For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டியால் என்னால் தூங்க கூட முடியவில்லை: கருணாநிதி ஆதங்கம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: திமுகவின், டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி தகவல் அறிந்த அன்று மதியம் தன்னால் தூங்கமுடியவில்லை என்று திமுக தலைவர் கருணாநிதி ஆதங்கம் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 23-10-2012 அன்று "முரசொலி"யில் ஓர் உடன்பிறப்பு மடல் தீட்டியிருந்தேன்."நீர் இடித்து நீர் விலகுவதா?"என்ற தலைப்பில் வந்த அந்தக் கடிதத்தை மீண்டும் ஒரு முறை நானே நேற்று முழுவதும் படித்தேன். ஏனென்றால் அதைப் படிக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்பட்டது.

I can't sleep after Elangovan interview: Karunanidhi

மதியம் உணவருந்த உட்கார்ந்தேன் கழகத்தின் முதன்மைச் செயலாளர், தம்பி துரைமுருகன் சட்டப் பேரவைப் பணிகளை முடித்து விட்டு என்னைச் சந்திக்க வந்தார். முகம் சரியாக இல்லை. சாப்பிட்டுக் கொண்டே விசாரித்தேன். "டைம்ஸ் ஆப் இந்தியா"ஆங்கில நாளேடு முதல் பக்கத்தில் டி.கே.எஸ். இளங்கோவன் அளித்த பேட்டி பற்றி செய்தி வெளியிட்டது.

அதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கக் காத்திருக்கிறார்கள். தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவையில் உள்ள கழகப் பொருளாளர், தம்பி மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் அது பற்றிக் கேட்டதால், அவர் தான் என்னைத் தலைவரிடம் கலந்தாலோசிக்குமாறு அனுப்பி வைத்தார்" என்றார்.

உடனடியாக நான் கழக அமைப்புச் செயலாளர் தம்பி ஆர்.எஸ். பாரதியை அழைத்து, தலைமைக் கழகத்தின் சார்பில் ஓர் அறிக்கை வெளியிடச் சொல்லிவிட்டு, படுக்கையில் படுத்தேன். தூக்கம் வரவில்லை. மாலையில் ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காகச் செல்ல உத்தேசித்தபடி அங்கும் செல்லவில்லை. ஏன் மனம் சரியில்லை? அதற்கு என்ன காரணம்? அந்த நிலையில் தான் 2012ஆம் ஆண்டு நான் எழுதிய அந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படிக்க நேரிட்டது. அந்தக் கடிதத்திலே உள்ள சில பகுதிகள் வருமாறு :-

நாம் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு தோல்வியைக் கண்டு விட்டோம். நான் அதற்காக துவண்டா போய் விட்டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா?

நான் அடிக்கடி ஒன்றை சொல்லியிருக்கிறேன்; தந்தை பெரியார் அவர்கள் வலியுறுத்திச் சொல்வார் என்று குறிப்பிட்டேஅதைச் சொல்லியிருக்கிறேன். அது தான் கழகத்தின் தாரக மந்திரங்களான கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பவற்றுள் "கட்டுப்பாடு"தான் முக்கியம்! அதைத்தான் விழுப்புரம் முப்பெரும் விழாவில் நமது இனமானப் பேராசிரியர் நினைவூட்டி விரிவாக உரையாற்றினார். திராவிட முன்னேற்றக் கழகம் பல முறை தேர்தலில் தோற்றிருக்கலாம். பல முறை வெற்றி பெற்றிருக்கலாம். வெற்றி, தோல்வி பற்றி நாம் எந்தக் காலத்திலும் முறையே வெறியாட்டம் போட்டதோ, வீழ்ந்து பட்டதாக நினைத்ததோ இல்லை.

ஆனால் கட்டுப்பாடு குலைந்தாலோ சேதாரம் ஏற்பட்டாலோ பிறகு கழகத்தைக் காப்பாற்ற முடியாது! நானும், பேராசிரியரும் இருவருமே மாணவர்களாக இருந்த காலந்தொட்டு, இப்போது வரை ஓய்வின்றி உழைத்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாங்கள் ஓய்வெடுத்துக் கொண்டு கழக அலுவலகத்திற்கு வராமல் இருந்தால் எங்களைக் கேட்பவர்கள் யாரும் இல்லை. இருந்தாலும் கழக அலுவலகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறோம்.கழகம் தற்போது ஆளுங்கட்சி அல்ல.

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், நாம் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாத அளவிற்கு தோல்வியைக் கண்டு விட்டோம்.

நான் அதற்காக துவண்டா போய் விட்டேன்? கழகப் பணி ஆற்றாமல் இருந்து விட்டேனா? இந்த வயதிலும் எதற்காக அன்றாடம் எழுதுகிறேன்? காலையில் சாப்பிடுகிறேனோ, இல்லையோ, எத்தனை நாளிதழ்களைப் படிக்கின்றேன்? அத்தனை பத்திரிகைகளையும் உன்னால் வாங்கிப் படித்திட இயலாது என்பதால், அந்த இதழ்களையெல்லாம் படித்து விட்டு, அதிலே நீ தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளையெல்லாம் - நீ மக்களுக்கு எடுத்துரைத்திடவேண்டியவற்றையெல்லாம் தேடிப்பிடித்து, ஆளுகின்ற அரசைப் பற்றி எப்படிப்பட்ட செய்திகள், விமர்சனங்கள் எல்லாம் வருகின்றன, உச்ச நீதி மன்றத்தில், உயர் நீதி மன்றத்தில் இந்த ஆட்சியினரைப் பற்றி எப்படிப்பட்ட கருத்துக்கள், கண்டனங்கள் எல்லாம் வெளிவருகின்றன என்பதையெல்லாம் தொகுத்து இடுப்பு ஒடிய ஒடிய சலிப்பின்றி தெரிவிக்கிறேன்.

