For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒன்பது மாத அரசியல் மெளனத்தைக் கலைத்த ஜெயலலிதா!

By R Mani
Google Oneindia Tamil News

தனது ஒன்பது மாத கால அரசியல் மெளனத்தை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு வழியாக இன்று கலைத்து விட்டார்.

கடந்த 2014 செப்டம்பர் 27 ம் தேதி சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதா தனது முதலமைச்சர் பதவியையும், எம்எல்ஏ பதவியையும் இழந்தார். 22 நாட்கள் பெங்களூரு பரப்பனஹாரா சிறையில் இருந்த அவர், அக்டோபர் 17 ம் நாள் உச்சநீதி மன்றம் அளித்த ஜாமீனை அடுத்து 18 ம் நாள் விடுதலையாகி சென்னைக்கு வந்தார்.

Jayalalithaa breaks her 9 month old silence

அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து, அதாவது 248 நாட்கள் கழித்துத் தான் வெளியே வந்தார். அதாவது இந்தாண்டு மே 22 ம் தேதி.

22 ம் தேதி தலைவர்கள் சிலைகளுக்கு மாலை போட்ட கையோடு ஆளுநரைச் சந்தித்தார், 23 ம் தேதி தமிழக முதல்வராகிவிட்டார்.

இந்த ஒன்பது மாத காலத்தில் ஒரு அரசியல் அறிக்கை கூட ஜெயலலிதா வெளியிடவில்லை. இந்தாண்டு மே 11 ம் தேதி கர்நாடக உயர்நீதி மன்றம் ஜெயலலிதா வை சொத்து குவிப்பு ஊழல் வழக்கிலிருந்து விடுதலை செய்த பின்னரும், 23 ம் தேதி முதலைமச்சராக பதவியேற்றப் பின்னரும் கூட அவர் ஒரே ஒரு அரசியல் அறிக்கையை கூட வெளியிட வில்லை.

சரி... இந்தக் கட்டத்தில்தான் அரசியல் அறிக்கைகள் வெளியிடவில்லை. ஆர் கே நகர் இடைத் தேர்தலில் பிரச்சாரத்துக்குப் போகும் போதாவது அரசியல் பேசுவார் என்று எதிர்பார்த்தால் அதுவும் இல்லை. அவர் இரண்டே இரண்டு கூட்டங்களில்தான், தனது வேனில் இருந்தபடி பேசினார். ஒரு வார்த்தை கூட எந்த அரசியல் கட்சியையும் கடிந்து பேசவில்லை. தன்னை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ வேட்பாளரையும், அவரது கட்சியையும் கூட மென்மையான வார்த்தைகளால்தான் விமர்சனர் செய்தார். இன்னும் சொல்லப் போனால் எம்ஜிஆர் மறைந்து, 1988 ஜனவரியில் அஇஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற ஜெயலலிதா இவ்வளவு காலம் ஒரு அரசியல் அறிக்கை கூட, தனது ஜென்ம அரசியல் எதிரி கருணாநிதிக்கு எதிராக ஒரு அறிக்கை கூட விடாமல் இருந்தது இதுதான் முதன் முறை.

ஆனால் ஜெயலலிதா இன்று தனது அரசியல் மெளனத்தைக் கலைத்து விட்டார். மெட்ரோ ரயில் திட்டம் பற்றி திமுக மற்றும் அக்கட்சித் தலைவர் மு.கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். ‘மெட்ரோ ரயில் திட்டத்துக்கு திமுக சொந்தம் கொண்டாட முடியாது. எனது தலைமையிலான அஇஅதிமுக ஆட்சியில்தான் 2003 ல் இதற்கான கருத்துருவும், ஆய்வுப் பணிகளும் துவங்கின. கட்டணங்கள் அதிகமாக இருப்பதற்கு கருணாநிதி போட்ட ஒப்பந்தங்கள்தான் காரணம். கட்டணங்கள் பற்றி பேசுவதற்கும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு சொந்தம் கொண்டாடுவதற்கும் திமுக வுக்கு எந்த அருகதையும், தகுதியும் கிடையாது' என்று நீள்கிறது ஜெயலலிதாவின் அறிக்கை.

இதனுடன் சேர்த்து, நேற்று மெட்ரோவில் பயணித்த ஸ்டாலின், பயணி ஒருவரை கன்னத்தில் அறைந்த விவகாரத்தையும் ஜெ விமர்சித்து விட்டார். ‘எம்எல்ஏ வாக இருப்பவர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஸ்டாலின் கற்றுக் கொள்ள வேண்டும். இனியாவது பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்' என, இந்த விஷயத்தையும் கையில் எடுத்து திமுக வை விளாசித் தள்ளி விட்டார்.

ஒன்பது மாதங்கள் கழித்து ஜெயலலிதா முதன் முறையாக விடுத்திருக்கும் காட்டாமான இந்த அரசியல் அறிக்கை, அம்மா தனது பழைய ஃபார்முக்கு வந்து விட்டாரென்பதை பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தல்கள் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் தனது வாக்கு வங்கிக்கு சற்றும் பாதிப்பு இல்லாமல் பார்த்துக் கொள்ளுவதில் அவர் காட்டும் அக்கறையையே இது காட்டுகிறது.

மெட்ரோ ரயில் திட்டதுத்துக்கு கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்து திமுக நடத்தவிருக்கும் கூட்டங்களும்கூட ஜெயலலிதாவின் இந்த முடிவுக்கு காரணம்தான்.

ஜெயலலிதா மற்றும் தமிழக அரசுக்கு எதிரான திமுக வின் விமர்சனங்களுக்கு பதில் கிடைக்காமல் ஒரு வழிப் பாதையில் அறிக்கைப் போர் நடத்திக் கொண்டிருந்த திமுக வும், அதன் தலைவர் கருணாநிதியும் இனி எதிர் தாக்குதல்களுக்கு தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.

நேற்றைக்கு கூட ஜெயலலிதா ஆர் கே நகர் தொகுதியில் பெற்ற வெற்றி பற்றி கருணாநிதியும், ஸ்டாலினும் கடுமையான அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். இது கள்ள ஒட்டால் பெற்ற வெற்றி என்றே நேற்றைய நக்கீரன் வார இதழின் கவர் ஸ்டோரியை ஆதாரமாக காட்டி ஸ்டாலின் பேட்டி கொடுத்திருந்தார்.

அதற்கெல்லாம் ஜெயலலிதா எந்த பதிலும் கொடுக்கவில்லை. ஆனால் இன்று மெட்ரோ ரயில் விவகாரத்தில் பொங்கியெழுந்து விட்டார்.

எப்படியோ கடந்த ஒன்பது மாதங்களாக சுவாரஸ்யமில்லாமல் இருந்த தமிழக அரசியலை சுறு சுறுப்பாக்க ஜெயலலிதா முடிவு செய்து விட்டார். இதுபற்றி மக்கள் என்ன நினைக்கிறார்களே... ஆனால் மீடியாக்கள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும் உள்ளுக்குள் ஜெயலலிதாவுக்கு நிச்சயம் நன்றி சொல்லியிருப்பார்கள்!

-ஆர்.மணி

English summary
After 9 months silence, CM Jayalalitha finally opened her mouth against the opposition DMK and blasted for their claim as Metro Rail is their achievement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X