அறை எண் 2008ல் ஜெ., அனுமதி- ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுரை

சென்னை : சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதா அறை எண் 2008ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாக அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன் கூறியுள்ளனர். முதல்வர் நன்றாக ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் மற்றும் உடலில் நீர் சத்து குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை அவரை அதிமுக கட்சியின் மூத்த தலைவர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பொன்னையன் ஆகியோர் மருத்துவர்களை சந்தித்து விசாரித்தனர்.

முதல்வருக்கு ஓய்வு தேவை

செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன் மற்றும் பொன்னையன், அம்மா அவர்கள் நலமாக இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார். அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஓய்வு எடுத்த பின்னர் உரிய நேரத்தில் அவரை மருத்துவர்கள் வீட்டுக்கு அனுப்புவார்கள். தொண்டர்கள் கவலைப்பட வேண்டியது இல்லை என்று தெரிவித்தனர்.

அறை எண் 2008

மருத்துவமனையில் 2008ம் எண் அறையில் இருக்கும் ஜெயலலிதாவைப் பார்க்க எவரும் அனுமதி்க்கப்படவில்லை என்றும் அவரைப் பார்க்க வந்த அமைச்சர்கள், கீழ்தளத்தில் உள்ள பிரமுகர்கள் பகுதி வரை மட்டுமே அனுமதி்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சசிகலா, இளவரசி

அப்பல்லோ மருத்துவமனையில் பார்வையாளர் நேரம் மாலை 4 மணி முதல் 7 மணி வரை என்பதாலும், மேலும் சிகிச்சை முடியும் வரை குடும்பத்தாரை தவிர வேறு எவரையும் நோயாளியின் அறைக்குள் அனுமதிப்பதில்லை என்பது அப்பல்லோ மருத்துவமனையின் நடைமுறை என்பதாலும், ஜெயலலிதாவைப் பார்க்க எவரையும் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவும், இளவரசியும் மட்டுமே உடன் இருந்து கவனித்து கொள்கின்றனர்.

குவியும் கூட்டம்

இந்த 2008ம் எண் அறையில்தான் முக்கிய பிரமுகர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவது வழக்கம். சமீபத்தில் கமல்ஹாசன் இந்த அறையில் தங்கித்தான் சிகிச்சை பெற்றார். அப்பல்லோ மருத்துவமனை இருக்கும் கிரீம்ஸ் சாலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையிம் மூன்று நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன. தொண்டர்கள் குவிந்து வருவதால் அந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிபவர்களை, வீட்டில் இருந்து பணியாற்றுமாறு அந்த நிறுவனங்கள் கேட்டுக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

English summary
Chennai apollo hospital doctors have advised full rest to CM Jayalalitha.
Please Wait while comments are loading...

Videos