என்னுடைய கருத்துக்களை தமிழகத்திலே உள்ள நாளேடுகள் வேண்டாவெறுப்பாக, ஏதோ நாங்களும் வெளியிட்டோம் என்கிற அளவிற்கு, நடுநிலை நாளேடு என்று காட்டிக் கொள்வதற்காக இரண்டு பத்தி, மூன்று பத்தி என்று வெளியிடுகிறார்கள்.

முழுமையாக வெளியிட்டு, அந்தக் கருத்துக்கள் பரவினால், கழகத்தின் செல்வாக்கு கூடுதலாகி விடுமோ என்று ஆட்சியாளர்களை விட, நமது இதழாளர்களுக்கு அக்கறையும், ஆர்வமும் அதிகமாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் கழகத்திற்கு எதிர்ப்பான செய்திகள் என்றால் அதற்கு எவ்வளவோ முக்கியத்துவம் கொடுத்து, ஒரு வரி விடாமல் வெளியிட்டு, ஆட்சியாளர்களுக்கு அரவணைப்பு காட்டிட, அரசியல் ரீதியாக உதவிட முன் வருகிறார்கள். என்ன காரணம்? நம்மீது உள்ள வெறுப்பு என்பதை விட; ஆட்சியாளர்களைக் காப்பாற்றிட வேண்டுமென்பதிலே உள்ள முனைப்பு தான் காரணம்"

2012இல் நான் கூறியிருந்த நிலை தான் தற்போதும் நீடிக்கிறது. நமக்கு எதிராக "துரும்பு"போன்ற செய்தி கிடைத்தாலும், அதை "தூண்"போல் பெரிதாக ஆக்கி நாளேடுகளில் செய்தி வெளியிடுகிறார்கள். தலைமைக் கழகத்திலே செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன். "தத்துவ மேதை"என்று எங்களால் பாராட்டப்பட்ட தஞ்சை டி.கே. சீனிவாசன் அவர்களின் அருமைச் செல்வன்.நல்ல படிப்பாளி. ஆனால் பத்திரிகைச் செய்தி, பேட்டி என்றால் அவருக்கு ஒரு ஈடுபாடு.

அதனால் தான் அவரது விருப்பம் போலவே, கடந்த முறை அமைப்புச் செயலாளராக இருந்தவரை தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் என்ற பதவியிலே நியமித்தோம். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு உண்டு அல்லவா? அதை மீறக் கூடாது அல்லவா? செய்தியை வெளியிட்ட அந்த "டைம்ஸ் ஆப் இந்தியா"பத்திரிகைக்கே, அவர் வரம்பு மீறியிருக்கிறார் என்பது தெரிந்ததால் தானே, முதல் பக்கத்திலும், எட்டாவது பக்கத்திலும் அவரது பேட்டியை மிகப் பெரிதாக வெளியிட்டுள்ளது.

தலைமைக் கழகத்தினால் செயற்குழுவையோ, பொதுக்குழுவையோ கூட்டி, அதிலே கலந்துரையாடி அதன் பின்னர் வெளியிடப்பட வேண்டிய செய்திகளை யெல்லாம், அந்தப் பேட்டியிலே சர்வ சாதாரணமாக டி.கே.எஸ். இளங்கோவன் கூறியோ, கூறாமலோ, அந்த ஆங்கில நாளேடு அதனைப் பெரிதாக வெளியிட்டுள்ளது. அது போதாதா நம்முடைய ஊடகங்களுக்கு! கழக முன்னணியினரை எல்லாம் சூழ்ந்து கொண்டு விட்டார்கள்.

தொலைக் காட்சியிலே அவரது பேட்டி! மாலை மலர் இதழிலே அவருடைய பேட்டி! அந்தப் பேட்டி தவறானது, தலைமைக் கழகத்திற்கு சம்மந்தம் இல்லாதது என்று நாம் நேற்று மதியமே அறிக்கை விடுத்த பிறகும், இன்று காலையில் வெளிவந்த (ஒரு தமிழ்) நாளிதழின் முதல் பக்கக் கொட்டை எழுத்து செய்தி என்ன தெரியுமா? "கூட்டணி பேர விவகாரத்தில் தி.மு.க. வில் மோதல் வெடித்தது!ஸ்டாலின் ஆதரவாளர் பேட்டியால் கருணாநிதி கோபம்"என்ற தலைப்பில் இளங்கோவனின் புகைப்படத்தையும் வெளியிட்டு செய்தி வெளியிட்டிருக்கிறார்கள்.

உண்மையில் சொல்லப் போனால், டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியை என் கவனத்திற்குக் கொண்டு வந்ததே, தம்பி ஸ்டாலின் தான். ஆனால் "நாளிதழ்" "ஸ்டாலின் ஆதரவாளர் பேட்டியால் கருணாநிதி கோபம்"என்று தலைப்பிட்டு செய்தி வெளியிடுகிறது என்றால் எந்த அளவுக்கு அவர்களுக்கு நம்மீது காழ்ப்புணர்வு இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது அல்லவா?. இவ்வாறு கருணாநிதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

English summary
I can't sleep after got to know about DMK's Elangovan interview, says Karunanidhi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X