For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அப்பாடா…. அம்மா வந்தாச்சு!…. இனியாவது இயங்குமா அரசு நிர்வாகம்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 22 நாட்களுக்குப் பின்னர் விடுதலையாகியுள்ளார். இதனையடுத்து கலங்கரை விளக்கத்தைக் காணாத கப்பலைப் போல தடுமாறிக் கொண்டிருந்த முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சரவை சகாக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேருக்கு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து 29-ஆம் தேதி முதல்வரான ஓ.பன்னீர்செல்வம், உடனடியாக பெங்களூரு சென்று, சிறையில் உள்ள ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பினார்.

Jayalalitha release from Jail… CM OPS relief

தமிழக முதல்வருக்கான அறை, கோட்டையின் முதல் தளத்தில் இருக்கிறது. அங்கே செல்லாமல் ஏற்கெனவே அமைச்சராக இருந்தபோது தனக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே 'முதல்வர்' பன்னீர்செல்வம் உட்காருகிறார்.

மூலவர் இல்லாத கோவில் போல

தலைமைச் செயலகமும், கோட்டை வட்டாரமும் ஏதோ மூலவர் இல்லாத கோவில் போலவே காணப்படுகிறது. காரணம் முதல்வரும், அமைச்சரவை சகாக்களும் சோகத்தில் உள்ளதால் தங்களுக்கான பணியை இன்னமும் தொடங்கவே இல்லை.

துடுப்பில்லாத படகு

முதல்வரான பின்னரும் துடுப்பில்லா படகு போலவே காணப்படுகிறார் ஓ.பன்னீர்செல்வம். அவரது அமைச்சரவை சகாக்களும் சோகம் அப்பிய முகத்துடனே உள்ளதால் அரசு இயந்திரம் முற்றிலும் செயலிழந்துதான் போனது.

கண்டு கொள்ளாத போலீஸ்

செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வரும் வரைக்கும் அதிமுகவினர் அராஜக மறியல்கள், போராட்டங்கள், கடையடைப்புகள் இவற்றை எல்லாம் யாருமே கண்டுகொள்ளவில்லை.

பெங்களூர் டூ சென்னை

முதல்வரும், அமைச்சர்களும் சென்னையில் இருந்து பெங்களூருக்கு தினசரி காவடி எடுப்பதே வேலையாக இருந்தனர். சிறையில் இருக்கும் ஜெயலலிதாவை பார்க்க அனுமதி கிடைக்காவிட்டாலும் வாசலில் சென்று அமர்ந்துவிட்டு வருவதே வேலையாகப் போனது.

மக்கள் பணி என்னவாகும்?

முதல்வர், அமைச்சர்கள் மட்டுமல்லாது அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவருமே பெங்களூரே கதி என்று பழியாகக் கிடந்தனர். இதனால் அதிகாரிகள் பாடுதான் படு திண்டாட்டமாகப் போனது.

முதல் ஆய்வு

பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி ஆன, அக்டோபர் 7-ம் தேதிதான் தலைமைச் செயலாளர், அரசின் ஆலோசகர், போலீஸ் டி.ஜி.பி உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துச் சட்டம் ஒழுங்கு பற்றி ஆய்வு நடத்தினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

முதல் அறிக்கை

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கைகளையும் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் விரும்பமாட்டார்கள். எனவே, கடையடைப்பு, வேலை நிறுத்தம் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம். இது அம்மா அவர்களுக்கு நம்முடைய அன்பை, ஆதரவை, மாறாப் பற்றை, பாசத்தை வெளிப்படுத்தும் செயல்' என்று ஒரு அமைதி அறிக்கைவிட்டார்.

பெயர் பலகை கூட மாறலையே

முதல்வராக இருந்தாலும் அறையின் முன்பு, 'நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்' என்ற போர்டுதான் இன்னமும் இருக்கிறது. அவர் குடியிருக்கும் 'தென்பெண்ணை' பங்களாவிலும் முதல்வர் போர்டுக்கு பதிலாக நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர்' என்றே போர்டு வைக்கப்பட்டுள்ளது. பதவியேற்பு போட்டோ கூட இல்லவே இல்லை.

நாற்காலியில் கூட அமரலையே

முதல்வர் அறையில் முதல்வர் நாற்காலியில் பன்னீர் செல்வம் அமரவில்லை என்பது ஒருபுறம் இருக்க, கடந்த 15-ம் தேதி கோட்டையில் இங்கிலாந்து வர்த்தகம் மற்றும் புத்தாக்கத் துறை அமைச்சர் வின்ஸ் கேபில்ஸ் தலைமையிலான குழுவினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தனர். அந்த சந்திப்பில், நடுநாயகமாக இருக்கும் முதல்வர் நாற்காலியில் பன்னீர்​செல்வம் அமராமல், பத்தோடு பதினொன்றாக அதிகாரிகள் வரிசையில் அமர்ந்திருந்தார்.

கலங்கரை விளக்கத்தை காணலியே

அதிமுகவில் ஜெயலலிதா என்ற தலைமையின் கீழ்தான் அனைத்துமே நடக்கிறது. அவரது கண்ணசைவிற்கு ஏற்பதான் அதிகாரிகளும், அமைச்சர்களும் செயல்படுகின்றனர். கடந்த முறை முதல்வர் பதவியை இழந்த போதும் அவர் சென்னையில் இருந்து முதல்வர், அமைச்சர்களை வழிநடத்தினார். இம்முறையோ ஜெயலலிதா சிறையில் இருப்பதால் முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வம் இன்னமும் ஒரு பைலில் கூட கையெழுத்து போடவில்லை என்கின்றனர். காரணம் கட்சியின் கலங்கரை விளக்கமாக இருக்கும் ஜெயலலிதா இல்லாததுதான்.

ஜெ. இல்லாவிட்டால் எதுவுமே இல்லையா

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்குப் போனதை அடுத்து அதிமுவினர் அனைவருமே 'மெர்சலாகித்தான்' போனார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் அதிமுகவில் இரண்டாம்கட்டத் தலைவர்கள் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு, சாத்தூர் ராமச்சந்திரன் என பலரும் இருந்தனர். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரது மனைவி ஜானகிஅம்மாள் முதல்வராகப் பதவியேற்றார். ஆனால் ஜெயலலிதா ஒன்மேன் ஆர்மியாக இருப்பதால் அவர் சிறைக்குப் போன உடனேயே சகலமும் முடங்கிப் போய்விட்டது.

அம்மா வந்தாச்சு...

ஜாமீனில் ஜெயலலிதா விடுதலையான உடன் அவரை சிறைவாசலில் வரவேற்ற ஓ.பன்னீர் செல்வம் முகத்தில் நிம்மதி பெருமூச்சு பரவியது. அப்பாட அம்மா வந்தாச்சு.... இனி கவலையில்லை என்று சொல்லாமல் சொன்னார் ஓ.பன்னீர் செல்வம். அரசு நிர்வாகமும் தான்!

English summary
The AIADMK chief and former chief minister of Tamil Nadu J Jayalalithaa was on Saturday released from Bangalore jail. After 22 nd day.Chief Mininster O.PaneerSelvam feels big relief.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X