எனது மடியில் கனமில்லை...அதனால் பயமில்லை.. கொடநாடு கொலை தொடர்பாக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விளக்கம்

Subscribe to Oneindia Tamil

கோவை: போயஸ் கார்டன் கார் டிரைவராக பணியாற்றிய கனகராஜ் மர்மமான முறையில் சாலை விபத்தில் பலியானார். அது தொடர்பாக எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே அவர், எனது மடியில் கனமில்லை அதனால் மனதில் பயமில்லை, போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்புக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இது வரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரால் தேடப்பட்ட ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில் திடீரென மர்மமான முறையில் பலியானார்.

கனகராஜின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். இதுதொடர்பாக கனகராஜின் அண்ணன் தனபாலை விசாரணைக்கு வருமாறு சம்மன் அனுப்பினர். அதன்படி கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் வைத்து நேற்று 4 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே கொடநாடு பங்களாவில் இருந்து கொள்ளை போன பொருட்கள் குறித்தும், கொள்ளை மற்றும் கொலை சம்பவத்தில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளது என்றும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதில் கனகராஜ், கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க.எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பில் இருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியை விசாரணைக்கு ஆஜராகுமாறு ஆத்தூர் போலீசார் சம்மன் கொடுத்தனர்.

எப்படி பழக்கம்?

அதை பெற்றுக் கொண்ட ஆறுக்குட்டி, இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசுகையில், கனகராஜ் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு எனக்கு அறிமுகமானார். சென்னையில் உள்ள எனது நண்பர் ஒருவரது நிறுவனத்தில் கனகராஜ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நான் சென்னை சென்ற போது எனது காரின் மாற்று டிரைவராக அவர் வந்தார். அப்போது கனகராஜ் என்னிடம் நான் ஏற்கனவே போயஸ் தோட்டத்தில் வேலை பார்த்திருக்கிறேன் என்று கூறி பழகினார். நான் சென்னை சென்ற போதெல்லாம் எனது காருக்கு மாற்று டிரைவராக அவர் வேலை பார்த்தார்.

எனது இருப்பிடத்தைப் போட்டுக்கொடுத்த கனகராஜ்

அ.தி.மு.க. இரு அணியாக பிரிந்து எம்.எல்.ஏ.க்களை இழுக்க பேரம் நடந்த நேரத்தில் நான் இருக்கும் இடத்தை கனகராஜ் மாற்று அணியினருக்கு தெரிவித்தார். இதில் எனக்கு அவர் மீது வருத்தம் ஏற்பட்டது. எனவே உடனே அவரை நிறுத்தி விட்டு வேறு டிரைவரை நியமித்தேன். அதோடு கனகராஜூடனான பேச்சையும் நிறுத்தி 2 மாதங்களுக்கு மேலாகி விட்டது.

உதவி கேட்ட கனகராஜ்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேரத்தில் நான் சென்னையில் இருந்த போது கனகராஜ் எனது டிரைவரிடம் பேசி கார் பழுதாகி விட்டதாக கூறி உதவி கேட்டிருக்கிறார். அதனடிப்படையில் எனது டிரைவர் உதவி செய்துள்ளார். மற்றபடி கனகராஜை பற்றி வேறு எதுவும் எனக்கு தெரியாது.

மடியில் கனமில்லை

போலீசார் நேற்று இரவு தான் என்னிடம் நாளை நேரில் விசாரணைக்கு வருமாறு சம்மன் கொடுத்தனர். ஆனால் வரும் 17ம் தேதி மதுரை பெரியகுளத்தில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதிருப்பதால் இன்றே விசாரணைக்கு வருகிறேன் என போலீஸ் அதிகாரிகளிடம் கூறினேன். அவர்களும் வாருங்கள் என கூறியதன் அடிப்படையில் சேலத்துக்குச் செல்கிறேன். எனது மடியில் கனம் இல்லை. எனவே எனக்கு எந்த பயமும் இல்லை. போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

English summary
I haven't done any mistake and don't need to fear, OPS Support MLA Arukutty open talk.
Please Wait while comments are loading...