For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினி என்ன செய்துள்ளார் என்பதை மக்கள் யோசிப்பார்கள்- அரசியலுக்கு வரமாட்டார் - ம. நடராஜன் தடாலடி

ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என 1996ல் இருந்து 1000 முறை சொல்லிவிட்டார். ஆனால் அரசியலுக்கு அவர் வந்துவிட்டாரா? அப்படியே வந்தாலும் அவர் ஜெயிக்க முடியாது என சசிகலாவின் கணவர் ம.நடராஜன் கூறியுள்ளார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: ரஜினி அரசியலுக்கு வருவதாக 1000 முறை சொல்லிவிட்டார். அப்படியே வந்தாலும் அவர் ஒருபோதும் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என சசிகலாவின் கணவர் நடராஜன் நியூஸ் எக்ஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.

சசிகலாவின் கணவர் ம. நடராஜன் நியூஸ் எக்ஸ் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அதிமுகவின் இரு அணிகள் இணைப்பு, ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். அதிலிருந்து....

If Rajini comes to politics he never succeeds said M. Natarajan

கேள்வி: சசிகலா குடும்பம் பலிகடா ஆக்கப்படுகிறதா?

பதில்: ஆமாம். உதாரணமாக, ஜெயா டிவிக்கு அப்லிங் உபகரணம் வாங்கிய வழக்கில் சசியும் சசி குடுபத்தாரும் சிக்க வைக்கப்பட்டனர். ஆனால் ஜெயா டிவி மட்டுமா இதைச் செய்தது? எல்லாரும் செய்தாலும் சசிகலா என்பதால் அவர் சிக்கலில் மாட்டிவிடப்படுகிறார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், திமுக மாநிலத்தில் ஆட்சியில் இருந்தாலும், தற்போது பாஜக ஆட்சியில் இருந்தாலும் சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த திவாகரன், தினகரன், பாஸ்கரன் என எல்லாரும் குறிவைத்துத் தாக்கப்படுகிறார்கள்.

இது ஜெயலலிதாவுடன் இருந்த காரணத்துக்காக மட்டும் அல்ல. இவர்கள் அரசியல் அதிகாரத்தின் பின்னணியில் இருக்கிறார்கள். அது எப்போது வேண்டுமானலும் பகிரங்கமாக வெளிப்படும் என்கிற காரணத்துக்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது.

கேள்வி: அதிமுக இப்போது மூன்று அணிகளாக பிளவுபட்டுக் கிடக்கிறதே...

பதில்: அதிமுகவில் மூன்று அணிகள் என்று சொல்ல முடியாது. தினகரன் விஷயத்தை எடுத்துக்கொண்டால் அது உள்கட்சி விவகாரம். அவ்வளவுதான். இரு அணிகளும் விரைவில் இணைந்துவிடும்.

கேள்வி: உள்கட்சி விவகாரமா அல்லது அதிகாரத்தை கைப்பற்ற நடக்கும் போராட்டமா?

பதில்: உள்கட்சி விவகாரமாகத்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கேள்வி: அதிமுகவின் மூன்று அணிகளும் பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துக்குத் தனித்தனியாக தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளன. இதன் மூலம், பாஜக புறவாசல் வழியாக அதிமுகவையும் தமிழகத்தையும் ஆண்டுகொண்டுள்ளது என எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டு உண்மையாகிறதே.

பதில்: பாஜக எப்படி புறவாசல் வழியே வர முடியும். பிரதமரும் நிதி அமைச்சர் அருண் ஜேட்லியும் 'இப்படி செய்யுங்கள், அப்படி செய்யுங்கள்' என அறிவுரை வழங்குகிறார்கள். அதை தமிழக அரசு பின்பற்றுகிறது. இதை அறிவுரை என்கிற கண்ணோட்டத்தில் தான் பார்க்க வேண்டும் என நினைக்கிறேன்.

பாஜக மாநில அரசை ஆள்வது என்று சொல்ல முடியாது

தமிழகத்தில் மாணவர் போராட்டம், மற்ற போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்போது மத்திய அரசு கேள்வி கேட்கத்தான் செய்யும். பிரதமர் அமைதியாக உட்கார்ந்திருக்க முடியாது அல்லவா. அதை வைத்து மத்திய அரசு மாநில அரசை ஆள்கிறது என்று சொல்வது முறையல்ல. இதில் நான் அதிகம் சொல்ல விரும்பவில்லை.

கேள்வி: ஓபிஎஸ்சுக்கும் ஈபிஎஸ்ஸுக்கும் மத்திய அரசுக்கு யார் அதிகம் சப்போர்ட் செய்வது என்கிற போட்டி இருப்பது போல தெரிகிறதே?

