை, ஹேம்ராஜ்தான் தீர்த்துக்கட்டினார் என்பதற்கு ஆதாரமாக இருந்தாலும், மஞ்சுவை தீர்த்துக்கட்ட பயன்படுத்திய கத்தியை, போலீசார் கைப்பற்ற முடியவில்லை. கத்தியை எங்கே போட்டார் என்பதை, ஹேம்ராஜ் சொல்ல மறுத்தார். இதனால் ஹேம்ராஜ் குற்றவாளி என்பதை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உயர் போலீஸ் அதிகாரிகள் தயங்கினார்கள்.

Husband arrest Vepery woman murder case

இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஹேம்ராஜ் வாக்குமூலம் கொடுத்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தை போலீசார் வீடியோ காட்சியாக பதிவு செய்தார்கள். அதன்பிறகு ஞாயிறன்று இரவுதான் ஹேம்ராஜ்தான் குற்றவாளி என்பதை, உயர் போலீஸ் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

போலீசாரிடம் ஹேம்ராஜ் கொடுத்த வாக்குமூலம்:

மஞ்சுவுக்கும், எனக்கும் திருமணமாகி 25 வருடங்கள் ஆகிறது. பெற்றோர் பார்த்துதான், மஞ்சுவை எனக்கு திருமணம் செய்து வைத்தார்கள். 25 வருட தாம்பத்திய வாழ்க்கையில் மஞ்சு எனக்கு ஒரு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கவில்லை. ஆரம்பத்தில் எனக்கு பெரிய வசதி இல்லை. மஞ்சுவை மணந்த பிறகுதான், எனக்கு வசதி வந்தது. சொந்த வீடு, கடை, கார் என்று ஆடம்பர வாழ்க்கை கிடைத்தது. வீடு, கடை போன்றவற்றை மஞ்சு தனது பெயருக்கு மாற்றிக்கொண்டாள்.நான் சம்பாதித்த பணத்தை நானே சந்தோஷமாக அனுபவிக்க முடியாமல், மஞ்சு குறுக்கே நின்றாள்.

எதற்கெடுத்தாலும் என்னுடன் சண்டை போடுவாள். என்னை கேவலமாக திட்டுவாள். மற்றவர்கள் மத்தியில் கூட என்னை இழிவாக பேசுவாள். இதனால் நாங்கள் வருடக்கணக்கில் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது கூட இல்லை.

எனது மகன், மகளுக்காகவே நான், மஞ்சுவோடு சேர்ந்து வாழ்ந்தேன். எனது மகனின் திருமணத்தைக்கூட என் விருப்பப்படி நடத்த முடியவில்லை. எனது மகனுக்கு கடந்த 2 வருடங்களாக பெண் பார்த்தேன். நான் பார்த்த பெண்களை எல்லாம், வேண்டாம் என்று மஞ்சு தட்டிக்கழித்து வந்தாள். இறுதியில் அவள் எதிர்ப்பை மீறி ஒரு பெண்ணை எனது மகனுக்கு திருமணம் நிச்சயம் செய்தேன்.

வருகிற மார்ச் மாதம் திருமணத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இரவு திருமணத்திற்கு துணிகள் வாங்க கொல்கத்தா செல்ல முடிவு செய்திருந்தோம்.

பெண் வீட்டாருடன், நானும், எனது மனைவியும் கொல்கத்தா செல்ல ரெயில் டிக்கெட்டும் எடுத்து விட்டோம். ஆனால் வழக்கம்போல, மஞ்சு என்னுடன் சண்டை போட்டாள். திருமணத்தை ரத்து செய்யச்சொன்னாள். கொல்கத்தா வருவதற்கும் மறுத்தாள்.

வெள்ளிக்கிழமை மாலை இது பற்றி பேசியபோது, மஞ்சு என்னிடம் சண்டை போட்டாள். நான் எவ்வளவோ சொல்லியும் அவள் கேட்கவில்லை. என்னை கேவலமாக திட்டினாள். இதனால் கொதித்துப்போன நான், அன்னாசி பழம் வெட்டுவதற்கு வாங்கி வைத்திருந்த கத்தியால், மஞ்சுவை வெட்டினேன். கழுத்தையும் அறுத்து தீர்த்துக்கட்டினேன். பின்னர் ரத்தத்தை கழுவி விட்டு, சடலத்தை வீட்டிலேயே போட்டு, விட்டு கதவை பூட்டிவிட்டு ஆட்டோ பிடித்து எனது கடைக்கு வந்து விட்டேன்.

பின்னர் வீட்டுக்கு வந்து பூச்சிமருந்து அடித்த ஊழியர் மஞ்சுவை கொன்று விட்டு, நகைகளை கொள்ளை அடித்துச் சென்று விட்டதாக நாடகமாடினேன். ஆனால் எனது மகனிடம் மட்டும் உண்மையைச் சொல்லி விட்டேன். வாழ்க்கை முழுவதும் மஞ்சு என்னை அழ வைத்து விட்டாள் என்று ஹேம்ராஜ் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.

குடும்ப பிரச்சினையில் கணவனே கழுத்தறுத்து கொன்று நாடகமாடிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Manju’s husband Hemanth Raj Was arrested by police. The investigation into the murder of a home-alone woman at Vepery, which was initially considered as the handiwork of robbers, has taken a surprise turn with the police now having reasons to suspect the victim’s husband.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X