For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வணிகர் நலவாரிய தொகுப்பு நிதி ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்: சட்டசபையில் ஜெ., அறிவிப்பு

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: வணிகர் நலவாரிய தொகுப்பு நிதி ரூ.5 கோடி ரூபாயிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நேற்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

1. வணிகர்களின் நலனுக்காக குடும்பநல உதவி, மருத்துவ உதவி, கல்வி உதவி போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தின் கீழ் பதிவு பெறாமல், உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று வணிகம் செய்யும் சிறு வணிகர்களும் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

jayalalithaa announced Rs 10 crore for trader welfare fund

இந்த வாரியத்தின் தொகுப்பு நிதி 2012ஆம் ஆண்டில் 2 கோடி ரூபாயிலிருந்து 5 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகை மூலம் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எங்களது தேர்தல் அறிக்கையில் 'வணிகர் நலனுக்கு அரசு வழங்கும் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும்' என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.

அதனை நடைமுறைப்படுத்தும் வகையில், வணிகர் நல வாரியத்தின் தொகுப்பு நிதி 5 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாக உயர்த்தப்படும். இதன் மூலம் இவ்வாரியத்தில் உறுப்பினராக உள்ள வணிகர்கள் பயன்பெறுவர்.

2. வணிக வரித் துறையின் அனைத்து சேவைகளும் கணினிமயமாக்கப்பட்டு, "இ-சி டாக்ஸ்" என்ற புதிய மென்பொருள் தற்பொழுது பயன்பாட்டில் உள்ளது. கணினி வசதி இல்லாத சிறு வணிகர்கள் மற்றும் சரக்கு எடுத்துச் செல்வோர் தங்களது மாதாந்திர நமூனாக்களை பதிவேற்றம் செய்வதிலும், எடுத்து செல்லும் பொருட்களுக்கான படிவங்களை கணினி மூலம் பூர்த்தி செய்து அளிப்பதிலும் உள்ள சிரமங்களைக் களையும் வகையில், வணிகர்கள் தங்களது மாதாந்திர நமூனாக்களை கணினியில் பதிவேற்றம் செய்ய உதவியாக, 228 வணிக வரி அலுவலகங்களில் உதவி மையம் ஏற்படுத்தப்படும். இச்சேவைக்கு என வணிகர்களிடம் இருந்து எவ்வித கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது.

மேலும், வணிக வரித்துறையின் புதிய இணையதள சேவைக்கு பதிவு செய்தல், புதிய பதிவுச்சான்று பெறுதல்; வங்கிகளில் வரி செலுத்துவதற்குரிய மின் செலுத்துகைச் சீட்டினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் துறையின் படிவங்களை பதிவிறக்கம் செய்தல் போன்ற சேவைகளை தமிழ் நாடு அரசு கேபிள் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற 486 அரசு மின்சேவை மையங்கள் மூலம், உரிய கட்டணங்கள் செலுத்தி பெறுவதற்கு வழிவகை செய்யப்படும்.

3. பணியாளர்கள் மற்றும் வணிகர்களுக்கு கூடுதல் வசதி செய்திடவும், பணி செய்வதற்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கிடவும், சொந்த கட்டடங்கள் தேவை என்பதைக் கருத்திற் கொண்டு, கடந்த 5 ஆண்டுகளில் 64 அலுவலகங்களை உள்ளடக்கிய 33 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கிருஷ்ணகிரி, நாமக்கல் மற்றும் பழனி ஆகிய 3 இடங்களிலும் 6 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவில், 9 வணிகவரி அலுவலகங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வணிக வரிக்கட்டடங்கள் கட்டப்படும்.

4. பதிவுத்துறையில் ஆவணப்பதிவு தொடர்பான நடைமுறைகள் அனைத்தும் முற்றிலும் கணினிமயமாக்கப்படும். இதற்கான மென்பொருள் தயாரிக்கப்பட்டு, தற்போது சோதனை முறையில் 20 அலுவலகங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து பதிவுத்துறை அலுவலகங்களிலும் இந்த மென்பொருள் விரைவில் அமல்படுத்தப்பட்டு இதன் மூலமே ஆவணப்பதிவுகள் நடைபெற வழிவகை செய்யப்படும்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதால் 'டெம்பிளேட்' வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் ஆவணங்களை தாங்களே தயாரித்து அதனை உரிய சார்பதிவாளர் அலுவலகத்திற்கு இணைய தளம் மூலம் அனுப்பி வைக்க இயலும். ஆவணதாரர்களின் விரல் ரேகைப் பதிவுகள் மூலம் அத்தாட்சி செய்தல் மற்றும் அவர்களின் அலைபேசி எண்கள் மற்றும் ஆதார் எண்கள் ஆகியவற்றைப் பெற்று, குறுஞ்செய்தி எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும்.

இதனால் போலி ஆவணப்பதிவு மற்றும் ஆள் மாறாட்டம் தடுக்கப்படும். பதிவு செய்யப்பட்ட ஆவணங்களின் சான்றிட்ட நகல்களை இணையதளம் வழியாக உரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பித்தால் இணையதளம் மூலமாகவே அவற்றை வழங்க வகை ஏற்படும்.

சொத்துரிமை தொடர்பாக வருவாய்த் துறையால் பராமரிக்கப்படும் விவரங்களை இணையதளம் மூலமாக சரி பார்க்கும் வசதி ஏற்படும். ஆவணப்பதிவு தொடர்பான விவரங்களை இணையதளம் மூலமே வருவாய்த் துறை பார்க்க இயலும் என்பதால், விரைந்து பட்டா மாறுதல் செய்ய இயலும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

English summary
Tamilnadu chief minister jayalalithaa has announced Free welfare assistance centres for traders
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X