பதில்: நீங்கள் ஒன்றை தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். பாஜக மேடம் ஜெயலலிதாவுடன் எப்போதும் நட்பாகத்தான் இருந்துள்ளது. 1998ல் வாஜ்பாய் தலைமையில் மத்தியில் அதிமுகவின் ஆதரவுடன் தான் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் சில நிபந்தனைகளுக்கு வாஜ்பாய் ஒத்துக்கொள்ளாத காரணத்தாலும் சுப்பிரமணியன் சுவாமியின் தலையீடாலும் 13நாளில் ஆட்சி கவிழ்ந்தது.

ஜெ.சாகும் வரை காங்கிரஸை எதிர்த்தார்

அதே சுப்பிரமணியம் சுவாமியின் உதவியால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் டீ பார்ட்டிக்கு ஏற்பாடு ஆனது. ஆனால் என்ன நடந்தது? சோனியாவுக்கு ஆதரவு கொடுத்ததும், அவர் காங்கிரஸ் ஆளட்டும். மற்றவர்கள் வெளியில் இருந்து ஆதரவு தாருங்கள் என கூறினார். அந்த நிமிடத்திலிருந்து சாகும் வரை ஜெயலலிதா காங்கிரஸை எதிர்த்தார். இதனால் பாஜகவுக்குத்தான் ஜெயலலிதா ஆதரவாக இருந்துள்ளார்.

கேள்வி:ஜெ.மறைவுக்குப் பிறகும் கருணாநிதியின் உடல்நலக்குறைவாலும் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளதா?

பதில்: இல்லை. இதை நான் மறுக்கிறேன். நேரு இறந்த பிறகு கூட இப்படித்தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக வந்தார். வெற்றிடம் என்று நீங்கள் தான் சொல்லிக்கொண்டு உள்ளீர்கள். நான் அப்படிப் பார்க்கவில்லை. இது அரசியல் வெற்றிடம் அல்ல. ட்ரான்ஸிசன் பீரியட். ஒரு தலைவரில் இருந்து இன்னொரு தலைவர் உருவாகும் நேரம்.

கேள்வி: இந்த ட் ரான்ஸிசனை பாஜக பயன்படுத்தப் பார்க்கிறது தானே

பதில்: பயன்படுத்துகிறதா இல்லையா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும். அதிமுக ஒன்றும் தர்மசாலை கிடையாது. எம்ஜிஆர் இறந்தபோது கூட 64 எம்.எல்.ஏக்களை வைத்து மூப்பனாரை முதல்வராக்கப் பார்த்தார்கள். ஆனால் அது நடந்ததா? இல்லையே.

கேள்வி: தமிழகத்தில் பாஜக காலூன்ற நினைக்கிறதா?

பதில்: அதை இப்போதே சொல்ல முடியாது. மேலும் ஒரு முடிவுக்கும் வர முடியாது. தேர்தல் வரட்டும். ஆனால், பாஜக மட்டும் தனிக் கட்சியாக உருவெடுத்து ஆள்வது என்பது தமிழ்நாட்டில் நடக்கவே நடக்காது.

கேள்வி: ரஜினியை பாஜக பயன்படுத்த முனைகிறதா? ரஜினி தனிக் கட்சி தொடங்குவாரா? அரசியலுக்கு வருவாரா?

பதில்: ரஜினி அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 1996ல் அதிகமாக இருந்தது. அதை அவர் தவற விட்டுவிட்டார். இனிமேல் அவர் அரசியலுக்கு வர முடியும் என நம்பவில்லை. ஒருவேளை அப்படியே வந்தாலும் அவர் ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை

கேள்வி: ரஜினி அரசியலுக்கு வருவேன் என அவரது ரசிகர்கள் சந்திப்பில் சொல்லியுள்ளாரே

பதில்: இதுபோல் அவர் ஆயிரம் முறை சொல்லிவிட்டார். அவர் இனி அரசியலுக்கு வரமாட்டார். 1996ல் இருந்த நிலைமை இன்று தமிழ்நாட்டில் இல்லை. மேலும் அதை மக்கள் தான் முடிவு செய்ய முடியும். ரஜினி தமிழக மக்களுக்காக என்ன செய்துள்ளார் என்பதை மக்கள் யோசிப்பார்கள் அல்லவா? அதனால் அவர் அரசியலுக்கு வருவதும் வராததும் மக்களின் முடிவில் தான் இருக்கிறது.

English summary
If Rajini Enters into politics he never succeed and he said 1000 times regarding his political entry. but he never made it possible slams M. Natarajan, Sasikala's husband
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X