For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”டிராபிக்” ராமசாமியை அதிகாலையில் கைது செய்தது ஏன்? – விளக்கம் கேட்கிறது ஹைகோர்ட்!

Google Oneindia Tamil News

சென்னை: கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு, உடல்நலக் குறைவால் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர் "டிராபிக்" ராமசாமியினை அரசுப் பல்நோக்கு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.

சென்னை வேப்பேரியில் ஹோட்டல் உரிமையாளர் காரை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கைது செய்யப்பட்ட டிராபிக் ராமசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

igh court asked about traffic ramasamy arrest…

வேப்பேரி ஜவஹர் நகரைச் சேர்ந்தவர் வீரமணி. இவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவர் வேப்பேரி டாக்டர் அழகப்பா சாலையில் காரில் புதன்கிழமை சென்றுள்ளார். அப்போது, அங்கு டிராபிக் ராமசாமி சாலையை மறித்தவாறு நின்றுகொண்டு, ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதைப் பார்த்த வீரமணி, டிராபிக் ராமசாமியை சாலையின் ஓரம் நின்று பேட்டியளிக்குமாறு கூறினாராம். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். வாக்குவாதம் முற்றவே டிராபிக் ராமசாமி, வீரமணியின் கார் கண்ணாடியை உடைத்து, வீரமணிக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இது குறித்து வீரமணி, வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அந்தப் புகாரின் அடிப்படையில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, தியாகராய நகர் பாண்டிபஜாரில் ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்த டிராபிக் ராமசாமியை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

அதன்பிறகு, சைதாப்பேட்டை 14-ஆவது நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி கயல்விழி முன் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி டிராபிக் ராமசாமி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியை அதிகாலையில் கைது செய்து சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சார்பில் ஜி.ரவிக்குமார் மனுவில், "சட்டத்துக்குப் புறம்பாக சாலைகளில், பொது இடங்களில் வைக்கப்படும் பேனர்கள் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக இருப்பதால் அதை அகற்றும் முயற்சியில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி ஈடுபட்டார்.

புரசைவாக்கத்தில் அதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது அவ்வழியே வந்த வீரமணிக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பாக வீரமணி அளித்த புகாரின் பேரில் வேப்பேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, டிராபிக் ராமசாமியைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

82 வயதாகும் டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரகத்தில் கிருமித் தொற்று இருப்பதால், அவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும். அவரது பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி தெரிவித்த கருத்து மற்றும் உத்தரவில், "டிராபிக் ராமசாமி சாலையில் இருந்த பேனரை கிழித்தது தவறான செயல்தான். அதற்காக அவரை அதிகாலையில் கைது செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? அதிகாலையில் அவரைக் கைது செய்ததை நியாயப்படுத்த முடியாது. அதனால் அரசு தரப்பில் மேலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.

அதில், அதிகாலையில் அவரைக் கைது செய்து, சிறையில் அடைத்ததற்கான நியாயமான காரணங்களைக் குறிப்பிட வேண்டும். டிராபிக் ராமசாமியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் இருந்து உடனடியாக அரசு பன்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றி, உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். வழக்கு விசாரணை 3 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது" என்று நீதிபதி உத்தரவிட்டார்.

English summary
Chennai high court asked the government about Traffic ramasamy’s early morning arrest reason and ordered to change him to multi specialty hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X