மறைந்த என் கணவரின் கனவுகளை நனவாக்க வேண்டும்... தமிழக சிஆர்பிஎஃப் வீரரின் மனைவி உருக்கம்

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த சிஆர்பிஎஃப் சங்கரின் கனவுகளை நிறைவேற்றுவதே தனது விருப்பம் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் உயிர் தியாகம் செய்த மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த சங்கரின் கனவுகளை நிறைவேற்றுவதே எனது விருப்பம் என்று அவரது மனைவி எழிலரசி தெரிவித்துள்ளார்.

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சுக்மா மாவட்டத்தில் நக்சல் தடுப்பு நடவடிக்கையில் சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த சனிக்கிழமை ஈடுபட்டிருந்தனர்.
அச்சமயம், அங்கு மறைந்திருந்த நக்சல்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 12 வீரர்கள் பலியாயினர். அவர்களுள் தமிழக வீரரும் ஒருவர்.

உயிர்த் தியாகம் செய்த 12 பேரில் விழுப்புரம் மாவட்டம் கலுமரத்தைச் சேர்ந்த சங்கர் (37) என்பவரும் ஒருவர். அவரது ஆசைகள், கனவுகள் ஆகியன குறித்து அவரது மனைவி எழிலரசி (32) தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

3 மாதங்களுக்கு முன்னர்...

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் சங்கர் குடும்பத்தினரை சந்திக்க பணி விடுப்பில் வந்தார். மேலும் வரும் மே மாதம் எங்களது மகளுக்கு 3 வயது முடிவடைய போகிறது. மேலும் குழந்தைகளுக்கு விடுமுறை காலம் என்பதால் மே மாதமும் விடுப்பில் வருவதாக அவர் கடந்த முறை பயணத்தின்போது தெரிவித்து விட்டு சென்றார்.

பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு பணியில்...

சத்தீஸ்கர் மாநிலத்துக்கு பணியிட மாறுதலில் செல்வதற்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு பாதுகாப்பு அளிக்கும் குழுவில் ஓராண்டு பணியாற்றியுள்ளார்.

சத்தீஸ்கருக்கு வேண்டாம்

மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கருக்கு போக வேண்டாம் என நான் அவரிடம் தெரிவித்திருந்தேன். எனினும், தனக்கு விரைவில் பதவி உயர்வு கிடைத்துவிடும் என்றும் அதன்பின்னர் உயர் அதிகாரிகளிடம் கேட்டு டெல்லிக்கு பணி மாறுதல் பெற்று விடுவேன் என்று அவர் தெரிவித்தார். ஆனால் அதற்குள் எல்லாம் தவிடுபொடியாகிவிட்டது.

தமிழக அரசு பணி

நான் வேதியியலில் பட்டம் பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் எனக்கு அரசு பணி வழங்குவதாக உறுதி அளித்துள்ளனர். அதன் பின்னர் கணவரின் விருப்பப்படி எனது குழந்தைகளை படிக்க வைத்து ஆளாக்க வேண்டும்.

 

 

வீடு கட்ட வேண்டும்

சொந்தமாக வீடு கட்ட வேண்டும், குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும் ஆகியவற்றை சத்தீஸ்கர் செல்வதற்கு முன்னர் எனது கணவர் என்னிடம் வலியுறுத்தினார். அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற நான் பாடுபடுவேன் என்றார்.

 

 

English summary
I have to fulfill my husband's dream who was shot dead in Chattisgarh Naxal Attack on last saturday.
Please Wait while comments are loading...