For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அவரோட 'அம்மா' ஆணைக்கே நான் பயந்தது கிடையாது... பன்னீர்செல்வத்துக்கு கருணாநிதி பதிலடி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அம்மா கோபித்துக்கொள்வார் என்ற அச்சத்தால்தான் முதல்வர் பன்னீர்செல்வம் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட செல்லவில்லையா என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

மழை நிவாரணப் பணிகள் பற்றி 26-10-2014 அன்று நான் எழுப்பிய கேள்விகளுக்கு இந்நாள் தற்காலிக முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 28-10-2014 அன்று அதிகாரிகளையெல்லாம் அழைத்து விவாதித்து விட்டு 29-10-2014 அன்று பதில் அளித்திருக்கிறார். அந்த அறிக்கையின் துவக்கத்திலேயே நிவாரண நடவடிக்கைகள் எடுத்ததாகவும், அதைப் பற்றி நான் அறிந்து கொள்ளாமல் ஒரு வெற்று அறிக்கையை அரசியல் ஆதாயம் தேட வேண்டுமென்ற எண்ணத்தில் வெளியிட்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

I will not going to stop issuing press release: Karunanidhi Counters CM Pannerselvam

நான் வெளியிட்டது "வெற்று அறிக்கை" என்கிறார் முதலமைச்சர். தமிழ்நாட்டு மக்கள் பெருமழை, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், விவசாயிகள் எல்லாம் பயிர்கள் மூழ்கிக் கிடப்பதால் வேதனையுற்றிருக்கிறார்கள், அவர்களுக்கு உதவிட வேண்டுமென்று நான் அறிக்கை வெளியிட்டது, பன்னீர்செல்வம் மொழியில் "வெற்று அறிக்கை"யாம்!

தமிழ்நாட்டிலே பெருமழை பெய்யத் தொடங்கியது 17-10-2014. மழை பெய்யத் தொடங்கி சுமார் ஒரு வாரக் காலத்திற்குப் பிறகு தான், நிவாரணப் பணிகள் நடைபெறவில்லையே என்ற வேதனையை நான் தெரிவித்திருந்தேன். நான் என்னுடைய அறிக்கையில் முதல் பத்தியிலேயே "முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ, அதிகாரிகளோ ஓரிருவரைத் தவிர வெள்ளப் பகுதிகளைப் பார்வையிடவில்லை" என்று தான் எழுதியிருக்கிறேன். ஆனால் பன்னீர் செல்வம் "கருணாநிதி தனது அறிக்கையில் அமைச்சர்களோ, அதிகாரிகளோ வெள்ளப் பகுதிகளைப் பார்வை யிடவில்லை என்று கூறியிருக்கிறார்" என்று உண்மையை மறைத்து அறிக்கை விடுத்துள்ளார்.

20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் அனுப்பப்பட்டு, அவர்கள் அங்குள்ள வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டதாகவும் பன்னீர் செல்வம் தெரிவித்திருக்கிறார். வெள்ளப் பாதிப்பு எப்போது ஏற்பட்டது? 20 மாவட்டங்களுக்கு உயர் அதிகாரிகள் என்றைக்குச் சென்றார்கள்? நான் என்னுடைய அறிக்கையில் அதையும் மறைக்க வில்லை. "எந்தவிதமான நிவாரணப் பணிகளும் நடைபெறவில்லை என்று அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் அடுக்கடுக்காகப் புகார் கூறிய பிறகு, அதிமுக அரசுக்கு திடீரென ஞானோதயம் ஏற்பட்டு 31 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அனுப்பினார்கள்" என்றும் தெரிவித்திருக்கிறேன். ஆனால் அந்த அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்த அறிவிப்பே 25ஆம் தேதி தான் வந்தது.

அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறியதாக தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிக்கையிலே தெரிவித்திருக்கிறார். நான் என்னுடைய அறிக்கையில் "திண்டுக்கல் மாவட்ட அமைச்சர் நத்தம் விசுவநாதன் வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிடவோ, நிவாரணப் பணிகளைக் கவனிக்கவோ இதுவரை வரவில்லை"" என்று குறிப்பிட்டிருந்தேன். நான் அறிக்கை விட்ட பிறகு தான் அந்த அமைச்சர் வெள்ளப் பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிடச் சென்றார் என்பதும், அவர் தாமதமாக வெள்ளப் பாதிப்பு பகுதிகளைப் பார்க்க வந்தார் என்பதற்காக அந்தப் பகுதி மக்களே, அவரை உள்ளே வரவிடாமல் முற்றுகையிட்டார்கள் என்பதும் நாளேடுகளில் புகைப்படத்தோடு செய்தி வந்ததா? இல்லையா?

