For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சியில் சேர ரஜினிக்கு நெருக்கடி தருகிறதா பாஜக? மீடியாவில் உலாவரும் பரபர 'செய்திகள்'!!

By Shankar
Google Oneindia Tamil News

பாஜகவில் சேர தொடர்ந்து ரஜினிக்கு அழைப்பு விடுத்தும், அவர் சேர மறுப்பதால்தான் அவருக்கு எதிராக பல புரளிகள் கிளம்புவதாகவும், அவரது மனைவியின் நிலத்தை எக்ஸிம் வங்கி கையகப்படுத்துவதாக அறிவித்ததாகவும் மீடியாவில் பரபர செய்திகள் உலா வருகின்றன.

மேலும் விரைவிலேயே ரஜினிகாந்த் பாஜகவில் சேரப் போவதாக சிலர் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகளைக் கொளுத்திப் போட்டவண்ணம் உள்ளனர்.

இது ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Is BJP cornering Rajinikanth?

தமிழகத்தில் இன்று வரை சவலைப் பிள்ளையாகவே காட்சி தரும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆள் பிடிக்கும் வேலையில் படு தீவிரமாக உள்ளார் கட்சியின் தலைவர் அமித் ஷா.

தமிழகத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ள ரஜினிக்குதான் அவர் முதலில் வலை வீசினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடியை, ரஜினி வீட்டுக்கே போய் மரியாதை நிமித்தமாக சந்திக்க வைத்தார்.

மோடி பிரதமரான பிறகு ரஜினியுடன் பலமுறை அரசியல் பேசிப் பார்த்துவிட்டார் அமித் ஷா. ஆனால் கடைசிவரை ரஜினி பிடிகொடுக்கவே இல்லை. ஒரு கட்டத்தில் பாஜகவில் சேருவது இயலாத காரியம், ரசிகர்களுக்கு அது உகந்ததாக இருக்காது என்பதையும் அவர் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

இந்த நிலையில் லிங்கா படம் வெளியானது. படம் குறித்து நேர்மறையான கருத்து ஒரு பக்கம் இருந்தாலும், எதிர்மறைச் செய்திகள் வேகமாக பரப்பப்பட்டன. குறிப்பாக பாஜக ஆதரவு ஊடகங்கள் லிங்காவுக்கு எதிராக மிக மோசமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

இன்னொரு பக்கம், ரஜினியின் குடும்பத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவது போன்ற செயல்களும் தொடர்வதாக ரசிகர்கள் கவலைப்படுகிறார்கள். இந்த எக்ஸிம் வங்கி நோட்டீஸ் கூட அதில் ஒன்றுதான் என்பது இவர்கள் கருத்து.

காரணம் எக்ஸிம் வங்கி என்பது மற்ற வணிக வங்கிகள் போன்றதல்ல. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கியில் கோச்சடையானுக்காக ரூ 20 கோடி கடன் பெற்றுள்ளார் அதன் தயாரிப்பாளர் மீடியா ஒன் குளோபல் நிறுவனம். அதற்கு உத்தரவாதம் தந்துள்ளார் லதா ரஜினி. அந்தப் பணத்தை கடந்த ஜூலையில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் செலுத்தவில்லை. வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் செலுத்துவதாக வங்கி அதிகாரிகளிடம் உறுதி தந்துள்ளனர் மீடியா ஒன் தரப்பில்.

இந்த நிலையில், திடீரென்று லதா ரஜினியின் சொத்தை கையகப்படுத்துவதாக வங்கி அறிவித்திருக்கிறது. கடன் வாங்கிய மீடியா ஒன் நிறுவனத்துக்கே ஏராளமான சொத்துகள் உள்ளன. அவற்றை இந்த வங்கி கணக்கில் கொள்ளவில்லை. மாறாக உத்தரவாத கையெழுத்துப் போட்ட லதா ரஜினியின் நிலத்தைக் குறிவைத்திருப்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்கிறார்கள் அரசியல் வட்டத்தில்.

இந்த சூழலில்தான், பாஜகவில் ரஜினி சேரப் போகிறார் என்ற வதந்தியும் கிளம்பியது. ரஜினிக்கு பெரும் தொகை கொடுக்க பாஜக பேசி வருகிறது. அவர் விரைவில் பாஜக தலைவராகிறார் என்றெல்லாம் அந்த வதந்தி பல்கிப் பெருக ஆரம்பிக்க, சமூக வலைத் தளங்களில் ரஜினி ரசிகர்கள் கவலையுடனும் கோபத்துடனும் விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் ரஜினிக்கு நெருக்கமான சிலரிடம் நாம் விசாரித்ததில், "இந்த நிமிடம் வரை பாஜகவில் சேரும் நினைப்போ, அதுபற்றிய பேச்சு வார்த்தையோ கூட ரஜினிக்குப் பிடிக்கவில்லை" என்று உறுதியாகச் சொன்னார்கள். "அவர் எந்தக் காலத்திலும் பாஜக அல்லது வேறு கட்சிகளில் சேரமாட்டார். ஒரு பேச்சுக்குக் கூட அவர் யாரிடமும் இதை விவாதித்ததில்லை. ஒரு வேளை அவர் அரசியலுக்கு வருவதாகவே இருந்தாலும், அவர் தனியாகத்தான் வருவார். இதை அழுத்தமாக பதிவு செய்யுங்கள்," என்றனர்.

English summary
Is BJP cornering Rajinikanth to join the party? Here is an analysis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X