"ஒரு வாரமாக குடிநீர் இல்லை, மின்சாரம் இல்லை, ஏன் நீங்கள் வரவில்லை" என்று அந்தப் பகுதி மக்கள்; அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் கேட்டது உண்டா இல்லையா? மக்கள் அவ்வாறு எதிர்த்ததால், அமைச்சர் பாதியிலேயே திரும்பி வந்ததாக ஏடுகள் செய்தி வெளியிட்டதை முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் பார்க்கவில்லையா? அதுபோலவே வெள்ளப் பாதிப்பை பார்வையிடத் தாமதமாக வந்த அ.தி.மு.க. சட்டப் பேரவை உறுப்பினரை கிராம மக்கள் முற்றுகை யிட்டதாக வந்த செய்தியையும் முதலமைச்சர் பார்க்கவில்லையா?

இந்த நிலையில் முதல் அமைச்சர் பன்னீர்செல்வம் நான் வெற்று அறிக்கை விடுவதாகவும், அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்ததாகவும் "புரூடா" விட்டால், அந்த மக்கள் என்ன எண்ணுவார்கள்? ஏன் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மதுரை வரை சென்றாரே, அவர் வெள்ளப் பகுதிகளைப் பார்வையிட வருவார் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எல்லாம் காத்திருந்தார்களே, அங்கே செல்லாமல் அவசர அவசரமாகப் பன்னீர்செல்வம் சென்னை திரும்பினாரா இல்லையா? ஏன் அந்த மக்களைப் பார்க்கவில்லை? மக்களைப் போய்ப் பார்த்தால், முன்னாள் முதல் அமைச்சர் "அம்மா" கோபித்துக் கொள்வாரோ என்ற பயம் தானே? முதல்வர் பன்னீர்செல்வம் மக்களைப் பார்க்க வராததால் அவர்கள் ஏமாற்றமடைந்ததாக செய்தி ஏடுகளில் வந்ததா இல்லையா? அதையும் முதலமைச்சர் பார்க்கவில்லையா?

டெல்டா மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக என்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டது தவறு என்றும் பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். "தினமலர்" - தி.மு.க. நாளேடு அல்ல; அந்த ஏட்டில் 26-10-2014 அன்று 3வது பக்கத்திலேயே, "காவிரி டெல்டா பகுதிகளில் 6 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின"" என்ற தலைப்பில், "நாகை மாவட்டம், சீர்காழி அருகே கருவிழந்தநாதபுரம் கிராமத்தில், தொடர் மழையால், தண்ணீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்கள்" என்ற அடிக்குறிப்போடு புகைப்படத்தையும் இணைத்து செய்தி வந்திருக்கிறதே, அந்தச் செய்தியும் தவறா?

சென்னை மாநகராட்சி மேயர் பற்றியும் தன் அறிக்கையில் இந்நாள் முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார். 29-10-2014 தேதிய "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு "Death in ditch Corporation's Fault - Family of 48 year old who died after fall on Road says Negligence of Authorities to blame" என்ற தலைப்பில் ஒரு பக்கத்திற்கு குணசேகரன் என்பவர் சாலையிலே உள்ள பள்ளத்திலே விழுந்து இறந்த கொடுமை குறித்து செய்தி வெளியிட்டிருக்கிறதே, அதற்கு இந்நாள் முதல் அமைச்சரின் பதில் என்ன? இது தான் சென்னை மாநகராட்சி சாலைகளிலே உள்ள பள்ளங்களை நிரப்பிய இலட்சணமா?

குணசேகரனின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் அளிக்க வேண்டாமா? சென்னை மாநகராட்சியின் மூன்றாண்டு சாதனைப் பட்டியலுக்கும், முதலமைச்சர் பன்னீர்செல்வம் வக்காலத்து வாங்கியிருக்கிறார். கடந்த ஒரு வார கால தமிழ், ஆங்கில நாளேடுகளைப் புரட்டிப் பார்த்தாலே, அவற்றில் வெளி வந்துள்ள புகைப்படங்களிலிருந்தே சென்னை மாநகராட்சி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்து கொள்ளலாம்.

திருவாரூரில் கமலாலயம் குளத்தின் வடகரை சுவர் இடிந்து விழுந்தது பற்றி யும், அந்தப் பணி தாமதப்பட்டால் என்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து நிதி ஒதுக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்த பிறகும் இன்றளவும் பணி முழுமை அடையவில்லை என்றும், இதற்கிடையில் மேல்கரை சுவரும் இடிந்து விழுந்து விட்டதாகத் தகவல் வந்திருப்பதாகவும் என்னுடைய அறிக்கையிலே தெரிவித்திருந்தேன். அண்மையில் திருவாரூர் சென்ற கழகப் பொருளாளர் தம்பி மு.க. ஸ்டாலின் உடைந்த அந்தச் சுவர்களைப் பார்த்ததோடு, மாவட்ட ஆட்சித் தலைவரைச் சந்தித்து அதுபற்றி பேசி விட்டு வந்திருக்கிறார்.

அதற்கு பதிலளித்த தற்காலிக முதலமைச்சர் பன்னீர்செல்வம், வடக்கு கரை பகுதியைச் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டு விட்டதாகவும், மேல்கரையைப் பொறுத்தவரை ஒப்பந்தப் புள்ளிகள் கோரப் பட உள்ளன என்றும் பதிலளித்திருக்கிறார். வடக்குப் பக்க கரை இடிந்து விழுந்தது, 2012ஆம் ஆண்டு அக்டோபர் 23ஆம் தேதி. சரியாக இரண்டு ஆண்டுகளாகி விட்டன. ஆனால் அந்தப் பணிகள் இன்னும் முடியவில்லை என்கிற போது, இந்த ஆட்சியினர் எந்த அளவுக்கு வேகமாகப் பணியாற்றுகிறார்கள் என்பதற்கு இது ஓர் உதாரணம் போதாதா?

நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பன்னீர்செல்வம் அறிக்கையில் குறிப்பிடுகிறார். நான் என்னுடைய 26ஆம் தேதிய அறிக்கையில் "மாநில அரசின் சார்பில் இதற்காகத் தனியாக சிறப்பு நிதி இருக்கும், நிதித் துறைச் செயலாளரை அழைத்துப் பேசினால் அவர் நிவாரண நிதிக்காக முதற்கட்டமாக அறிவிக்க உதவுவார், ஓரிரண்டு நாட் களில் அந்த நிதியை ஒதுக்கிட ஆவன செய்ய வேண்டும்" என்று நான் யோசனை கூறிய பிறகு தான், இந்நாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் 29ஆம் தேதியன்று 60 கோடி ரூபாய் நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறாரே தவிர, இந்த அறிவிப்பைக் கூட தமிழக அரசு தானாகவே முன் கூட்டியே யோசித்து அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை.

நான் எனது அறிக்கையில் இந்நாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் மீது கோபத்தைக் கூடக் காட்டவில்லை. பெரு மழை பெய்துள்ள நேரத்தில், விவசாயிகள் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கிற வேளையில் தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமென்ற யோசனையைத் தான் தெரிவித்திருந்தேன். அதையே முதலமைச்சர் பன்னீர்செல்வம் அது வெற்றறிக்கை என்றும், அரசியல் ஆதாயத்திற்காக பொய்க் குற்றச்சாட்டுக்கள் கூறுவதை கருணாநிதி நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் ஆணை பிறப்பித்திருக்கிறார். பாவம் பன்னீர்செல்வம்; அவருடைய "அம்மா"வே இப்படி பல ஆணைகளைப் பிறப்பித்தும், தமிழகத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நான் குரல் கொடுப்பதை, அறிக்கை விடுவதை 75 ஆண்டுகளாக நிறுத்தவில்லை என்கிற போது, இவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டா நிறுத்தி விடப் போகிறேன்?

இவ்வாறு கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
The DMK leader Karunanidhi alleged that paddy crops raised in six lakh acres in the delta region were submerged in water and criticised the ministers and officials for not visiting the affected areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X